IndiaNewsWorld

அமெரிக்க அரசியலில் இந்திய வம்சாவளியினர்

அடையாள அரசியல் அவசியமானதா?

அடுத்த (2020) அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் இரண்டு இந்திய வம்சாவளியினர் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளார்கள். இரண்டுமே பெண்கள். ஒருவர் துள்சி கப்பார்ட், தற்போது அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினராக இருக்கிறார்; மற்றவர் கமலா ஹரிஸ், செனட் சபையில் அங்கத்தவராக இருக்கிறார். இருவரின் எழுச்சியும் அமெரிக்க – இந்தியரைக் குஷிப்படுத்தியிருக்கின்றது. அதற்கும் மேலால் இந்திய இந்துமத அடிப்படைவாதிகளை மேலும் ஊக்கப்படுத்தியுள்ளது.

இவர்களில் துள்சி கப்பார்ட் 700,000 சனத்தொகையைக் கொண்ட அமெரிக்க சமோவன் தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் காங்கிரஸ் பிரதிநிதி. கமலா ஹரிஸ் அமெரிக்காவின் சனத்தொகை கூடிய , 40 மில்லியன் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் செனட்சபை உறுப்பினர். அந்த வகையில் அதிக அரசியல் பலமுள்ளவர் கமலா தான் என்கிறார்கள். இருப்பினும், இந்த இருவரிலும் இந்தியர்களின் ‘செல்வக் குழந்தை’ துள்சி (துளசி) கப்பார்ட் என அறியப்படுகிறது. காரணம் அவர் தன்னை ஒரு பகவத் கீதை பக்தையாகவும் சனாதன தர்மத்தைக் கடைப்பிடிக்கும் தீவிர வைணவ இந்துவாகவும் பிரகடனம் செய்தவர். 37 வயதுடையவர்.

அதே வேளை 54 வயதுடைய கமலா ஹரிஸ் ஒரு பாதித் தமிழர். அவர் தமிழ் நாட்டைச் சேர்ந்த சியாமளா கோபாலனுக்கும் ஜமைக்கா-அமெரிக்கரான டொனால்ட் ஹரிஸ் க்கும் பிறந்தவர். அவர் தன்னை ‘இந்தியராகப்’ பிரகடனம் செய்ய்வில்லை என்பது அமெரிக்க இந்தியர்களுக்கு கொஞ்சம் கடுப்பு என்பதும் இந்தியர்களிடையே அவருக்கு அதிகம் செல்வாக்கு இல்லை என்பதற்கு அதுவும் ஒரு காரணமாக இருக்கலாம். கமலாவையும் அவரது சகோதரியான மாயாவையும் அவர்களது தாயான சியாமளா கோபாலன் அவர்கள், தந்தையின் ஆதரவின்றி,  இந்திய கலாச்சாரத்திலேயே வளர்த்திருக்கிறார் என்றும் சொல்லப்படுகிறது. கமலாஅரசியல் வாழ்வில் தன்னை ஒரு ‘ஆபிரிக்க – அமெரிக்கப்’ பெண்ணாகவே இனம்காட்டி வந்தாலும் அவருடைய உறவு, நட்பு வட்டத்தில் பெரும்பாலும் இந்தியர்களே உள்ளனர் எனவும் சொல்லப்படுகிறது.

அமெரிக்காவிலுள்ள பல இந்துத்துவ அமைப்புக்கள், விஷ்வ ஹிந்து பரிஷத் உட்பட, பெரும்பாலானவை துள்சி கபார்ட்டிற்கே தமது ஆதரவு எனப் பகிரங்கமாக அறிவித்துள்ள வேளை கமலா ஹரிஸின் ஆதரவாளர் பொதுவாக இடதுசாரிய மற்றும் ‘அமெரிக்க’ அடையாளத்தை முன்னிறுத்திய கொள்கைவழிப் பிரசாரங்களில் ஈடுபடுவதால் ஒப்பீட்டளவில் கமலா ஹரிஸுக்கே அதிக ஆதரவு கிடைக்கலாம் என சில இந்திய வம்சாவளி அமெரிக்கர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். குறிப்பாக புளோறிடா, வட கரோலினா, வேர்ஜினியா மற்றும் கமலாவின் சொந்த மாநிலமான கலிபோர்ணியா ஆகிய மாநிலங்களில் கமல ஹரிஸுக்கே அதிக ஆதரவுண்டு.

