அமெரிக்கா: 2024 ஜனாதிபதி தேர்தலில் ட்றம்ப் பைடனைத் தோற்கடிக்கலாம் – கருத்துக் கணிப்பு
மக்களிடையே பைடனின் ஆதரவு சரிகிறது
2024 இல் நடைபெறவிருக்கும் அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டால் முன்னாள் ஜனாதிபதி ட்றம்பிற்கான ஆதரவு தற்போதைய ஜனாதிபதி பைடனை விட அதிகமாகவிருக்குமென ஒரு கருத்துக் கணிப்பு தெரிவித்துள்ளது. எமேர்ஸன் கொலிஜ் நடத்திய இந்தக் கருத்துக் கணிப்பில் ட்றம்பிற்கு ஆதரவாக 44% பேரும் பைடனுக்கு ஆதரவாக 39% பேரும் வாக்களித்திருக்கிறார்கள். 12% பேர் தாம் இருவருக்குமே வாக்களிக்கப் போவதில்லை எனத் தெரிவித்துள்ளனர்.
கடந்த மே மாதம் இதே நிறுவனத்தால் எடுக்கப்பட்ட் கருத்துக் கணிப்பின்போதிருந்த நிலையிலேயே ட்றம்ப் தொடர்ந்தும் இருப்பதாகவும் ஆனால் பைடனின் ஆதரவு 42% த்திலிருந்து 39% மாகக் குறந்திருக்கிறது எனவும் இக்கணிப்பிலிருந்து அறிய முடிகிறது.
இதே வேளை அமெரிக்க மக்களின் அதிருப்தி தொடர்பாக எடுக்கப்பட்ட கணிப்பில் 53% பைடன் மீதும், 70% காங்கிரஸ் மீதும் 54% உச்ச நீதிமன்றத்தின் மீதும் அமெரிக்க மக்கள் அதிருப்தி கொண்டுள்ளதாகத் தெரிகிறது. திருப்தி தொடர்பான கருத்துக் கணிப்பில் பைடன், சென்ற தடவையை விட 2% த்தால் அதிகரித்து 40% த்தில் உள்ளார்.
எதிர்வரும் நவம்பரில் நடைபெறவிருக்கும் நடுத்தவணைத் தேர்தல்களின்போது 46% மான அமெரிக்கர்கள் தாம் குடியரசுக் கட்சிக்கே வாக்களிக்கவிருப்பதாகத் தெரிவித்துள்ளனர். ஜனநாயகக் கட்சிக்கு வாக்களிக்க விருப்புள்ளவர்கள் 43% மட்டுமே எனவும் அறியப்படுகிறது.
அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை என ட்றம்ப் கூறிவந்தாலும் அவர் தனது எண்ணத்தை முறைப்படியாக இன்னும் அறிவிக்கவில்லை எனத் தெரிகிறது. அதே வேளை ஜனாதிபதி பைடன் அடுத்த தடவையும் தான் தேர்தலில் நிற்கப்போவதாக உத்தியோகபூர்வமாக அறிவித்துவிட்டார். உதவி ஜனாதிபதியாக கமலா ஹரிஸ் தொடர்ந்தும் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனாலும் பைடன் அடுத்த தேர்தலில் போட்டியிடுவதற்கு ஜனநாயகக் கட்சிக்குள்ளும், காங்கிரஸுக்குள்ளும் வாக்காளர் மத்தியிலும் எதிர்ப்பு வளர்ந்து வருவதாக நியூ யோர்க் ரைம்ஸ் தெரிவித்துள்ளது. இதனால் 2024 வேட்பாளர் தெரிவில் அவரை வேட்பாளர் பட்டியிலிருந்து கட்சி ஒதுக்கிவிடுவதற்கான சந்தர்ப்பமும் உண்டு என அறியப்படுகிறது.
சமீபத்தில் ஹார்வார்ட் காப்ஸ்-ஹரிஸ் நிறுவனம் எடுத்த கருத்துக் கணிப்பின்படி, 2024 இல் பைடன் வேட்பாளராகத் தெரியப்படுவதற்கு 29% மட்டுமே ஆதரவு தெரிவித்துள்ளனர். இருப்பினும் ஜனநாயக்கட்சி வாக்காளர்களில் 64% மானோர் பைடனே வேட்பாளராக இருக்கவேண்டுமெனத் தெரிவித்துள்ளனரென எமேர்ஸன் கொலிஜ் கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது.
2024 தேர்தலில் ட்றம்ப் போட்டியிடாத பட்சத்தில் ஃபுளோறிடா ஆளுனர் றொன் டெசாண்டிஸ் குடியரசுக் கட்சியின் வேட்பாளராகத் தெரிவாக வாய்ப்புண்டு.
தற்போது செனட் சபையிலும் பிரதிநிதிகள் சபையிலும் ஜனநாயகக் கட்சி மிகச் சிறிதான பெரும்பான்மையைக் கொண்டிருக்கிறது. இதைக் காத்திரமாக அதிகரிக்காமல் போனால் பைடனின் பல திட்டங்கள் நிறைவேற்றப்பட முடியாமல் போகலாம். இதனால் ஜனநாயகக் கட்சி மீதான மக்களின் நம்பிக்கை தளர்ந்து போகும். எனவே வரப்போகும் நடுத்தவணைத் தேர்தல்கள் பைடன் நிர்வாகத்திற்கு மிக மிக அவசியமான ஒன்றாக இருக்கும் என எதிர்ப்பர்க்கப்படுகிறது.