AnalysisNews & AnalysisOpinionSri Lanka

அமெரிக்கா விரும்பினால் கோதாபய மீது போர்க்குற்ற விசாரணைகளை ஆரம்பிக்கலாம் – தயா கமகே

தயா கமகே

முன்னாள் அமெரிக்கப் பிரஜை என்ற வகையில் ‘போர்க்குற்றச் சட்டம்-1996’ ஐ கோதாபய மீது அமெரிக்கா பாவிக்க வழிகளுண்டு

 

தயா கமகே

தயா கமகே இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தில் வெளிவிவகாரச் சேவை அதிகாரியாகப் பணிபுரிந்தவர். அத்தோடு அவர் ஒரு அரசியல் ஆய்வாளருமாவார். இலங்கையின் தேசியப் பிரச்சினை தொடர்பாக அமெரிக்க நிர்வாகத்தின் கொள்கை உருவாக்கங்களின் பின்னால் இவருடைய ஆலோசனைகளே மிக முக்கியமாக இருந்திருக்கின்றன. 1994 இல் ஓய்வுபெற்ற பின்னர் கலிபோர்ணியாவில் தற்போது வாழ்கிறார். அவரது நூலான ‘The Tiger’s Debt to America’, தமிழ்த் தேசியப் பிரச்சினை தொடர்பாக அமெரிக்காவின் வெளிவிவகாரக் கொள்கை பற்றிய தகவல்களைத் தரும் ஒரே நூல் எனப் புகழ் பெற்றது. தற்போதைய நிலவரம் தொடர்பாக அவர் கொலொம்பொ ரெலிகிராஃப் பத்திரிகைக்கு எழுதிய கட்டுரையிலிருந்து சில முக்கிய பகுதிகளின் தமிழாக்கம் இங்கு தரப்படுகிறது. முழுமையான ஆங்கிலக் கட்டுரையை வாசிக்க Colombo Telegraph ஐப் பார்க்கவும்.

போர் முடிக்கப்பட்ட விதம் பற்றி அமெரிக்கா ஏமாற்றமடைந்திருந்தது. விடுதலைப் புலிகள் முற்றாக தோற்கடிக்கப்படுவதையோ அல்லது ஒழிக்கப்படுவதையோ அமெரிக்கா விரும்பியிருக்கவில்லை. போர்நிறுத்தம் ஒன்று அமுல் செய்யப்பட்டு விடுதலைப் புலிகளின் தலைமையைப் பாதுகாப்பாக வெளியே கொண்டுவருவதற்கான முயற்சிகளை அது மேற்கொண்டிருந்தது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவைச் சம்மதிக்க வைத்து போர்நிறுத்தம் ஒன்றை அமுற்படுத்துவதற்காக, பிரித்தானியா, பிரான்ஸ் நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் அப்போது இலங்கைக்குச் சென்றிருந்தனர். ஆனாலும் ஜனாதிபதி அதை நிராகரித்து விட்டார்.

தயா கமகே

நான்காவது ஈழப் போரில் கோதாபய ராஜபக்சவின் பணி என்ன என்பதும், அவர்மீது உலக நாடுகளால் வைக்கப்பட்ட விமர்சனங்கள் பற்றியும் அமெரிக்காவிற்கு நன்றாகத் தெரிந்திருந்தும், அவர் தனது குடியுரிமைத் துறப்பை மிக இலகுவாகவும், விரைவாகவும் பெற்றிருந்தார். ஆகஸ்ட் 2006 முதல் மே 2009 வரை கோதாபயவின் கட்டளையின் கீழ் பணிபுரிந்த தளபதிகள் பலர் அமெரிக்க ராஜாங்கத் திணைக்களத்தினால் போர்க் குற்றவாளிகளெனப் பிரகடனப்படுத்தப்பட்டு, அமெரிக்காவிற்குள் அவர்களுக்கு நுழைவு மறுக்கப்பட்டிருந்தது. அவர்களில் இருவர் ஜெனெரல் சர்த் ஃபொன்சேகாவும், ஜெனெரல் ஷவேந்திர சில்வாவும். அப்போது பாதுகாப்புச் செயலாளராகவிருந்த கோதாபய ராஜபக்சவின் நேரடிக் கட்டுப்பாட்டின்கீழ் தான் இந்த இருவரும் தமது கடமைகளை ஆற்றியிருந்தார்கள்.

