Spread the love
சிவதாசன்

கோவிட்-19 நோய்ப்பரவலைத் தடுப்பதற்காக நடைமுறைப்படுத்தப்பட்ட ‘ஊரடங்கு உததரவுக்கு’ எதிராக அமெரிக்காவின் பல மாநிலங்களிலும் வீதிப் போரட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

குறிப்பாக ஜனாதிபதி டொனால்ட் ட்றம்ப்புக்கு ஆதரவான குடியரசுக்கட்சி வாக்காளர்கள் அதிகமான மாநிலங்களில் தீவிர வலதுசாரி, மதசார்பு அமைப்புகள் இப் போராட்டங்களில் முன்னணி வகிக்கின்றனர். இந்த உத்தரவின் மூலம் பல வணிக நிறுவனங்கள் பெருந்தொகையான வருவாயை இழந்து வருவதால் அந் நிறுவனங்களின் அன்பளிப்பில் தங்கியுள்ள அரசியல்வாதிகள் இப் போராட்டங்களின் பின்னாலுள்ளனர் எனப் பொதுவாகக் கருதப்படுகிறது.

ஜனாதிபதி தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருப்பதால், அதல பாதாளத்தில் வீழ்ந்துகொண்டிருக்கும் பொருளாதாரத்தையும், அது சார்ந்த வேலை வாய்ப்பையும் அதிகரிப்பது அரசியல்வாதிகளுக்கு உதவியாகவிருக்கும் என்பது பொது விதி.

அமெரிக்காவைப் பொறுத்தவரையில் கோவிட்-19 நோய் வித்தியாசமான படிமுறையைப் பாவிக்கிறது. அங்கு கோவிட்-19 நோயினால் அதிகம் மரணமடைந்தவர்கள் வசதிகள் குறைந்த, பெரும்பாலும் கறுப்பின மக்களும், ஆசியர்களும், லத்தீன் அமெரிக்க மக்களுமாவர். இதற்குக் காரணம் பல. 1) வறுமை 2) உடலுழைப்பினால் மணித்தியாலச் சம்பளத்துக்கு வேலை செய்பவர்கள் 3) பொதுப் போக்குவரத்தைப் பாவிப்பவர்கள் 4) காப்புறுதி எடுக்க வசதியில்லாமையால் மருத்துவ சேவைகளை நாடாதவர்கள் 5) அமெரிக்கக் குடியுரிமை பெறாதவர்கள் 6) வெள்ளையர்கள் செய்ய விரும்பாத வேலைகளைச் செய்பவர்கள் என்று பல.

அதே வேளை, வசதியுள்ள நகர் வாழ் மேல்தட்டு வாசிகள் பெரும்பாலும் வீட்டிலிருந்து வேலை செய்யவும், பொதுப் போக்குவரத்தைப் பாவிக்கத் தேவையில்லாமலும், காப்புறுதிகளை வைத்திருப்பதால் தேவையான போது மருத்துவ சேவைகளைப் பெற்றுக்கொள்ளவும் முடிந்தவர்களாயுள்ளனர்.

அமெரிக்காவின் தென் மாகாணங்களில் வாழும் (bible belt) வெள்ளையின மக்கள் இயல்பாகவே தமது கிராமங்களிலும், பண்ணைகளிலும் வெளியுலகத் தொடர்புகள் தேவையற்று வாழ்வதால் அவர்களுக்கு நோய்த் தொற்று வருவதோ அல்லது ஏற்பட்ட மரணங்களோ ஒப்பீட்டளவில் குறைவு.

ஜோர்ஜியா போன்ற மாநிலங்களில் (10 வது இடம்) இறப்பு வீதம் அதிகமாக இருப்பதற்குக் காரணம் இறப்பவர்களில் பெரும்பான்மை இன்னமும் வறுமையில் வாழும் முன்னாள் அடிமைகளின் தலைமுறைகள் தான். அரச மருத்துவ மனைகளில் மட்டுமே இவர்கள் சிகிச்சை பெறுகிறார்கள். இங்கு போவதை விட வீட்டிலிருந்து இறக்க விரும்புபவர்கள் பலர் என ஒரு மருத்துவ சேவையாளர் தெரிவித்தார். தனியார் மருத்துவமனைகளுக்குப் போக வசதியில்லாத காரணத்தால் வறுமைப்பட்ட பலர் குடும்பம் குடும்பமாக மரணிக்கிறார்கள் என அவர் கூறுகிறார்.

