US & Canada

அமெரிக்கா: போதைப் பொருளை இறக்குமதி செய்தார் என்ற சந்தேகத்தில் சான் ஃபிரான்ஸிஸ்கோ பொலிஸ் சங்கப் பணிப்பாளர் கைது

கலிபோர்ணியா சான் ஃபிரான்ஸிஸ்கோ குடா பிரதேசத்தைச் சேர்ந்த பொலிஸ் பிரிவொன்றின் பொலிஸ் சங்க்ப் ப்ணிப்பாலராகக் கடமையாற்றி வந்த ஜோஆன் மரியன் சேகோவியா என்னும் 64 வயதுடைய பெண் உலகின் மிகவும் ஆபத்தானதெனக் கருதப்படும் ஃபென்ரனில் எனப்படும் போதைப்பொருளைக் கடத்தினார் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

2015 முதல் 2023 வரை ‘திருமண அன்பளிப்புகள்’, “மேலாடைகள்’, “முக அலங்காரப் பொருட்கள்’, ‘சொக்கொலேட்டுகள்’, ‘உணவுத் தயாரிப்புக்கான பண்டங்கள்’, ‘உடல் நலத்துக்கான பொருட்கள்’ என்ற பெயரில் 61 தடவைகள் இப்போதைப் பொருட்களை இறக்குமதி செய்திருக்கிறார். ஹொங்க் கொங், இந்தியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட இப் பொருட்களில் அமெரிக்காவில் தடைசெய்யப்பட்ட வலெறில் ஃபென்ரனில் என்னும் போதைப்பொருள் முக்கியமானதாகும்.

1960 களில் வலி நிவாரணத்திற்காகத் தயாரிக்கப்பட்ட இம் மருந்து வெளிநாட்டுப் போர்களில் காயமடையும் அமெரிக்க இராணுவத்தினரின் வலி போக்கும் மருந்தாகப் பாவிக்கப்பட்டது. போர்கள் இல்லாதபோது இது வசதி படைத்த குடும்ப இளையவர்களுக்கு போதை மருந்தாக அறிமுகமானது. இம் மருந்தைத் தயாரித்த பேர்டூ (Perdue) என்னும் மருந்தக நிறுவனம் மருத்துவர்களுக்கு சலுகைகளைக் கொடுத்து இம் மருந்தை விநியோகிக்கும்படி ஊக்குவித்தது. அப்போது இந்நிறுவனத்தால் வெளியிடப்பட்ட விளம்பரமொன்றில் “இம் மருந்தினால் 1% த்துக்குக் குறைவானவர்களே போதைக்கு அடிமையாகிறார்கள்” என ஒரு பிரபல மருத்துவர் மூலம் சொல்ல வைக்கப்பட்டது. இதன் விளைவாகப் பல மருத்துவர்களே இம் மருந்துக்கு அடிமையாகிப் போனார்கள்.

வலி நிவாரணத்திற்கு இப்படியான ஓப்பியோயிட் மருந்துகள் மிகச் சிறப்பாகச் செயற்பட்டன என்பதில் உண்மையுண்டு. சில் மைக்கிரோ கிராம்கள் அளவில் பாவிக்கப்படும்போது அது போதையைத் தூண்டுவதில்லை. ஆனால் அதிக அளவிலும், பிற மருந்துகளுடன் கலந்து பாவிக்கும்போதும் அவை உயிர் கொல்லிகளாக மாறிவிடுகின்றன.

மேற்கு வேர்ஜினியாவில் றிவெர்சைட் என்னும் சமூகத்தில் 2016 இல் இரண்டு பேர் மட்டுமே இம்மருந்துக்குப் பலியாகியிருந்தார்கள். 2023 இல் இத் தொகை நாளொன்றுக்கு 500 க்கும் மேல் என அங்குள்ள தொண்டர் நிறுவனமொன்று தெரிவிக்கிறது. கனடாவில் ஜனவரி 2016 – செப்டம்பர் 2022 வரை 34,455 பேர் இம்மருந்துக்குப் பலியாகியிருக்கிறார்கள். இது நாளொன்றுக்கு 20 பேர் என்ற வீதமாகும். 2021 இல் நாளொன்றுக்கு 21 பேர் என்ற வீதத்தில் இறந்தார்கள். போதைப் பொருளுக்கு அடிமையாகி இறப்பவர்கள் பெரும்பாலும் 25-44 வயதுடையவர்களாக இருக்கிறார்கள்.

2019 முதல் 2021 வரை கோவிட் பெருந்தொற்றுக் காரணமாக வீடுகளில் முடக்கப்பட்ட பலர் இப்படியான மருந்துகளை நாடிப் போனார்கள் எனவும் முடக்கம் தளர்த்தப்பட்டதும் இம்மரணங்கள் குறைந்து வருகின்றன எனவும் கூறப்படுகிறது.

