NewsWorld

அமெரிக்கா | மிச்சிகன் மாநிலத்தில் பாடசாலையில் துப்பாக்கிச் சூடு – 3 மாணவர்கள் மரணம்


அமெரிக்காவின் மிச்சிகன் மாநிலத்திலுள்ள ஒக்ஸ்ஃபோர்ட் என்னுமிடத்தில் பாடசாலையொன்றில் 15 வயதுள்ள மாணவரால் நேற்று (30) மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டின்போது மூன்று மாணவர்கள் கொல்லப்பட்டும் எட்டுப் பேர் காயமுற்றுமுள்ளனர்.

ஒக்ஸ்ஃபோர்ட் உயர் பள்ளியொன்றில் நடைபெற்ற இச் சம்பவத்தின்போது 16 வயதுள்ள மாணவன் ஒருவரும், 17 வயது மற்றும் 14 வயதுகளையுடைய இரு மாணவிகளும் கொல்லப்பட்டுள்ளார்கள். இக் கொலைகளுக்கு துப்பாக்கிதாரி ‘செமி ஓட்டமட்டிக்’ கைத்துப்பாக்கியொன்றைப் பாவித்து 12 தடவைகள் சுட்டிருக்கிறார் எனவும் அறியப்படுகிறது. சமபவத்தைத் தொடர்ந்து அவர் பொலிசாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். துப்பாக்கிதாரி 15 வயதுடையவர் என்பதால் அவரது பெயரை பொலிசார் வெளியிடவில்லை.

School shooting in Michigan – Image courtesy: Reuters

துப்பாக்கிச் சூடுகளை மேற்கொண்டதன் பின்னர் துப்பாக்கிதாரி கழிப்பறைக்குள் சென்றுவிட்டுத் துப்பாக்கியுடன் வெளிவரும்போது பொலிசாரால் கைதுசெய்ப்பட்டாரெனவும், அவரிடம் மேலும் 7 ரவைகள் எஞ்சியிருந்தனவெனவும் ஓக்லான்ந்து கவுண்டி பொலிசார் தெரிவித்துள்ளனர். இதில் பாவிக்கப்பட்ட 9 மி.மீ சிக் சோவெர் ரகத் துப்பாக்கியைத் துப்பாக்கிதாரியின் தந்தை வாங்கியிருந்ததாகவும் துப்பாக்கிதாரி இத்துப்பாக்கி மூலம் பயிற்சி எடுப்பதை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றியிருந்தார் எனவும் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

துப்பாக்கிதாரியின் பெற்றோர், பொலிசாருடன் எதையும் பேசக்கூடாது எனக் கட்டளையிட்டிருத காரணத்தால் தடுப்புக் காவலில் இருக்கும் மகன் எதையும் பேசுகிறார் இல்லை எனவும் இதனால் சூட்டுக்கான காரணம் இன்னும் தமக்குப் புலப்படவில்லை எனவும் பொலிச்சர் தெரிவிக்கின்றனர்.

இப்பாடசாலையைச் சேர்ந்த இன்னுமொரு மாணவர் அன்று பாடசாலைக்குச் செல்லவில்லையென்றும், பாடசாலையில் துப்பாக்கிச்சூடு நடைபெறலாமென்ற பேச்சுக்கள் அடிபட்டதால் அவர் அன்று செல்லவில்லை எனவும் எனவே இது திட்டமிடப்பட்ட சம்பவம் எனவும் அவரது பெற்றோர்கள் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.