அமெரிக்கா வைத்த ஆப்பு | “எங்கள் அரசாங்கம் ரணில் அரசைவிட ஊழல் நிறைந்தது” – அமைச்சர் கம்மன்பில


சட்டி கேத்தலைக் கருப்பென்கிறது!

மாயமான்

“இலங்கையின் வரலாற்றிலேயே மிகவும் ஊழலான அரசாங்கம் எங்களுடையது” என்கிறார் அரசாங்க எரிபொருள் சக்தி அமைச்சர் உதய கம்மன்பில.

பசில் ராஜபக்ச அதிகாரத்தைக் கையிலெடுத்ததும் ஒரே இரவில் கையெழுத்திடப்பட்ட அமெரிக்க நியூ ஃபோர்ட்றெஸ் எனேர்ஜி நிறுவனத்துடன் செய்த ஒப்பந்தம் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் பங்காளிக் கட்சிகளை மிகவும் கோபப்படுத்தியிருக்கிறது. கடந்த சில மாதங்களாகப் புகைந்துகொண்டிருந்த ஆளும்கட்சி பங்காளிகளுக்கிடையேயான போராட்டம் இப்போது முழு அளவில் வெளிக்கிளம்பியிருக்கிறது. இது குறித்து நேற்று (29) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் எரிபொருள் அமைச்சர் கம்மன்பில மேற்கண்டவாறு அரசாங்கத்தைச் சாடியிருக்கிறார்.

இலங்கையின் தற்போதைய மின்சார உற்பத்தி பெரும்பாலும் நிலக்கரி, டீசல் மற்றும் நீர் வளங்களிலிருந்து பெறப்படுகிறது. யுதனாவி என அழைக்கப்படும் இலங்கையின் மேற்கு கரையில் அமைந்திருக்கும் மின்பிறப்பாக்கி ஆலையை நிலக்கரியிலிருந்து மற்றும் டீசல் மூலத்திலிருந்து எரிவாயுவுக்கு மாற்றுவதற்காக திட்டத்தை நடைமுறைப்படுத்த ராஜபக்ச அரசாங்கம் 2019 இல் ஆரம்பித்தது. வளி மாசடைவதைத் தவிர்ப்பதற்காக உலகநாடுகள் பல தமது மூலங்களை சூரிய, நீர், காற்று மற்றும் எரிவாயு மூலங்களுக்கு மாற்றி வருகின்றன. ஆனால் அதைவிட முக்கியமான விடயம் இந்த எரிவாயுவை வழங்குவதற்கெனப் பலநாடுகளும் போட்டி போட்டுக்கொண்டு முன்வருகின்றன. இப்போட்டியில் யாருக்கு இந்த ஒப்பந்தத்தைக் கொடுப்பது என்பது குறித்து 2019 ஜனாதிபதி ஆட்சிக்கு வந்தது முதல் ராஜபக்ச – பங்காளிக் கட்சிகள் தப்புகளிடையே கடும் விவாதம் நிலவி வந்தது. இறுதியில் பகிரங்க ஒப்பந்த ஏலத்தில் (tender) விடுவதெனத் தீர்மானிக்கப்பட்டிருந்தது.

இதே வேளை, 2019 முதல் இவ்வொப்பந்தத்தை வசப்படுத்துவதில் கடுமையாக உழைத்த அமெரிக்க நிறுவனமான நியூ ஃபோர்ட்றெஸ் எனேர்ஜி இந்த எரிவாயு இறக்குமதிக்காக இலவசமாக மிதக்கும் கொள்கலனொன்றை வழங்குவதாகவும் பதிலாக யுதனாவி மின்னிலையத்தில் 40% மான உரிமத்தைத் தாம் வாங்கிக்கொள்வதாகவும் அறிவித்தது. ஆனால் இது விடயத்தில் அமெரிக்காவுடன் போட்டி போட்ட இதரநாடுகளின் அழுத்தம் காரணமாக இவ்வொப்பந்தத்தை ஏலத்தில் விடுவதெனத் தீர்மானித்திருந்தது. இந் நிலையில் சடுதியாக இவ்வேலத்தில் பங்குபற்றாது அமெரிக்க நிறுவனம் ஒதுங்கிக்கொண்டது.



