US & Canadaசிவதாசன்

அமெரிக்கா: திருடப்படாத ‘இடைத்’ தேர்தல்கள்

சிவதாசன்

உலகில் பெரிய ஜனநாயக நாடான அமெரிக்காவில் இடைத் (தவணைத்) தேர்தல்கள் முடிந்திருக்கின்றன. முடிவுகள் முற்றாக இன்னும் பெறப்படவில்லையாயினும் இதில் படு தோல்வியடைந்தவர்கள் முன்னாள் ஜனாதிபதி ட்றம்பும் அவரது MAGA மந்தைகளும் என்பது மட்டும் நிரூபணமாகிவிட்டது.

நடந்த முடிந்த தேர்தலை ‘இடைத்தவணைத்’ (Mid Term) தேர்தல் என அழைப்பார்கள். அதற்குக் காரணம் நடப்பில் இருக்கும் ஒரு ஜனாதிபதியின் 4 வருட தவணைக்காலத்தின் பாதிக்காலம் முடிந்தவுடன் வைக்கப்படும் தேர்தல் என்பதால். பிரித்தானிய அரசின் நடைமுறையைப் போலவே இங்கும் மேல் சபை (செனட்), கீழ்ச் சபை (பிரதிநிதிகள் சபை) என இரண்டு உண்டு. இந்த இரண்டும் சேர்ந்த ஒழுங்கை ‘காங்கிரஸ்’ என அழைப்பர். இந்த இடைத்தவணைத் தேர்தலின்போது 435 கீழ்சபைப் பிரதிநிதிகளும் 100 மேற்சபைப் பிரதிநிதிகளும் தெரிவுசெய்யப்படுகிறார்கள். சில வேளைகளில் இதர மாநில, நகராட்சிப் பிரதிநிதிகளுக்குமான தேர்தல்களும் இதே நாளில் நடைபெற்றாலும் (state governors, mayors etc.) அவை வருடத்தில் எப்போதும் நடைபெறலாம். காங்கிரஸ் மற்றும் மாநில பிரதிநிதிக்களுக்கான தகமைகளைத் தீர்மானித்து வேட்பாளர்களைப் பொறுக்கும் கடமையை ‘பிறைமறீஸ்’ (Primaries) எனப்படும் தொகுதிவாரியான / கட்சி ரீதியான வாக்களிப்பு நடைமுறைகள் செய்கின்றன. அந்த வகையில் சரியாக நடைமுறைப்படுத்தப்படா விட்டாலும் உலகில் தலைசிறந்த ஜனநாயக நடைமுறை அமெரிக்காவில்தான் இருக்கிறது என்பதில் எனக்கு மாற்றுக் கருத்தில்லை.

பொதுவாக இந்த இடைத் தவணைத் தேர்தல்களை நடப்பில் இருக்கும் அரசாங்கத்தின் பெறுபேற்று அளவிடுதலாக அமெரிக்கர்கள் மட்டுமல்ல உலகமே கணிப்பதுண்டு. அரசாங்கம் என்பதனைவிட நடப்பிலிருக்கும் ஜனாதிபதியின் மீதான ‘தவணைப் பரீட்சை’ எனவே பார்க்கப்படுகிறது. ஒரு ஜனாதிபதி தான் விரும்பிய கொள்கைகளை நடைமுறைப்படுத்த வேண்டுமானால் மேல் மற்றும் கீழ்ச் சபைகளின் (காங்கிரஸ்) ஆதரவு வேண்டும். ஒபாமா காலத்திலிருந்து மக்களுக்குப் பயன்படக்கூடிய பல மிகச் சிறந்த கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதற்கு காங்கிரஸ் தடையாகவிருந்திருக்கிறது. அதே வேளை சில சந்தர்ப்பங்களில் மேல்/கீழ் சபை உறுப்பினர்கள் கட்சி சாராது வாக்களித்து சில சட்டங்களை நிறைவேற்றியுமிருக்கிறார்கள். இதைவிட உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஒரு நடப்பிலிருக்கும் ஜனாதிபதிக்கு இருக்ககூடிய முக்கிய அரண். அவர்களை நியமிக்கும் விடயத்தில் ஜனாதிபதிக்கு காங்கிரஸ் ஒத்துழைப்பு இருப்பது அவசியம். இக் காரணங்களுக்காக இந்த இடைத் தவணைத் தேர்தல்கள் மிக முக்கியமானவை.