1960 களில் ஹெறோயின் போன்ற போதைப் பொருட்கள் பலராலும் பாவிக்கப்பட்டன. இது போதையைத் தூண்டினாலும் பெரும்பாலும் உயிராபத்தை விளைவிப்பதில்லை. ஆனால் ஃபென்ரனில் சற்று அதிகமாகினாலும் உயிரைக் காவுகொண்டுவிடும். ஒருமுறை ஃபென்ரனில் பாவித்தவர்கள் இதற்கு இலகுவில் அடிமையாகிவிடுகிறார்கள். இதன் வலிதீர்க்கும் குணத்திற்காக பல மருத்துவர்கள் இம்மருந்தைத் தமது நோயாளிகளுக்குப் பரிந்துரைக்கிறார்கள். ஆனால் இம்மருந்தை மருத்துவர்கள் நிறுத்தியதும் இந்நோயாளிகள் சட்டத்துக்குப் புறம்பான கடத்தல்காரர்களிடம் போய்விடுகிறார்கள். கடத்தல் காரர்கள் கொடுக்கும் மருந்துகள் முறைப்படி தயாரிக்கப்படாதவை என்பதால் அவற்றின் அளவுகளில் வேறுபாடுகள் இருக்க வாய்ப்புண்டு. பல இளைய சமுதாயத்தினருக்கு ஹெரோயின் என்ற பெயரில் ஃபென்ரனில் கலந்து விநியோகிக்கப்படுவதும் வழக்கம்.

அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளுக்கு கடத்தப்பட்ட ஃபென்ரனில் பொதுவாக சீனாவிலிருந்தே இறக்குமதி செய்யப்பட்டது. இங்கிருந்து இறக்குமதி செய்யப்படும் பொதிகளில் மறைத்து வைக்கப்பட்டு கொண்டுவரப்பட்டது. M30 என்ற பெயரில் பெரும்பாலான குளிசைகள் பொதிகளாக மெக்சிக்கோவுக்கு இறக்குமதி செய்ய்யப்பட்டு கடத்தல் காரர்கள் மூலம் எல்லை கடந்து உள்ளே கொண்டுவரப்பட்டது. அமெரிக்க அரசு சீனாவுக்கு கொடுத்த அழுத்தத்தின் காரணமாக சீன அரசு ஃபென்ரனில் தயாரிக்கும் தொழிற்சாலைகளைக் கண்டுபிடித்து அவற்றை மூட உத்தரவிட்டது. இப்படியான பெரும்பாலான தொழிற்சாலைகள் கோவிட் பெருந்தொற்று உருவாகியு வூஹான் மாகாணத்தில் தான் இருக்கின்றன.

அமெரிக்க கெடுபிடியிலிருந்து தப்புவதற்கு சீன தயாரிப்பாளர்கள் இப்போது புதிய வழியொன்றைக் கையாள்கிறார்கள். அதாவது ஃபென்ரனில் தயாரிக்கத் தேவையான மூலப்பொருட்களை அவர்கள் மெக்சிக்கோவிற்கு ஏற்றுமதி செய்கிறார்கள். இம் மூலப்பொருட்கள் அமெரிக்க எல்லைகளைத் தாண்டி கனடாவுக்கும் கொண்டுவரப்படுகின்றன. இவற்றை வைத்துக்கொண்டு வீடுகளிலும், சிறிய தொழிலகங்களிலும் இரகசியமாக ஃபென்ரனில் குளிசைகள் தயாரிக்கப்படுகின்றன.

இந்தியாவிலிருந்தும் இம்மருந்துகள் இறக்குமதி செய்யப்படுகின்றன. 2019 முதல் 2023 வரை இந்தியாவிலிருந்து சான் ஃபிரான்ஸிஸ்கோவிற்கு கடத்தப்பட்ட 5 பொதிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். பல்லாயிரக் கணக்கான குளிசைகளைக் கொண்ட இப்பொதிகளில் ட்றமடோல், ரேப்பென்ரடோல் போன்ற போதை மருந்துகள் காணப்பட்டன என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கனடாவிலும் சில வருடங்களுக்கு முன்னர் தமிழ் கடைக்காரர் ஒருவர் சிலைக்குள் மறைத்து வைத்து போதைப்பொருள் கடத்தியதாகக் கைதுசெய்யப்பட்டிருந்தார். அது அவருக்குத் தெரியாமலும் நடைபெற்றிருக்கலாம்.

சான் ஃபிரான்ஸிஸ்கோ பொலிஸ் சங்கப் பணிப்பாளர் மரியன் சேகோவியா தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார். தன்னுடைய பெயரில் தனது குடும்ப நண்பி ஒருவர் பொருட்களை இறக்குமதி செய்வதாக சென்ற மாதம் அவர் பொலிசாரிடம் தெரிவித்திருந்தார். ஆனால் அதற்குப் பிறகு மார்ச் 13 அன்று அவரது பெயரில் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட கடிகாரமொன்றினுள் வலெறில் ஃபென்ரனில் குளிசைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து சேகோவியாவின் மின்னஞ்சல்கள், வட்ஸப் தகவல்களை ஆராய்ந்த பொலிசார் அவற்றில் மருந்துகள் கடத்தல் பற்றிப் பேசப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.

சேகோவியா சான் ஃபிரான்ஸிஸ்கோ பொலிஸ் சங்கத்தின் பணிப்பாளராகக் கடந்த 20 வருடங்களாகப் பணியாற்றி வருகிறார். அவர் தனது அலுவலக மற்றும் வீட்டுக் கணனிகளைப் பாவித்து இம்மருந்துகளுக்கான ஓர்டர்களை அனுப்பியிருந்ததாகவும், அலுவலகத்தின் UPS கணக்கைப் பாவித்து அவற்றை இறக்குமதி செய்திருந்தார் என்றும் தனது அலுவலகத்தில் வைத்தே அவற்றை விநியோகம் செய்திருக்கிறார் என்றும் மத்திய விசாரணை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

குற்றவாளியென நிரூபிக்கப்பட்டால் அவருக்கு 20 வருடச் சிறைத்தண்டனை வழங்கப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது. (Photo Credit: LinkedIN)