US & Canada

அமெரிக்கா: ஹார்ட்ஃபோர்ட் நகரமுதல்வராகும் அருணன் அருளம்பலம்

 அமெரிக்க கனெக்ரிகட் மாநிலத்திலுள்ள ஹார்ட்ஃபோர்ட் என்னும் நகரின் முதல்வருக்கான (மேயர்) தேர்தலில் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த தமிழரான அருணன் அருளம்பலம் தேர்வாகியுள்ளார். இத் தேர்தலில் தோற்கடிக்கப்பட்ட, இதற்கு முன்னர் தொடர்ந்து எட்டு வருடங்களாக முதல்வராக இருந்த லூக் புறோனின் தான் இனிமேல் தேர்தலில் நிற்கப்போவதில்லை என அறிவித்துள்ளார்.

“தேர்தல் பிரசாரத்தின்போது உங்களில் பலர் இந் நகரத்திற்கான உங்கள் நம்பிக்கைகளையும், கனவுகளையும் என்னோடு பகிர்ந்துகொண்டிருந்தீர்கள். நான் நகர மண்டபம் செல்லும்போது நான் அதை எப்போதும் மனதில் வைத்திருப்பேன். நான் உங்கள் ஒவ்வொருக்காகவும் தொடர்ந்து போராடிக்கொண்டிருப்பேன்” என வெற்றியை ஏற்றுக்கொண்ட அருளம்பலம் தெரிவித்தார்.

போரின் காரணமாக இலங்கையை விட்டு சிம்பாப்வே சென்ற அவரது பெற்றோர்களுக்கு அங்கு பிறந்தவர் அருணன். பின்னர் அமெரிக்கா வந்து அங்கு திருமணமாகி நான்கு குழந்தைகளுக்குத் தந்தையாக உள்ளார்.

மாநில ஆளுனர் நெட் லமொண்ட்டின் நிர்வாகத்தின்கீழ் நுகர்வோர் பாதுகாப்பு ஆணையராகப் பணியாற்றிய அருணன் பின்னர் ஹார்ட்ஃபோர்ட் நகரிலுள்ள பாழடைந்த வீடுகளைத் திருத்திக் கொடுக்கும் இலாபநோக்கற்ற ஒரு நிறுவனத்தின் முதன்மை நிர்வாகியாகப் பணியாற்றிவந்தார்.