‘ஷீ த பீப்பிள்’ என்ற அமைப்பு சமீபத்தில் வெள்ளையரல்லாத பெண்களிடையே எடுத்த கருத்துக் கணிப்பில் , ஜனநாயகக் கட்சி வேட்பாளர்களாக வரக்கூடியவர்களெனக் கருதப்படுபவர்களிடையே கமலா ஹரிஸ் முதலாம் இடத்திலும் (71%), பீட்டோ ஓரூக் (டெக்சாஸ்) இரண்டமிடத்திலும் (38%), ஒபாமாவின் உதவி ஜனாதிபதி ஜோ பைடன் மூன்றாமிடத்திலும் (25%) உள்ளார்கள். கமலா ஹரிஸ் தன்னை இந்திய வம்சாவளியினரென இனம் காட்டாதமை அவரது செல்வாக்கிற்குக் காரணமாக அமைந்திருக்குமா என்பதும் இங்கு கேட்கப்படக்கூடிய கேள்வி.

இருப்பினும் அமெரிக்க தேர்தல் வேட்பாளர்களின் வெற்றியை நிச்சயிப்பதில் பணத்திற்குப் பெரிய பங்குண்டு. இந்திய வம்சாவளியினரில் பெரும்பாலானவர் தனவந்தர். அவர்களது ஆதரவைத் தேடி கமலா ஹரிஸ் சென்றேயாக வேண்டும். அதற்காகவே அவர் தன்னை ஒரு ‘இந்திய வம்சாவளி’ யினராகக் காட்டிக்கொள்ள முயற்சிக்கிறார் என்றொரு கதையும் அடிபடுகிறது. தமிழ்நாட்டிற்குப் பயணம் செய்து தன்னுடைய தாத்தவைச் சந்தித்து தன் மண்ணின், கலாச்சாரத்தின் மூல வேர்களை அறிந்துகொண்டேன் என்று அவர் சமீபத்தில் பேசியிருக்கிறார். சேலை அணிவதையும், ‘கோபாலன்’ என்ற பெயரை நடுப் பெயராகப் பாவிப்பதையும், இந்திய வம்சாவளியினரின் நிகழ்வுகளில் அடிக்கடி பிரசன்னமாவதையும் சமீப காலங்களில் வழக்கமாகக் கொண்டிருக்கிறார் கமலா கோபாலன் – ஹரிஸ். சிறுபான்மை இன வேட்பாளரின் வெற்றிக்கு அடையாள அரசியல் முக்கியமென்பதை கமலா கோபாலன் நிரூபிப்பார் போலத்தானிருக்கிறது.

அமெரிக்காவில் குறைந்தது 5 இலட்சம் தமிழர்கள் இருக்கலாமெனக் கருதப்படுகிறது. இருப்பினும் வட-இந்தியரோடு ஒப்பிடுகையில் இவர்கள் கலாச்சார விடயங்களில் ஒழுங்கமைக்கப்பட்ட அளவுக்கு அரசியலில் தமது செல்வாக்கைக் காட்ட முனையவில்லை. மோடி பிரதமரானதற்குப் பின்னர் வட-இந்திய வம்சாவளியினர் அமெரிக்காவில் தமது அரசியல், பண பலங்களை பெருமடங்கு அதிகரித்துள்ளதாகவே தெரிகிறது. கமலா கோபாலன் – ஹரிஸ் இன் தமிழ் அடையாளம் அவர்களைக் கவராது மாறாக துள்சி கபாட்டிற்கே அந்த இந்துத்வ ஆதரவு பலத்தைக் கொடுக்கும். பிரதிபலனாக, துள்சியை ஒரு தீவிர வலதுசாரி இந்துத்வ ஆதரவாளராக இனம்காட்டும்படி இவ்வமைப்புகள் கூக்குரல் போடலாம். அது இதர அமெரிக்கர்களிடையே துள்சியின் ஆதரவைக் குறைக்கவும் கூடும்.

தேர்த்லுக்கு இன்னும் காலமிருக்கிறது. பணமும் பலமும் இணைபிரியாத் தோழர்கள். எதுவும் நடக்கலாம்.

அடையாள அரசியல் இருகரையும் தீட்டப்பட்ட ஒரு கத்தி. அமெரிக்காவில் மட்டுமல்ல கனடாவிலும், இதர நாடுகளிலும் சமீப காலங்களில் அதிகமாகச் சுழற்றப்படும் கத்தி. தப்புபவர்களுக்கு வாழ்த்துக்கள்!