ஜனாதிபதி பைடன் நிர்வாகம், 2020 இல் ஆரம்பத்ததிலிருந்து, பல உலகரீதியான சவால்களுக்கு முகம்கொடுக்கவேண்டி ஏற்பட்டிருந்தது. அவற்றில் சில பைடனின் சுய நடவடிக்கைகளின் நேரடி விளைவுகள். சில கோவிட் பெருந்தொற்றினால் ஏற்பட்டவை. சில உலகெங்கும் ஏற்பட்டுவரும் தீவிர வலதுசாரி எழுச்சியின் பெறுபேறுகள். அமெரிக்காவில் இந்த எழுச்சியை வெளிப்படுத்தும் கொடி அந்த நாட்டின் சிறந்த கோமாளிகளில் ஒருவரான ட்றம்பின் கைகளில் திணிக்கப்பட்டிருக்கிறது. அதனால் இத் தேர்தலில் குடியரசுக் கட்சி எதிர்பார்த்த அளவு வெற்றியைப் பெறவில்லை என்கிறார்கள் சில வல்லுனர்கள். குடிரசுக்கட்சி வேட்பாளர்களாயிருந்தாலும் அவர்களைப் பிடிக்காவிட்டால் ட்றம்ப் பகிரங்கமாக அவர்களைத் தூஷிப்பார். அவரது பலமும் பலவீனமும் அதுதான். இதனால் இத்தேர்தலில் ட்றம்ப் இரண்டாவது தடவை தோற்றிருக்கிறார் என ஏளனமாகப் பல அவதானிகள் கருத்துத் தெரிவித்துள்ளனர். ஆனால் 2024 இல் நடைபெறவிருக்கும் ஜனாதிபதி தேர்தலில் குடியரசுக் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வருமென்பதுவே எனது கணிப்பு. காரணங்கள்:

நடப்பு ஜனாதிபதி பைடனின் செல்வாக்கு 39-41 வீதத்தை விட மேலெழுந்ததாக சமீபகால கருத்துக்கணிப்புகள் காட்டவில்லை. அவரது தேர்தல் ‘திருடப்பட்டது’ என்பதை நம்புவதற்கு அமெரிக்காவில் இன்னும் பல மில்லியன் மக்கள் இருக்கிறார்கள். ட்றம்ப் அதற்குத் தினமும் எண்ணையூற்றி வருபவர்.

பைடன் திரும்பவும் இரண்டாவது தடவை தேர்தலில் நிற்கக்கூடாது என்பதை வலியுறுத்தி ஜனநாயகக் கட்சிக்குள் போராட்டம் வலுத்து வருகிறது. இவர்கள் தீவிர இடதுசாரி பேர்ணி சாண்டர்ஸின் ஆதரவாளர்கள் என முத்திரை குத்தப்பட்டாலும் சிலநாட்களின் முன்னர் எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்புகளின்படி ஜனநாயகக்கட்சி வாக்காளர்களில் மூன்றிலொரு வீதம் பைடன் மீண்டும் தேர்தலில் நிற்பதை எதிர்க்கிறார்கள். அதற்குக் காரணம் அவர் உலக ஏகாதிபத்திய முட்டுக்கால்களில் ஒன்றான இராணுவ உற்பத்திக் குழுவுடன் (military industrial complex) மிக நெருங்கிய உறவைப் பேணுபவர் என்பதால். கட்சி வாக்காளர்கள் தற்போது ‘Don’t Run Joe’ என்ற சுலோகத்தின் கீழ் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றார்கள். பல பிரபல காங்கிரஸ் உறுப்பினர்கள் இதற்கு பகிரங்க ஆதரவைத் தெரிவித்து வருகிறார்கள்.

பைடனின் வெளிவிவகாரக் கொள்கை, குறிப்பாக ரஷ்யா, சீனா சார்ந்தது, அமெரிக்க தீவிர வலதுசாரிகளை உசுப்பி விடுவதில் ரஸ்யாவின் பங்கு நிறைய இருக்கிறது என்பது நிரூபிக்கப்பட்ட ஒன்று. அமெரிக்கா, ரஸ்ய உள்விவகாரங்களில் நீண்டகாலமாகத் தலையிட்டு வருவதும் உண்மைதான். ஆனால் புட்டினின் வருகையோடு அது திசை திருப்பப்பட்டிருக்கிறது. ரஸ்யாவுக்குத் தேவையான ஆதரவாளர்களைத் திரட்டிக் கொடுப்பது ட்றம்ப். தான் ஒரு சர்வாதிகாரியாக வலம்வரவேண்டும் என உள்ளார்ந்த ஆசையுடன் வலம் வரும் ட்றம்ப் போன்றவர்க்கு புட்டின், கிம் ஜொங்க் போன்றவர்கள் ஆதர்ஷ புருஷர்கள். 2019 இல் தேர்தல் திருடப்பட்டது என்பதை ட்றம்ப் நம்புவதற்கு இந்த புருஷ வழிபாடும் ஒரு காரணம்.

