World

அமெரிக்காவுக்கு நாடு கடத்தல்: ஜூலியன் அஸாஞ் மேன்முறையீடு செய்ய நீதிமன்றம் அனுமதி

அமெரிக்காவின் கோரிக்கைக்கு இணங்க விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அஸாஞ்சை நாடு கடத்த பிரித்தானியா எடுத்த முயற்சிக்கு லண்டன் நீதிமன்றம் தற்காலிக தடையை விதித்துள்ளது.

அமெரிக்காவின் பாதுகாப்புக்கு குந்தகம் விழைவிக்கும் வகையில் இரகசியமெனக் கருதப்பட்ட பல விடயங்களைத் தனது விக்கிலீக்ஸ் இணையத்தளத்தில் பகிரங்கப்படுத்தினார் என்ற குற்றத்திற்காக ஊலவுச் சட்டத்தின் கீழ் அமெரிக்கா ஜூலியன் அஸாஞ்சின் நாடுகடத்தலைக் கோரியிருந்தது. அஸாஞ்சுக்கு ஆதரவாக பல உலக மனித உரிமை அமைப்புகளும் அவரது நண்பர்களும் தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுத்துவரும் நிலையில் லண்டனிலுள்ள எக்குவாடோர் நாட்டின் தூதரகம் இவருக்கு அபயம் தந்து பாதுகாத்தது. இருப்பினும் அமெரிக்கா மற்றும் பிரித்தானியா ஆகியவற்றின் அழுத்தங்கள் காரணமாக எக்குவாடோர் தூதரகம் அவரை ஏப்ரல் 2019 முதல் அவரது அபயத்தை மறுத்து அவரை வெளியேற்றியது. அன்று முதல் அவர் பிரித்தானிய அதியுச்ச பாதுகாப்பு சிறையொன்றில் கைதியாக இருந்து வருகிறார். இவ்வேளை அவர் அமெரிக்காவுக்குத் தன்னை நாடுகடத்தினால் அங்கு தான் கொல்லப்படுவேன் என்ற அச்சத்தில் நாடுகடத்தலை நிறுத்துமாறு லண்டன் நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்திருந்தார். இதன் மீதான தீர்ப்பு இன்று (மே 21) வெளியாகியிருக்கிறது. இதன் பிரகாரம் அஸாஞ்சினுடைய கோரிக்கை தொடர்பாக மேலும் விசாரணைகள் மேற்கொள்ளப்படவேண்டுமெனக் கூறி நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது.

அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் ஈராக், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் புரிந்த போர்க்குற்றங்களை விக்கிலீக்ஸ் தொடர்ச்சியாக வெளியிட்டு வருகிறது. இதைத் தாங்க முடியாத பிரித்தானியா உடபட்ட மேற்கு நாடுகள் தன்னை அமெரிக்காவுக்கு நாடுகடத்த திட்டமிட்டுச் செயலார்றி வருகின்றன என அஸாஞ் கூறி வருகிறார். அஸாஞ் அமெரிக்காவுக்கு நாடுகடத்தப்பட்டால் அங்கு அவர் வாழ்நாள் முழுவதும் தனிமைப்படுத்தப்பட்டு அங்கேயே இறக்கவும் நேரிடலாம் என அவரது ஆதரவாளர்கள் கருதுகின்றனர்.

அஸாஞ்சை அமெரிக்காவுக்கு நாடு கடத்துவதற்காக அமெரிக்க வழக்கறிஞர்கள் லண்டல் தங்கி அதற்கான முயற்சிகளை நீண்ட காலமாக முன்னெடுத்து வருகிறார்கள். இதில் அவர்கள் ஓரளவு வெர்றி கண்டு ஜூன் 2022 இல் அப்போதைய உள்நாட்டு அமைச்சரான பிரீதி பட்டேல் அதற்கான அனுமதியையும் வழங்கியிருந்தார். ஆயினும் அஸாஞ்சின் வழக்கறிஞர்கள் பல மேன்முறையீடுகளைச் செய்து அவரைத் தொடர்ந்தும் லண்டனிலேயே வைத்திருக்க உதவி புரிந்து வருகின்றனர்.

நேற்று (மே 20) இவ்வழக்கு லண்டன் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது அஸாஞ்சின் வழக்கறிஞர்களது வாதத்தை ஏற்றுக்கொண்ட இரண்டு நீதிபதிகள் அஸாஞ்சின் பாதுகாப்பிற்கு அமெரிக்கா வழங்கிய உத்தரவாதம் போதாது எனக்கூறி இது பற்றி மேலும் விசாரணைகள் மேற்கொள்ளப்படவேண்டுமெனத் தீர்ப்பளித்துள்ளனர்.

அஸாஞ்சின் நாடுகடத்தலுக்கு எதிராக மாதங்கி அருட்பிரகாசம் (MIA) உட்படப் பல பிரபலங்களும் செயற்பாட்டாளர்களும் தொடர்ச்சியாகப் போராடி வருகின்றனர் என்பது குறிப்பிடத் தக்கது.