அமெரிக்க அதிபர் தேர்தல் 2020 – ஒரு அலசல்

அமெரிக்க அதிபர் தேர்தல் 2020 – ஒரு அலசல்


கனடா மூர்த்தி

அமெரிக்க அதிபர் தேர்தல் 2020 முடிந்துவிட்டது. இனி முடிவுகள் உறுதிப்படுத்தப்பட வேண்டும். “அடுத்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன் (துணைக் குரல் கமலா ஹரிஸ்)” என்று நம்ப இன்னும் இடம் உண்டா? உண்டு!

 

இதுவரை பைடனுக்கு 220 ட்ரம்ப்பிற்கு 213..
ஆதரவாளர்கள் கார்களுள் இருந்தவாறே ஹோர்ன் அடித்து சத்தமிட்டுக்கொண்டிருக்க… தனக்கான வெற்றி கிடைத்துக் கொண்டிருக்கிறது என்ற நிம்மதியுடன் ஜோ பைடன் ஆற்றிய உரையை கேட்டேன். “முடிவுகளுக்கு இன்னும் நாட்கள் எடுக்கலாம்… ஒவ்வொரு வாக்கும் எண்ணப்படவேண்டும்.” அடுத்து என்ன நடக்குமோ என்ற பதட்டத்துடன்தான் ‘நாம் வெல்லப்போகிறோம்” என்று சொல்லி ஜோ பைடன் கையசைத்தார்.

அதன்பின்னர் வெள்ளை மாளிகையில் வைத்து அதிபர் ட்ரம்ப் தனது கருத்துக்களை வாரி வழங்கினார். (அந்த அறையில் 200 பேர்வரை குழுமியிருந்தார்கள். ட்ரம்பின் குடும்பத்தினரும் சேர்த்தி… ஊடகவியலாளர்களைத் தவிர மற்றவர்கள் முகக் கவசம் அணியவில்லை.) தான் வென்றுவிட்டதாகவே ட்ரம்ப் அறிவித்துச் சென்றார்!!!! வழக்கம்போல பொய்களையும் சொன்னார். தான் வெல்லாத இடங்களையும் தான் வென்றுவிட்டதாகவே சொன்னதுபோல இருந்தது.. (சொன்னார்) மேலும் “ஏமாற்று நடந்ததாகவும்”, “உச்ச நீதிமன்றத்திற்கு போகவிருப்பதாகவும் ” சொல்லத் தவறவில்லை. ட்ரம்பின் பேச்சைக் கேட்கும்போது இன்னும் நிறையப் பிரச்சனைகளை அவர் உருவாக்குவார் என்பதில் சந்தேகமில்லை.டெலிவிஷன்கள் “இனி என்ன நடக்கும் ?”என்று பேசிக் கொண்டிருக்கிறார்கள். அதில், தபால் வாக்குக்கள் முற்று முழுதாக எண்ணப்பட வேண்டும்.. அடுத்து முடிவுகளுக்காக நீதிமன்றம்வரை போகலாம் என்றும் வயிற்றில் புளியைக் கரைத்துக் கொண்டிருக்கிறார்கள். இன்றைய முடிவுகள் ஜோ பைட்னுக்கு சார்பாகவே இருக்கின்றன. அதாவது ஜனநாயகக் கட்சியினருக்கு வெற்றியே.. (ஆனால் இன்னும் வாக்குக்கள் எண்ணவும் வேண்டும், தபால் வாக்குகள் தனி..) ஆனால் நம்மில் பலரும் நினைத்ததுபோல ட்ரம்புக்கான வாக்குகள் குறைந்துவிடவில்லை. மாறாக சரிக்குச் சரியாக வந்திருக்கிறது.

வெள்ளை இனத்தவர்கள் ட்ரம்ப்புக்கு வாக்களித்தார்கள் என சொல்ல முடிந்தாலும் “ட்ரம்ப் வாக்காளர்கள் முழுக்க முழுக்க ‘இனவாதிகள்’ என்று சொல்லிவிடவும் முடியாது” என்றே முடிவுகள் காட்டுகின்றன. காரணம் கறுப்பினத்தவர்கள் பெருமளவு வாழும் இடங்களிலும், இஸ்பானிக்குகள் வாழும் இடங்களிலும் நாம் நினைத்ததைவிடவும் அதிக வாக்குக்களை ட்ரம்ப் பெற்றிருக்கிறார். (டெக்ஸாஸ், ப்ளோரிடா, மிச்சிகன், விஸ்கான்ஸன்…)
“பொருளியல்”, “வேலைவாய்ப்பு”, “பாதுகாப்பு” என பல்வேறு காரணங்களுக்காக பலரும் ட்ரம்புக்கு வாக்களித்ததாகவும் கருதப்படலாம். (கோத்தபாயாவின் அபிவிருத்தி அரசியல் போல?)

கொரோனா பாதிப்பு சாவுகள் அதிகமான இடங்களில்கூட ட்ரம்புக்கு அதிக வாக்குக்கள் கிடைத்தன என்றால் அதற்கு காரணம் ஆராயப்பட வேண்டும். ஒருவேளை நாடு திறக்கப்பட வேண்டும் என்பதாக இருக்கலாம்.

இந்த தேர்தலில் மினிசோடாவில் ஜனநாயகக் கட்சி வென்றது அதிசயமல்ல.. போலிஸ் அராஜகத்திற்கு எதிராக (ஜோர்ஜ் ப்ளெய்ட் கொலை) கறுப்பர்களும், வெள்ளையர்களும் இணைந்து அங்கு ஜனநாயகக் கட்சிக்கு வாக்களித்திருக்கிறார்கள். அதேசமயம்இதுவரை வாக்களிக்கவே செல்லாத வெள்ளையர்களும் திரண்டு சென்று ட்ரம்பின் குடியரசுக் கட்சிக்கு வாக்களித்திருக்கிறார்கள். இந்த யதார்த்தம் புரிந்து கொள்ளப்பட வேண்டும்.வென்றாலும் தோற்றாலும் இந்த தேர்தல் “தேர்வு” ட்ரம்புக்கு ஒரு ரிப்போர்ட் கார்ட்தான்! ஆள் பெயில். ஆனால் ட்ரம்ப் குற்றம் சாட்டுவதுபோல தேர்தலில் தில்லுமுல்லு நடக்கவில்லை. முடிவுகள் அறிவிப்பதில் தாமதங்கள், தபால் வாக்களிப்பு சேர்க்கப்படும்போது முடிவில் மாற்றங்கள் நடப்பது சாதாரணமே.. ஆனால் ட்ரம்ப் தில்லுமுல்லு நடந்ததாகவே சாதிக்கப்போகிறார். அடுத்து வரும் நாட்களில் பல அசிங்கமான நிகழ்வுகளை நாம் கண்டாலும் ஆச்சரியமில்லை.

அடுத்த அதிபர் யாராக இருந்தாலும் அமெரிக்க மக்கள் பிரிந்துவிட்டார்கள். தொடர்ந்தும் பிரிந்தே இருப்பார்கள் என்றும் தோன்றுகிறது!

மனமே உடல் என வாழ்ந்து காட்டிய சாந்தி அம்மா மறைவு!