US & Canada

அமெரிக்கா: நாஷ்வில் பாடசாலைப் படுகொலை ஒரு பழிவாங்கல்?

பால்மாற்றச் சமூகத்திற்கெதிரான சட்டம் காரணம்

அமெரிக்காவின் ரென்னசீ மாகாணத்தின் நாஷ்வில் நகரில் நேற்று (மார்ச் 27) நடைபெற்ற பாடசாலைப் படுகொலையின்போது மூன்று மாணவர்களும் மூன்று ஆசிரியர்களும் கொல்லப்பட்டனர். இக்கொலைகளைச் செய்தவர் 28 வயதுடைய ஓட்றி ஹேல் பெண்ணாகப் பிறந்து ஆணாகப் பால்மாற்றம் செய்தவர் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

கிறிஸ்தவ மிஷனரிகளால் நடத்தப்படும் இவ்வாரம்பப் பாடசாலையில் 6 முதல் 12 வயது வரையான 200 மாணவர்கள் படிப்பதுடன் ஆசிரியர்களுட்பட 40 பணியாளர்களும் கடமையிலுள்ளார்கள். கொலையாளியான ஹேல் இப்பாடசாலையின் முன்னாள் மாணவராவார்.

துப்பாக்கிதாரி ஒரு பதின்ம வயதுப் பெண்ணெனவே முதலில் பொலிசாரால் அடையாளம் காணப்பட்டிருந்தாலும் பின்னர் அவரொரு பால் மாறி என அறிவிக்கப்பட்டிருக்கிறது. சட்டப்படி வாங்கிய இரண்டு ரைபிள்களுடனும் ஒரு கைத்துப்பாக்கியுடனும் பின்கதவால் நுழைந்த ஹேல் கீழ்த் தளத்தில் கொலைகளை நிகழ்த்திவிட்டு இரண்டாவது தளத்துக்குச் செல்லும்போது அங்கு பொலிசாரால் சுடப்பட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

ஹேலின் வீட்டைச் சோதனை செய்த பொலிசார் அங்கு அவர் போட்டிருந்த கொலைத் திட்டம் மற்றும் அவர் சார்ந்த அமைப்பொன்றின் ‘கொள்கை அறிக்கை’ (manifesto) ஆகியவற்றைக் கைப்பற்றியுள்ளனர். அவரது திட்டத்தின் பிரகாரம் இன்னுமொரு இடமே குறிவைக்கப்பட்டிருந்தது எனவும் அங்கு பாதுகாப்பு பலமாக இருந்ததால் அவர் இப் பாடசாலையைத் தேர்ந்தெடுத்திருந்ததாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர். அவரது அமைப்பின் அறிக்கையிலுள்ள விடயங்கள் எதையும் பொலிசார் வெளியிட மறுத்துவிட்டார்கள். ஹேல் இதற்கு முன்னர் குற்றங்கள் எதையும் புரிந்ததற்கான தரவுகள் எதுவுமில்லை எனக் கூறப்படுகிறது.

கொல்லப்பட்டவர்கள் 9 வயதுடைய இரு சிறுமிகளும் ஒரு சிறுவனுமாவர். மூன்று ஆசிரியர்களும் 60, 61 வயதுடையவர்கள். பாடசாலை கொவெனண்ட் பிறெஸ்பைற்றேறியன் தேவாலயம் ஒன்றினால் நடத்தப்படுகிறது.

பால்மாற்றச் சமூகத்தின் மீது ரென்னசி மாநில அரசினால் நடைமுறைப்படுத்தப்படும் கொள்கைகளுக்கு எதிரான ஒரு நடவடிக்கையாக இருக்கலாம் எனப் பொலிசார் சந்தேகிக்கின்றனர். சிறுவர்கள் மீது பால்மாற்ற அறுவைச்சிகிச்சைகள் செய்யப்படுவது மற்றும் பெண் வேடம் போட்டு அரங்கங்களில் நிகழ்வுகள் செய்வது போன்றவற்றை மாநில அரசு இம்மாதம் தடைசெய்துள்ளதாக அறிவித்திருந்தது. இதை எதிர்த்து எதிர்வரும் ஏப்ரல் 1 ம் திகதியைப் ‘பால் மாறிகளின் பழிவாங்கல் நாளாகக்’ (Trans Day of Vengeance) கொண்டாடும்படி வேர்ஜீனியாவைத் தளமாகக் கொண்ட ‘பால்மாறிகளின் தீவிர செயற்பாட்டாளர் அமைப்பு’ (Trans Radical Activist Network (TRAN)) கோரிக்கை விடுத்திருந்தது. வாஷிங்டன் தலைநகரில் கொண்டாடப்படவிருந்த ‘பால்மாறிகளின் படுகொலையை நிறுத்து’ (Stop trans genocide) என்னும் இந்நிகழ்விற்காகவும், தமது செயற்பாட்டாளர்களுக்கு ஆயுதப் பயிற்சிகள் வழங்குவதற்காகவும் நிதிசேர் நிகழ்வுகளை இவ்வமைப்பு ஒழுங்கு செய்திருந்தது.

ரென்னெசி போன்ற அமெரிக்காவின் தென் மாநிலங்களில் பால் மாற்றம், ஒருபாற் சேர்க்கை, கருத்தடை ஆகியவற்றுக்கெதிரான எதிர்ப்பிரசாரங்களை முன்னெடுப்பதில் அங்குள்ள தேவாலயங்கள் மற்றும் கிறிஸ்தவ அமைப்புக்கள் முன்னணியில் இருக்கின்றன. தீவிர வலதுசாரிப் போக்குடைய வாக்காளர்களின் வாக்குகளைப் பெறுவதற்காக அரசியல்வாதிகளும் அவர்களுக்குச் சாதகமான சட்டங்களை இயக்கிவருவது வழக்கம்.

பாடசாலைப் படுகொலைகள் அமெரிக்காவிற்குப் புதிதல்ல. அங்கு பாதுகாப்புக் கெடுபிடிகள் இல்லை என்பதால் மாணவர்கள் இலகுவாகக் குறிவைக்கப்படுகிறார்கள். பெரும்பாலான மாநிலங்களில் துப்பாக்கிகளை எவரும் இலகுவாக வாங்கிவிடவும் முடியும். அமெரிக்க அரசியலமைப்பின் பிரகாரம் ஒரு அமெரிக்கர் தனது பாதுகாப்பிற்காகப் பொதுவிடங்களில் துப்பாக்கியைக் கொண்டுசெல்ல முடியும். இதைக் கட்டுப்படுத்துவதற்கு ஜனநாயகக் கட்சி முயற்சிகளை மேற்கொண்டாலும் பெரும்பான்மையான குடியரசுக் கட்சி அவற்றை முறியடித்துவிடுவது வழக்கம். தேசிய றைஃபிள் அசோசியேசன் என்னும் அதிபலமுள்ள அமைப்பு தமது பண பலத்தால் அரசியல்வாதிகளை ‘வாங்கி விடுவதே இதற்குக் காரணம்.

இப்படுகொலையின் பின்னரும் வழக்கம் போல இறுக்கமான துப்பாக்கிச் சட்டங்கள் இயற்றப்படவேண்டுமென வெள்ளை மாளிகை அறிக்கை விட்டிருக்கிறது.