போர் முடிக்கப்பட்ட விதம் பற்றி அமெரிக்கா ஏமாற்றமடைந்திருந்தது. விடுதலைப் புலிகள் முற்றாக தோற்கடிக்கப்படுவதையோ அல்லது ஒழிக்கப்படுவதையோ அமெரிக்கா விரும்பியிருக்கவில்லை. போர்நிறுத்தம் ஒன்று அமுல் செய்யப்பட்டு விடுதலைப் புலிகளின் தலைமையைப் பாதுகாப்பாக வெளியே கொண்டுவருவதற்கான முயற்சிகளை அது மேற்கொண்டிருந்தது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவைச் சம்மதிக்க வைத்து போர்நிறுத்தம் ஒன்றை அமுற்படுத்துவதற்காக, பிரித்தானியா, பிரான்ஸ் நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் அப்போது இலங்கைக்குச் சென்றிருந்தனர். ஆனாலும் ஜனாதிபதி அதை நிராகரித்து விட்டார்.

போரின் முடிவு தொடர்பாக மிகவும் ஏமாற்றமடைந்திருந்த அப்போதைய அமெரிக்க தூதுவர் பற்றீசியா பூட்டெனிஸ், டிசம்பர் 2009 இல் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்துக்கு ஒரு இரகசிய தகவலை அனுப்பினார். அதில், ராஜபக்ச சகோதரர்கள் போர்க்குற்றவாளிகள் என அவர் பிரகடனப்படுத்தியிருந்தார். இதைத் தொடர்ந்து அமெரிக்க ராஜாங்கத் திணைக்களத்தின் போர்க்குற்ற அலுவலகம் அதே மாதம் (டிசம்பர் 2009), இலங்கையின் இராணுவத் தலைவர்களும், அவர்களது சிவிலியன் தலைவர்களும் போரை முடித்த விதத்தைக் கண்டித்து அறிக்கையொன்றை வெளியிட்டிருந்தது.

2019 இல் நடைபெறவிருக்கும் தேர்தலில் கோதாபய ராஜபக்ச ஜனாதிபதியாகப் போட்டியிடத் தயாராகிறார் என்னும் விடயம் 2018 இலேயே வாஷிங்டனுக்குத் தெரிந்திருந்தது. விக்கிரமசிங்க-சிறிசேன அரசினால் நிறைவேற்றப்பட்ட 19 வது திருத்தத்தின் பிரகாரம் இரட்டைக் குடியுரிமையுள்ளவர்கள் தேர்தலில் போட்டியிடமுடியாது எனபதும் அமெரிக்காவுக்குத் தெரிந்திருந்தது. இச் சூழலில்தான் கோதாபய ராஜபக்ச, 2019 ஆரம்பத்தில் கோதாபய தனது குடியுரிமைத் துறப்பிற்கான விண்ணப்பத்தைக் கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தில் சமர்ப்பிக்கிறார்.

இப்படியான விண்ணப்பங்கள் மீதான நடவடிக்கைகளை எடுப்பதற்கு அமெரிக்கச் சட்டம் காலவரையறையொன்றையும் கொடுத்திருக்காமையால் விண்ணப்பங்கள் மீதான விசாரணைகளை மேற்கொள்ளும் ஆணையங்கள் தாம் விரும்பிய நேரத்தில் தமது முடிவுகளை அறிவிக்கலாம். சில வேளைகளில் இது பல வருடங்களையும் எடுப்பதுண்டு. குடியுரிமை துறப்பு அத்தாட்சிப் பத்திரத்தைக் கோரும் தகமை கொழும்பிலுள்ள தூதரகத்திற்கு இல்லை. இதற்கான தகமை அமெரிக்காவிலுள்ள அமெரிக்கக் குடிமக்கள் சேவைகள் மற்றும் வெளிநாட்டுக் குடிமக்கள் சேவைகள் முகாமைத்துவ அலுவலகத்துக்கே உண்டு. அவர்களுக்கு இப்படியான விடயங்கள் எப்போதுமே அதி முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக இருப்பதில்லை.

