அமெரிக்காவில் மற்றுமொரு சூட்டுச் சம்பவம் – 5 பேர் மரணம்

மேற்கு டெக்சாஸில் இன்று நடைபெற்ற சூட்டுச் சம்பவமொன்றில் குறைந்தது ஐந்து பேராவது கொல்லப்பட்டும் 21 பேர் காயமடைந்துமிருக்கலாம் எனவும் நம்பப்படுகிறது. பாதிக்கப்பட்டவர்களில் காவற்துறையினரும் அடங்கியிருப்பதாக நம்பப்படுகிறது துப்பாக்கிதாரிகளுக்கு ஆதரவான, பாவனையை இலகுவாக்கும் , பல சட்டங்களை டெக்சாஸ் மாநிலம் நாளை, செப்டம்பர் 1, 2109 அன்று, நடைமுறைப்படுத்துவதாக இருக்கும் நிலையில் இது நடைபெற்றிருக்கிறது.

மேற்கு டெக்சாஸின் ஒடிசா, மிட்லாண்ட் ஆகிய நகரங்களில் வாகனத்தை ஓட்டிக்கொண்டே துப்பாக்கிதாரி கண்டபடி சுட்டுக்கொண்டு சென்றதாக காவற்துறை தெரிவிக்கிறது.

துப்பாக்கிதாரியான ஒரு வெள்ளைக்கார ஆண் காவற்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார் எனவும் வேறு சிலரும் இவருக்குத் துணையாக இருந்திருப்பார்கள் என்ற வதந்தி மீது விசாரணகள் செய்யப்படுவதாகவும் தெரியவருகிறது.

மிட்லாண்ட் நகரில் பெருந்தெரு ஒன்றில் சென்றுகொண்டிருந்த வாகனமொன்றைக் காவல் துறை அதிகாரி ஒருவர் நிறுத்த முயன்றபோது சந்தேகநபர், காவல்துறை அதிகாரியைச் சுட்டுவிட்டு தபால்துறை வாகனமொன்றைத் திருடிக்கொண்டு தப்பி ஓடுகையில் பொதுமக்கள் மீது துப்பாக்கிப் பிரயோகத்தைச் செய்தார் என அறியப்படுகிறது. பின்னர், ஒடிசா நகரில் வைத்து அவர், துரத்திவந்த காவல்துறையினரால் கொல்லப்பட்டார்.

டெக்சாஸ் நகரமான எல் பாசோவில் 22 பேர் கொல்லப்பட்ட சம்பவம் நடைபெற்று சரியாக நான்கு வாரங்களில் இது நடைபெற்றிருக்கிறது.

அமெரிக்க அரசியலமைப்பின் இரண்டாவது திருத்தத்தினால் அதன் குடிமக்களுக்கு வழங்கப்பட்ட உரிமைகளை, வரப்போகும் சட்டங்கள் பாதுகாக்கும் என்றும் அவை பற்றிய விளக்கங்களை விபரித்தும், கடந்த வியாழனன்று, துப்பாக்கி பாவனையாளரின் சங்கமாகிய நாஷனல் றைபிள் அசோசியேசன் (NRA) தன் உறுப்பினர்களுக்கு அறிவித்திருந்தது.