பசில் ராஜபக்சவின் வருகை

இந் நிலையில் பசில் ராஜபக்ச அவசரம் அவசரமாக அமெரிக்கா செல்கிறார். அப்போது அவருக்கு அமைச்சுப் பதவி வழங்கப்பட்டிருக்கவில்லை. சகோதரர்களுடன் முரண்பட்டுக்கொண்டு அவர்களுக்குச் சொல்லாமலேயே அவர் அமெரிக்கா பறந்துவிட்டார் என அப்போது ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. ஆனால் ராஜாங்க அமைச்சர் டிலும் அமுனுகம மட்டும் உண்மையை உளறிவிட்டார். “நாட்டின் நன்மைக்காக அமெரிக்கா சென்ற பசில் ராஜபக்ச பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டிருக்கிறார். இப்போதைக்கு அதை வெளியிட முடியாது” என அவர் அப்போது தெரிவித்திருந்தார். பசில் ராஜபக்ச நாடு திரும்பியதும் அவருக்கு நிதி அமைச்சும் அதற்கு மேலான அதிகாரங்களும் வழங்கப்படுகின்றன. சில நாட்களின் பின் ஒருநாள், நள்ளிரவில் நியூ ஃபோற்ட்றெஸ் எனெர்ஜிக்கும் இலங்கை அரசாங்கத்துக்குமிடையில் ஒப்பந்தம் கைச்சாத்தாகிவிட்டது என ஊடகங்கள் மூலம் செய்தி வெளியாகிறது.

நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் விமல் வீரவன்ச, உதய கம்மன்பில உள்ளிட்ட 11 பங்காளிக்கட்சிகள் பங்குபற்றியிருந்தன. அதில் அமைச்சர் உதய கம்மன்பில அரசாங்கத்தை மிகவும் காட்டமாகச் சாடியிருக்கிறார். “இதர நாடுகளின் நியாயமான கோரிக்கைகளை அனுசரித்து யுதனாவி மின்னிலைய எரிவாயு வழங்கலை பகிரங்க ஏலத்தில் விடுவதென பெப்ரவரி 2021 இல் நாம் தீர்மானித்திருந்தோம். ஆனால் ஒப்பந்த ஏலத்தில் பங்குபற்றாது விலத்திச் சென்ற நியூ ஃபோர்ட்றெஸ் எனேர்ஜி 15 மாதங்களுக்குப் பிறகு வந்து திடீரென எப்படி இந்த ஒப்பந்தத்தைச் செய்துகொள்ளலாம். இந்த ஒப்பந்தம் உங்களுக்கே தரப்படும் என யாரோ அந்த அமெரிக்க நிறுவனத்துக்கு உறுதி வழங்கியிருக்க வேண்டும். அதனால் தான் அது ஏலத்தில் பங்குபற்றாமலேயே ஒப்பந்தத்தைக் கையெழுத்திட முடிந்தது” என்பது அமைச்சர் கம்மன்பிலவின் வாதம்.

“ஏலத்தில் விடப்பட்ட ஒரு விடயம் அதில் பங்குபற்றாத ஒரு நிறுவனத்துக்கு வழங்கப்பட்டமை வரலாற்றில் முதல் தடவையாக இலங்கையில் நடைபெற்றிருக்கிறது. சிறீலங்கா பொதுஜன பெரமுன இலங்கையின் வரலாற்றிலேயே அதிக ஊழல் நிறைந்த அரசாங்கம். ஜே.ஆர் காலத்திலோ, பிரேமதாச காலத்திலோ, சந்திரிகா காலத்திலோ அல்லது ஊழல் நிறைந்த அரசென நாம் திட்டிய ரணில் அரசின் காலத்திலோ இப்படி நடைபெறவில்லை” என அமைச்சர் கம்மன்பில இவ்வூடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்திருக்கிறார்.

இப்படிக் குற்றஞ்சாட்டுவதற்கு அமைச்சர்கள் கம்மன்பில, வீரவன்ச போன்றவர்கள் கொனஞ்சம்கூட அருகதையற்றவர்கள். துறைமுக நகரம், அம்பாந்தோட்டை துறைமுகம் போன்ற விடயங்களில் சீனாவுடன் செய்யப்பட்ட பல ஒப்பந்தங்கள் விடயத்திலும் சரி, கிழக்குக் கொள்கலன் முனைய விடயத்தில் இந்தியாவுடன் செய்யப்பட்ட ஒப்பந்தம் முறிக்கப்பட்ட விடயத்திலும் சரி இவர்கள் ஒருபோதுமே நாணயஸ்தர்களாக இருந்ததில்லை. இது முற்றிலும் ஒரு அமெரிக்க காழ்ப்புணர்வினால் ஏற்படும் ஒன்று அல்லது அல்லது அமெரிக்காவுடனான ஒப்பந்தத்தை முறிக்கவென இன்னுமொரு நாடு பின்னணியில் இருந்து இவர்களை இயக்குவதன் வெளிப்பாடு என்று தான் கூற முடியும்.