நான்காவது ஈழப்போரில் கோதாபய ராஜபக்சவின் பணிகள் பற்றிப் புதிய விசாரணைகளை மேற்கொள்ள 2019 இன் ஆரம்பத்தில் மீண்டுமொரு முயற்சி எடுக்கப்பட்டது பற்றி நான் கேவிப்பட்டிருந்தேன்.

தனது அமெரிக்க நிரந்தரக் குடிவரவாளர் உரிமத்தைப் (பச்சை மட்டை) புதுப்பிப்பதற்காக அக்டோபர் 2009 இல் ஜெனெரல் சரத் ஃபொன்சேகா அமெரிக்கா வந்திருந்தபோது, ஈழப்போரில் கோதாபய ராஜபக்சவின் பணிகள் பற்றி அறிய அவரிடம் விசாரணைகளை மேற்கொள்ள அமெரிக்க உள்ளகப் பாதுகாப்புத் திணைக்களம் முயற்சித்தது. இதற்கென கொழும்புத் தூதரகத்திலிருந்து போரறிக்கைகளை (ஆகஸ்ட் 2006 – மே 2009) அது பெற்றிருந்தது. ஆனால் சரத் ஃபொன்சேகா தந்திரமாக அதிலிருந்து விலகிக்கொண்டார். அதே மாதம், ராஜாங்கத் திணைக்களத்தின் உலகக் குற்ற நீதி அலுவலகம் இலங்கை மீதான போர்க்குற்றங்களைச் சுமத்தி அமெரிக்க காங்கிரஸில் ‘போர் அறிக்கை’ ஒன்றைச் சமர்ப்பித்திருந்தது.

கோதாபய ராஜபக்சவின் பெயர் இலங்கை ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் பட்டியலில் வந்தவுடன், எப்படி ஒரு அமெரிக்கப் பிரஜையான கோதாபயவினால் பாதுகாப்புச் செயலாளராக இருந்து போரை நிர்வகிக்கவும், பணிக்கவும், முடித்துவைக்கவும் முடிந்தது என விசாரித்து, அவரை ‘அமெரிக்க போர்க்குற்றங்கள் சட்டம்-1996’ இன் பிரகாரம் குற்றவாளியாக்குவதற்கு வாஷிங்டன் முயற்சித்தது.

ஒரு அமெரிக்கப் பிரஜை, அவர் இராணுவத்தினரானாலென்ன அல்லது சிவிலியனாலாலென்ன, கொலை, துன்புறுத்தல், மனிதாபிமானமற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவதன் மூலம், ஜெனிவா உடன்படிக்கையை (Geneva Convention) மீறுவாராயின் அது ஒரு ஒரு குற்றமென மத்திய சட்டமான ‘போர்க்குற்றச் சட்டம்-1996’ கருதுகிறது.

இச் சட்டம், இக் குற்றங்களைப் புரிபவரை மட்டுமல்ல அவற்றை ஏவுபவர் மீதும், அதைப் பற்றித் தெரிந்திருப்பவர் மீதும், தெரிந்திருந்தும் அதை நிறுத்த முயற்சிகளை எடுக்காதவர் மீதும் நடவடிக்கைகளை எடுக்க முடியும்.

அது மட்டுமல்ல இச் சட்டம் கால வரையறைகளால் கட்டுப்பட்டதல்ல. அதாவது ஒருவர் மீது போர்க்குற்றத்தை எப்போதும் கொண்டுவரலாம்.

