அமெரிக்கா வந்த இயக்குனர், நடிகர் டி.ராஜேந்தரை நேரில் சந்தித்து வாழ்த்துத் தெரிவித்த உருத்திரகுமாரன்
மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா வந்த தமிழ்நாட்டு திரைப்பட இயக்குனர், நடிகர் டி.ராஜேந்தரை நேரில் சந்தித்து நலம் விசாரித்ததோடு வாழ்த்துக்களையும் தெரிவித்திருக்கிறார் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி. உருத்திரகுமாரன்.
கடந்த சில நாட்களாக நியூயோர்க்கிலுள்ள மருத்துவமனையொன்றில் சிகிச்சை பெற்றுவந்த நடிகர் ராஜேந்தர் குணமடைந்து வெளியேறியிருக்கிறார். தற்போது ஓய்வு பெற்றுக்கொண்டிருக்கும் அவரை நேரில் சென்று சந்தித்து நலம் விசாரித்திருக்கிறார் பிரதமர் உருத்திரகுமாரன்.
தமிழுணர்வாளரான டி.ராஜேந்தர் ஈழத்தமிழர் போராட்டத்துக்குத் தொடர்ச்சியாக ஆதரவளித்து வருவதோடு ஈழத்தமிழர் சார்பில் தமிழ்நாட்டில் பல போராட்டங்களை முன்னெடுத்தும் வருபவர். அவர் விரைவாக உடல் நலம் தேறி நிறைந்த ஆரோக்கியத்துடனும் நீண்ட ஆயுளோடும் வாழவேண்டி ஈழத்தமிழர்கள் சார்பில் திரு உருத்திரகுமாரன் அவர்கள் டி.ராஜேந்தருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்திருக்கிறார்.