World

அமெரிக்க அதிபர், உப-அதிபர்களது முதலாவது பேச்சு – ஒரு அலசல்


கனடா மூர்த்தி

இன்று… அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோ பைடன், உப-அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட கமலா ஹரிஸ் முதன் முதலாக மக்களுக்கு உரையாற்றினார்கள்!

ஏதோ “ஒரு கொடுங்கோலன் ஓழிந்தான்” “ஜனநாயகம் மீண்டது” என்பதுபோல அமெரிக்காவின் ஒருபகுதி குதூகலிக்கிறது. ட்ரம்ப் கொடுங்கோலன் அல்லர்.. ஆள் ஒரு கோமாளி. தற்போது அந்தக் கோமாளி வாக்காளர்களால் அகற்றப்பட்டிருக்கிறார். அவ்வளவுதான்.. கோமாளிகளுக்கு இதுதான் நிலை.. விரட்டப்படுவார்கள்.. (ஆனால் ட்ரம்ப் கொழுத்திப்போட்ட Trumpism கொரோனாபோல இன்னும் பல காலம் அமெரிக்காவில் இருக்கும்.)

இன்றைய உரையை உலகத் தலைவர்கள் ஆர்வத்துடன் பார்த்திருப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை. இந்த சரித்திரப் பிரசித்தம் பெற்ற உரை. கோவிட் புண்ணியத்தால் ஒரு சாதாரண பார்க்கிங் லொட்டில் நடந்ததுதான் புதுமை. ஆதரவாளர்கள் மக்கள் காரின் உள்ளே மட்டும்தான் உட்காந்திருப்பார்கள் என நினைக்க மக்கள் வெளியேயும் ஏராளமாகத் திரண்டு நின்று கொண்டார்கள்.

கடந்த சில மாதங்களாக கமலா ஹரிஸை ஜனநாயகக் கட்சி கொள்கை வகுப்பாளர்கள் அடக்கி வாசிக்க வைத்திருந்தார்கள். இன்று அணை உடைந்தது. அமெரிக்க மீடியா கமலா ஹரிஸ் குறித்துத்தான் இன்று அதிகம் பேசுகிறார்கள். கறுப்பு இனத்தின் வாரிசு ஒன்று உப அதிபராக வெள்ளை மாளிகையில் பெருமை சேர்க்கிறது. கறுப்பின பெண்களின் வரலாற்றிற்கு ஒரு புதிய தினம்.

மேடைக்கு முதலில் உப அதிபர் கமலா வந்தார்… வெள்ளை மாளிகைக்கு செல்வதை சொல்வதைப்போல பளபளக்கும் வெள்ளை நிற உடையில் உயரமாகத் தென்பட “குட் ஈவினிங் … குட் ஈவினிங்..”. என்று கூறிக்கொண்டு கண்கள் பளபளக்க பேசப்பேச.. கூடியிருந்த ட்ரைவ் இன் பார்வையாளர்கள் ஆரவாரிக்கிறார்கள். கார் ஹோர்ன்களை ஒலிக்கிறார்கள். கறுப்பு வெள்ளை பிரவுண் வேறுபாடு இல்லாமல் மக்கள் குதூகலிக்கிறார்கள். கறுப்பு பிரவுண், வெள்ளை, ஸ்பானிக் கண்கள் ஆனந்தக் கண்ணீர் விடுகிறதையும் தொலைக்காட்சிக் கமெராக்கள் படம்பிடிக்கத் தவறவில்லை.

ஒரு கறுப்பின பெண்ணான தன்னை உப அதிபராக போட்டியிட வெல்ல தேர்ந்தெடுத்ததற்காக ஜோ பைடனுக்கு சிறப்பாக நன்றி சொன்னார் கமலா. “நான் இந்தப் பதவிக்கு வந்த முதலாவது பெண்ணாக இருக்கலாம்.. நான் கடைசியானவளாக இருக்க மாட்டேன்..” என்று கமலா ஹரீஸ் சொன்னது பல காலங்களுக்கு பல சிறுமிகளுக்கு ஒரு மந்திரம் போல ஒலிக்கும்.

தனது அம்மா சியாமளா கோபாலனுக்கு நன்றி சொன்னார் அமெரிக்க உப அதிபர்! தாங்கள் இந்தியாவிலிருந்து வந்ததையும் கமலா சொல்ல மறக்கவில்லை.

அடுத்து ஜோ வருகிறார் என கமலா அறிவிக்க 78 வயது பைடன் ஒரு பையன் போல ஓடி வந்தார்… அவர் பேசப்பேச மக்கள் குதூகலித்தார்கள். “அமரிக்காவிற்கான மரியாதையை உலகெங்கும் கொண்டுவரப் பாடுபடுவேன்” என்று சொன்னது மறைமுகமாக ட்ரம்பை நினைவுபடுத்தியது.

கமலா பற்றி ஜோ பைடன் சொல்லும்போது “இந்தப் பதவிக்கு ஒரு இமிகிரன்ட் வந்திருக்கிறார்.. ஒரு பெண் வந்திருக்கிறார்.. இதெல்லாம் நடக்காது என்று யாரும் சொல்லவேண்டாம்.. நடத்தியிருக்கிறோம்” என்று பெருமை தேடும் வகையில் சொன்னார். (அதுவும் ட்ரம்பை நினைவு படுத்தியது.) “அவர்களை எமது எதிரிகள் என்று நினைக்க வேண்டாம்… அவர்கள் அமெரிக்கர்கள்தான்” என்று உறுதிப்படுத்தினார்.

அடுத்து கொரோனாவுக்கான போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும். குறைந்த நேரத்தில் அனைவருக்கும் ஆறுதலும் தேறுதலும் தரும் வகையில் பைடனின் பேச்சுக்கள் அமைந்தது. “I pledge to be a president who seeks not to divide but unify, who doesn’t see red states and blue states, only sees the United States.” இப்படியாகத்தான் ஒரு ஜனாதிபதி பேச வேண்டும்..

இதையெல்லாம் கேட்டுவிட்டு கடந்த 4 வருடங்களாக ட்ரம்ப் பொதுவெளியில் பேசிய பாணியை, கருத்துக்களை நினைவில் மீட்டிப் பார்த்தாலே அருவருக்கிறது.