இச்சட்டத்தின் பிரிவு 2401 இன் பிரகாரம் ஒருவர் அமெரிக்காவிற்கு உள்ளேயே அல்லது வெளியேயோ, ஜெனிவா உடன்படிக்கையை மிக மோசமாக மீறியிருந்தால் அவர் எப்போதும் தண்டிக்கப்படலாம். ஆகஸ்ட் 12, 1949 இல் அமெரிக்கா உடபடப் பல நாடுகளாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட இவ்வுடன்படிக்கை போரின்போது ஒரு நாடு எப்படித் தன்னைக் கையாளவேண்டுமென வரையறுக்கிறது. ‘மோசமான மீறல்’ என்பது இவ்வொப்பந்தத்தில் வரையறுக்கப்படுகிறது.

இம்மீறல்களைப் புரியும்போது கோதாபய ராஜபக்ச ஒரு அமெரிக்கப் பிரஜை என்பதால், ‘போர்க்குற்றச் சட்டம் -1996’ இன் பிரகாரம் அவர் தண்டிக்கப்படக்கூடியவர். அமெரிக்கா விரும்பினால் சர்வதேச எல்லைகளைக் கடந்து அவர் மீதான விசாரணைகளை மேற்கொள்ளலாம். ‘அமெரிக்கா வெளிநாடு ஒன்றின் உள்ளக விவகாரங்களில் தலையிடுகிறது’ என்ற குற்றச்சாட்டை இலங்கை அரசு பாவிக்க முடியாமல் அவரது அமெரிக்கப் பிரஜை (முன்னாள்) என்ற ஸ்தானம் தடுக்கிறது. அதாவது,தனது பிரஜை ஒருவர் மேற்கொண்ட குற்றத்தை விசாரிக்கவெனத் தலையிடுகிறோம் என்ற தோரணையில் இறங்க வழியுண்டு.

முன்னர் குறிப்பிட்டபடி, ராஜபக்ச சகோதரர்கள் உடபட, இராணுவத் தலைவர்களும், சிவிலியன் தலைவர்களும் புரிந்த குற்றங்கள் பற்றி முன்னாள் அமெரிக்கத் தூதுவர் பற்றீசியா புட்டெனிஸ் போதுமான தகவல்களை ஏற்கெனவே அனுப்பியிருக்கிறார்.

இவற்றையும், புலம் பெயர் தமிழ்ச் செயற்பாட்டாளர்கள் கொடுத்த தகவல்களையும் வைத்துக்கொண்டு கோதாபயவின் குடியுரிமைத் துறப்பை, அமெரிக்கா விரும்பியிருந்தால், காலவரையறையின்றித் தாமதப்படுத்தியிருக்கலாம். ஆனால் செய்யவில்லை.

கடமையிலிருக்கும், மற்றும் ஓய்வு பெற்ற இராணுவத் தலைவர்களுக்குப் பல தடவைகள் அமெரிக்க விசா மறுக்கப்பட்டிருக்கிறது. சரத் ஃபொன்சேகாவிற்கு மூன்று தடவைகள் விசா மறுக்கப்பட்டிருக்கிறது. ஜனாதிபதி சிறிசேன நியூ யோர்க் ஐ.நா. நிகழ்வுக்கு வர்ம்போது அவருடன் வருவதற்கென சரத் ஃபொன்சேகா கொடுத்திருந்த விண்ணப்பமும் நிராகரிக்கப்பட்டது. போர்க் குற்றங்களிலும், மனித உரிமை மீறல்களிலும் ஈடுபட்டவர்களுக்கு அமெரிக்க உள்ளக பாதுகாப்புத் திணைக்களம் இலகுவாக அனுமதியை வழங்க மாட்டாது. குற்றஞ்சாட்டப்பட்டாதவர்கள் பலருக்கும் கொழும்பு தூதரகம் விசா அனுமதியை மறுத்திருக்கிறது. அதற்குக் காரணம் அவர்களது பெயர்கள் ஏதோ ஒரு விடயத்தில் சம்பந்தப்பட்டிருப்பதாக ஏற்கெனவே கொடுக்கப்பட்ட அறிக்கைகளில் இருப்பதால் தான்.