இந்த ‘ஊரடங்கு உத்தரவால்’ இறப்பவர்கள் வறிய மக்களாகவிருந்தாலும், அவர்களது குடும்பங்கள் தான் இதனால் மேலும் வருமானங்களை இழந்து பாதிக்கப்படுபவர்கள். இவ்வூரடங்கு உத்தரவு தொடர்ந்தால் பல மில்லியன் அமெரிக்கர்கள் வேலைகளை இழக்கவேண்டி வரும். கனடாவில் அரசாங்கம் 4 மாதங்களுக்கு நிவாரணப் பணமாக $8,000 டாலர்கள் வரை கொடுக்கிறது. ஆனால் உலகின் அதி பணக்கார, வலுவான நாடு தன் மக்களுக்கு மொத்தமாகத் தலா $1,000 டாலர்களை மட்டுமே கொடுக்கிறது.

Related:  கோவிட் | இந்தியாவில் தடுப்பு மருந்து விநியோகம் ஆரம்பம்


எனவே இப்படியான ஆர்ப்பாட்டங்களை அரசியல்வாதிகள் உசுப்பி விட்டுப் பணம் கொடுத்து மக்களை வரவழைத்தாலும், ஊரடங்கு உத்தரவை விரைவில் முடித்துவைக்க வேண்டுமென்ற குரல்கள் வறிய மக்களிடமிருந்தும் எழகிறது.

வறிய மக்களைப் பொறுத்தவரையில் கோவிட்டால் கொல்லப்படுவதும், பட்டினியால் கொல்லப்படுவதும் ஒன்றுதான். ‘நோயறிகுறிகள் இருந்தாலும், குழந்தைகளுக்குச் சாப்பாடு போடுவதற்காக, ரைலெனோலைப் (மருந்தைப்) போட்டுக்கொண்டு வேலைக்குப் போகும் தாய்மார்களுக்கு வேறெந்தவகையிலும் புத்திசொல்ல முடியாது. அதுதான் அமெரிக்கா.

கோவிட்-19 நோய் நாட்டுக்கு நாடு வித்தியாசமான நிகழ்ச்சி நிரலைப் பாவிக்கிறது. அமெரிக்காவைப் பொறுத்தவரையில் அதன் நிகழ்ச்சி நிரல் கறுப்பு-வெள்ளை என்பதைப் புள்ளிவிபரங்கள் நிரூபிக்கின்றன. மருத்துவர்கள் கூறும் ‘underlying conditions’ என்பது, அமெரிக்காவைப் பொறுத்த வரையில், வித்தியாசமான கருத்தைக் கொண்டது.

வறுமை, துவேசம் இவற்றுக்குத் தப்பி மருந்துகள், சேவைகள், உபகரணங்கள் வந்தால் மட்டுமே ‘கறுப்பு அமெரிக்கா’ பிழைத்துக்கொள்ளும். அவர்களுக்கு ஊரடங்கு உத்தரவு புதிதாகப் போடப்பட்ட விலங்கு என்பதுவே யதார்த்தம்.

கோவிட்-19 அமெரிக்காவை சிலநூற்றாண்டுகள் பின் தள்ளிச் சென்றாலும் கறுப்பு அமெரிக்கா எந்த மாற்றங்களையும் காணப்போவதில்லை.

இன்றய அமெரிக்க புள்ளி விபரம், தெரிந்தது – 706,000 தொற்றுக்கள், 31,000 மரணங்கள். தெரியாதது? இறந்தவர்கள் யார்?

திறந்து விடுங்கள், பிழைத்துப் போகட்டும்!

Print Friendly, PDF & Email