இன்றைய அமெரிக்காவின் ‘உழைக்கும் வர்க்கம்’ பண்ணைகளில் பணியாற்றும் வெள்ளையர்கள். குடியரசுக் கட்சி இப்போது இந்த தொழிலாளர்களின் கட்சி. ஜனநாயகக் கட்சி தனது ‘உழைக்கும் வர்க்க’ அடையாளத்தை எப்போதோ இழந்துவிட்டது. தொழிலாளர்கள் எப்போதும் தமது நலன்களுக்காகப் போராடுபவர்கள் என்பதை ஏற்றுக்கொண்டால் இந்த பண்ணை விவசாயிகள் தமது நலன்களுக்காகப் போராடுகிறார்கள் என்பதையும் அவர்களுக்கு இல்லாத தலைமையை ட்றம்ப் போன்றவர்கள் வழங்குகிறார்கள் என்பதனையும் ஏற்றுக்கொள்ள வேண்டும். மாறாக ஜனநாயகக் கட்சி இப்போது ஒரு மேல்தட்டு மனிதர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சி. அடையாளத்துக்காக அது இன்னமும் ‘சிறுபான்மையினரைத்’ தழுவி அரசியல் செய்கிறது. வெள்ளைத் தொழிலாளர் கட்சி இப்போது விழித்தெழுந்திருக்கிறது. ஜனநாயகக் கட்சியினால் கைவிடப்பட்ட நிலையில் 46.8 மில்லியன் கறுப்பினத்தவரும், 60.5 மில்லியன் ஹிஸ்பானிய மக்களும் இப்போது குடியரசுக்கட்சி பக்கம் எட்டிப்பார்க்க ஆரம்பித்திருக்கிறார்கள். கலிஃபோர்ணியா, ரெக்ஸாஸ், ஃபுளோறிடா ஆகிய மாநிலங்களில் குடியரசுக் கட்சியின் பலம் அதிகரித்து வருகிறது. ஹிஸ்பானிய மக்களை அவதூறு செய்து அவர்களைத் தடுக்க வேலிகளை அமைக்க எத்தனித்த ட்றம்பின் முயற்சிகளுக்குப் பிறகும் இது நடைபெறுகிறது. எனவே குடியரசுக் கட்சி அடுத்த ஜனாதிபதியை உருவாக்கும் என்பதில் சந்தேகமில்லை.

இந்தத் தேர்தலில் வென்ற இரு குடியரசுக் கட்சிக்காரர் குறிப்பிடக்கூடியவர்கள். ஜோர்ஜியாவின் ஆளுனராக இரண்டாவது தடவை வெற்றிபெற்றிருக்கும் பிறையன் கெம்ப் மற்றது ஃபுளோறிடா ஆளுனர் றொண் டெசான்ரிஸ். ஜோர்ஜியா நிரம்ப கறுப்பின மக்கள் வாழும் பிரதேசம். ஃபுளோறிடா நிரம்ப ஹிஸ்பானியர்கள் வாழும் பிரதேசம். இவர்களின் வாக்குகளே அங்கு வெற்றிகளைத் தீர்மானிக்கின்றன. இவ்விருவரும் குடியரசுக் கட்சிக்காரர். அத்துடன் இவ்விருவரும் ட்றம்பின் எதிரிகள். காரணம் இவ்விருவரும் 2024 ஜனாதிபதி தேர்தலில் குடியரசுக்கட்சி சார்பில் போட்டியிடப் போகிறவர்கள்.

அமெரிக்காவின் வெள்ளை ஏகாதிபத்திய நகர்வு ஆரம்பித்து சிலவருடங்களாயினும் ட்றம்பின் வருகையுடன் அது வெளியில் தலைகாட்டியிருக்கிறது. இதை முன்னெடுக்கும் முக்கிய கருவி மதம். ஜோர்ஜியாவிலும், ஃபுளோறிடாவிலும் வாழும் சிறுபான்மை இனங்கள் தங்கள் இன அடையாளங்களை விட மத அடையாளங்களுக்கே முக்கியம் கொடுத்திருக்கிறார்கள் என்பது வல்லுனர்களின் அவதானிப்பு. தமது இழந்த அதிகாரத்தை மீட்டெடுக்க மத ஸ்தாபனங்கள் கையாளும் வழிகளில் இதுவுமொன்று. கலாச்சாரம், பண்பாடு என மாற்று அடையாளங்களை முன்வைத்து அவர்கள் முன்னெடுத்துவரும் போராட்டங்கள் பின்னணியில் நடைபெற்று வருகின்றன. இது உலகம் பூராவும் நடைபெறும் சங்கதி. தீவிர இடதுசாரிகளின் இடதுபக்க நகர்வு இந்த துருவப் பிரிவினைக்கு உரமிட்டு வருகிறது. அமெரிக்காவின் கருத்தடை சமாச்சாரம் இன அடையாளங்களைத் தகர்த்து மத அடையாளங்களைத் தரிசிக்க வழிசெய்திருக்கிறது. ஜோர்ஜியாவின் மேல்சபைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் இருவரும் (குடியர்சு, ஜனநாயக) கறுப்பினத்தவர்கள். குடியரசுக் கட்சியைச் சேர்ந்த ஹேர்ஷெல் வார்க்கரின் வெற்றி டிசம்பர் 6 உறுதியாகும் என அவரது மத ஆதரவாளர் (வெள்ளை மற்றும் கறுப்பினத்தவர்) இப்போதே ஆரத் தழுவிக்கொள்கிறார்கள். இத்தனைக்கும் இன ரீதியாக அமெரிக்காவின் அதி பிளவுபட்ட மாநிலம் ஜோர்ஜியா. மதம் பலமாக வீசுகிறது.