கோதாபய ராஜபக்ச விடயத்தில் அவரது குடியுரிமைத் துறப்பைப் பின்போடுவதற்கோ அல்லது மறுப்பதற்கோ போதுமான அளவு தகவல்கள் உள்ளகப் பாதுகாப்புத் திணைக்களத்திடமிருந்தன. ஆனாலும் அவர்கள் இலகுவாகவும் துரிதமாகவும் அத்துறப்பைச் சாத்தியமாக்கியிருந்தார்கள். ஏன்?

கோதாபய, பாதுகாப்புச் செயலாளராக இருந்தபோது, 2007 இல் அமெரிக்காவுடன் அக்சா (ACSA) என்ற இராணுவ ஒப்பந்தத்தைச் செய்திருந்தார். கோதாபய ஜனாதிபதியாக வந்தவுடன் இந்திய-பசுபிக் சமுத்திரப் பிராந்தியத்தில் அமெரிக்கப் படைகள் நடமாடவும், தந்திரோபாய நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் உதவி செய்வார் எனவும், இதன் மூலம் அப் பிராந்தியத்தில் சீனாவின் விரிவாக்கத்தைத் தடுக்க அவர் உதவுவார் எனவும் அமெரிக்கா எதிர்பார்த்திருந்தது. 2017 இல் 83 பக்க சோஃபா (Status of Forces (SOFA)) ஒப்பந்தம் இதற்கெனத் தயாரிக்கப்பட்டது. ஆனால் அதில் கையெழுத்திட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மறுத்துவிட்டார். 2019 இல் கோதாபய ஜனாதிபதியாக வந்தால் அவரை இதில் கையெழுத்திட வைக்கலாமென அமெரிக்கா எதிர்பார்த்தது. அத்தோடு $480 மில்லியன் மில்லேனியம் சலெஞ் ஃபண்ட் ஒப்பந்தத்திலும் ராஜபக்ச கையெழுத்து வைப்பார் என அமெரிக்கா எதிர்பார்த்தது. இந்தோ-பசுபிக் பிராந்தியத்தில் சீனாவின் ஆதிக்கத்தைத் தடுக்க இம் மூன்று ஒப்பந்தங்களும் முக்கியமானவை. இதற்காக கோதபய ஜனாதிபதியாக வருவது அமெரிக்காவிற்குத் தேவையாகவிருந்தது. இதனால் தான் அவரது குடியுரிமைத் துறப்பு விரைவாகவும் இலகுவாகவும் நிறைவேற அமெரிக்கா உதவி செய்திருந்தது.

ஜனாதிபதியாகப் பதவியேற்றதும் கோதாபய அமெரிக்காவின் காலை வாரிவிட்டார். எனவே தான் மார்ச் 23, 2021 ஜெனிவாத் தீர்மானத்துக்குப் பின்னான அமெரிக்காவின் நகர்வு இலங்கைக்கு மிகவும் பாதகமாக இருக்குமென நான் எண்ணுகிறேன்.

ஆப்கானிஸ்தான், ஈராக் ஆகிய நாடுகளில் அமெரிக்க இராணுவம் மேற்கொண்ட மீறல்கள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்ற அதிகாரிகள் அமெரிக்கா வருவதற்கான அனுமதியைச் சென்ற வாரம் ஜனாதிபதி பைடன் வழங்கியிருக்கிறார்.

போர்க்குற்றம், மனித உரிமை மீறல்கள் விடயத்தில் பைடன் நிர்வாகம் எப்படியான அணுகுமுறைகளையும், நகர்வுகளையும் மேற்கொள்ளவிருக்கிறது என்பதற்கு இது நல்லதொரு உதாரணம். மார்ச் 23, 2021 ஜெனிவா தீர்மானத்தில் அமெரிக்காவின் நடைமுறை ராஜபக்சக்களுக்கு வரவிருக்கும் நெருக்கடிகளுக்கான முன்னறிவித்தல் எனவே நான் பார்க்கிறேன்.