இத் தேர்தல் முடிவுகள் உறுதியாகும்போது மேல் சபையில் சிலவேளைகள் அதிகாரம் குடியரசுக் கட்சிக்கும், கீழ்சபையில் அதிகாரம் நிச்சயமாகக் குடியரசுக் கட்சிக்கும் போகுமென எதிர்பார்க்கப்படுகிறது. குடியரசுக் கட்சிக்கு 49 மேல்சபை ஆசனங்களும் ஜனநாயகக் கட்சிக்கு 48 ஆசனக்களும் கிடைத்திருக்கின்றன. நெவாடா, அரிசோனா, ஜோர்ஜியா ஆகிய மூன்று மாநிலங்களின் முடிவுகள் இன்னும் வெளியாகவில்லை. எப்படியாகினும் மேல் சபையும் குடியரசுக்கட்சியின் வசம் செல்லும் சாத்தியம் இருக்கிறது. எப்படியானாலும் குடியரசுக்கட்சி எதிர்பார்த்த ‘சிவப்பு’ அலை அடிக்கவில்லை. இத் ‘தோல்விக்கான’ பழி முழுவதும் தற்போது ட்றம்பின் தலைமீது குவிக்கப்படுகிறது. தமது வெற்றிக்காக மதில்களிலிருந்து ட்றம்ப் புகழ் பாடியவர்கள் இப்போது மற்றப்பக்கம் குதித்து வருகிறார்கள். ட்றம்ப் ‘பிராண்ட்’ அரசியலுக்கு முழுக்குப் போட்டுவிட்டு புதியதொரு தலைமையின் கீழ் அணிவகுக்க குடியரசுக் கட்சி தயாராகிவிட்டது. இந்த நிலையில் பைடன் மீண்டும் தேர்தலில் நிற்பாரானால் அதுவும் குடியரசுக்கட்சிக்குக் கிடைக்கும் வெற்றியாகவே இருக்கும்.

இது இடைத் தவணைத் தேர்தல் என்றபடியால் பைடனுக்கு பாதையைத் திருப்பக் காலமிருக்கிறது என்கிறார்கள். ஆனால் யூக்கிரெய்ன் போரும் அதனால் விளைந்த பணவீக்கமும் சாதாரண மக்களின் பைகளை விரைவாகக் காலிசெய்து வருகின்றன. உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் இரண்டு மடங்களுக்கு மேல் சென்றுவிட்டன. இது சாதாரண அடித்தட்டு மக்களை ஒன்றுசேர்த்து வருகிறது. மேல்தட்டு மக்கள் கைதட்டிச் சிரித்துக்கொள்வதோடு பைகளை நிரப்பிக்கொண்டிருக்க கீழ்த்தட்டு மக்கள் தலைகளில் கைகளை வைத்துக்கொண்டு பைடனைத் திட்டவாரம்பித்திருக்கிறார்கள். யூக்கிரெய்ன் போர் பைடனின் போர் என்பதும் நாட்டின் பொருளாதாரத்தை மோசமாக்கியதில் பைடனுக்கு முக்கிய பங்குண்டென்றும் மக்கள்நம்பவாரம்பித்திருக்கிறார்கள். இந்த தேர்தல் அம்மாற்றத்தைக் காட்டியிருக்கிறது. கெம்ப், டெசான்ரிஸ் போன்றோரின் வெற்றி ட்றம்ப் அரசியலைப் புறம்தள்ளிவிட்டு குடியரசுக் கட்சியை ‘றிபிராண்ட்’ பண்ணியிருக்கிறது. 2024 இல் குடியரசுக் கட்சிஆட்சியைக் கைப்பற்ற பைடன் வழியமத்திக் கொடுத்திருக்கிறார் என்பதையே இத் தேர்தல்கள் எதிர்வுகூறியுள்ளன.