World

அமெரிக்காவில் பணி புரிவதற்கான H-1B, H-4 விசாக்களுக்கு தற்காலிக தடை – அமெரிக்க ஜனாதிபதி பிரகடனம்!

வாஷிங்டன் ஜூன் 22, 2020: அமெரிக்காவில் சிறப்புப் பணிகளைச் செய்வதற்கென வழங்கப்பட்டுவந்த தற்காலிக பணியனுமதி, படிப்பனுமதி விசாக்களைத் தற்காலிமாக நிறுத்திவைக்கும் உத்தரவை அமெரிக்க ஜனாதிபதி இன்று பிறப்பித்துள்ளார்.

  • இந்த அறிவிப்பு H-2B, H-4, L-1, J-1 விசா அனுமதிகளைப் பாதிக்கும்
  • H-1B என்பது ஒருவருக்கு அமெரிக்காவில் வேலை செய்வதற்கு மட்டும் வழங்கப்படும் (non-immigrant) விசா. பெரும்பாலான அமெரிக்க நிறுவனங்கள் தமது தொழில்நுட்பம், கணக்கியல், கணிதம், விஞ்ஞானம், மருத்துவம், நிதி போன்ற துறைகளுக்குத் தேவையான பட்டதாரிகளை இந்த முறையான விசா மூலம் பெற்றுக்கொள்கின்றன.
  • H-4 விசா, H-1B விசா உள்ளவரின் கணவன் / மனைவிக்கு வழங்கப்படுகிறது. அப்படியான ஒருவர் அமெரிக்காவில் தங்கிப் படிப்பதற்கு அது அனுமதிக்கிறது. அமெரிக்க நிறுவனங்களில் வேலை செய்ய அனுமதி (Employment Authorization Documents (EAD)) பெற்று அவர்கள் வேலை செய்யவும் அனுமதியுண்டு. அத்தோடு அவர்கள் நிரந்தர வதிவுடமைக்காகவும் (பச்சை மட்டை) விண்ணப்பிக்கலாம்.
  • H-2B விசாத் திட்டத்தில் விவசாயமற்ற தொழில்களுக்கு பருவகாலப் பணிகளுக்கு வேலையாட்கள் தருவிக்கப்படுகிறார்கள்
  • J-1 விசா, கலாச்சாரப் பரிமாற்றத்தின் கீழ் வழங்கப்படும் அனுமதி
  • L-1 பல்தேச நிறுவனங்களில் முகாமையாளருக்கும், விசேட பணியாளருக்கும் வாழங்கப்படுகிறது
  • அமெரிக்காவுக்கு வெளியில் பச்சை மட்டைகளை (green cards) விநியோகிப்பதுவும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருக்கிறது


H-1B எனப்படும் இப் பணிவிசாக்களைப் பாவித்து வெளி நாடுகளிலிருந்து பெருந்தொகையான பட்டதாரிகளையும், நிபுணர்களையும் அமெரிக்க நிறுவனங்கள் தருவித்து தங்களை வளர்த்து வருவதுண்டு. கூகிள், அமசோன், அப்பிள் போன்ற நிறுவனங்கள் குறைந்த செலவில் அதிக ‘மூளை’களைப் பெற்று வளர்வதற்கு இவ் விசா பெருமுதவி செய்துவந்தது. இந்த விசாவைப் பெற்று அமெரிக்கா வந்தவர்களில் 75% மானோர் இந்தியர்கள்.

H-1B விசாவைப் பெற்று அமெரிக்கா வந்தவர்களில் 75% மானோர் இந்தியர்கள்.

கோவிட்-19 நோய்த்தொற்றினால் அமெரிக்க பொருளாதாரம் வெகுவாகப் பாதிக்கப்பட்டவுடன் பல மில்லியன் உள்ளூர்ப் பணியாளர்கள் வேலைகளை இழந்துள்ளார்கள் என்பதைச் சுட்டிக்காட்டி, ஜனாதிபதி ட்றம்ப் இவ் விசாக்களைத் தற்காலிகமாக் இடைநிறுத்துவதாக அறிவித்திருக்கிறார்.

ஆனாலும் இது ஒரு தேர்தலில் வாக்குகளைப் பெறுவதற்கான ஒரு வித்தை எனப் பலர் விமர்சித்துள்ளனர். இவ் விசா மூலம் பல இந்தியர்கள் பலனடைந்து வந்ததும் அதை நிறுத்துவதனால் ட்றம்பினுடையை தீவிர வலதுசாரி இனவாத வெள்ளையர்களது வாக்குகளைப் பெறுவதற்கு அவர் முயல்கிறார் எனவும் ஒரு சாரார் கூறுகின்றனர்.

ஆனால் இதற்கான பாரிய எதிர்ப்பு பெரு வணிக நிறுவனங்களிடமிருந்து தான் வருகிறது. கூகிள் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி சுந்தர் பிச்சை இத் தடைக்குத் தனது கடும் எதிர்ப்பைத் தெரிவித்திருக்கிறார்.

கூகிள் நிறுவனத்தின் ஸ்தாபகர் 6 வயதில் ரஸ்யாவிலிருந்து வந்து குடியேறிய ஒருவர். இன்று அமெரிக்காவிலுள்ள கூகிள் நிறுவனத்தின் 8 வீதமானோர் 80 வித்தியாசமான நாடுகளிலிருந்து வந்த குடிவரவினர். இவர்களில் 75 வீதமானோர் அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் கல்விகளை முடித்தவர்கள்.

உள்நாட்டில் உள்ளவர்களுக்குத் தான் முதலில் வேலை கொடுக்கப்பட்வேண்டும் என ட்றம்ப் கூறுவது அமெரிக்காவின் பொருளாதரத்தை மீட்டெடுக்கும் என்பதைவிடத் தேர்தலில் தான் வெற்றிகொள்ளவேண்டுமென்ற குறியின் காரணமானதென்பதைப் புரிந்துகொள்ளும் பக்குவம் அவரது வலதுசாரி வாக்காளர்களிடம் இல்லை.கனடியர்களுக்கும் பாதிப்பு

ஜனாதிபதி ட்றம்பின் இத் திடீர் அறிவிப்பு கனடியர்களையும் பாதிக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. பலர் அமெரிக்க விசாவுடன் எல்லைகளைக் கடந்து அமெரிக்காவிற்குள் போய் பணியாற்றுகிறார்கள். பல பல்தேச நிறுவனங்கள் தலைமையகத்தை அமெரிக்காவில் கொண்டிருந்தாலும் கனடியர்களை அவர்கள் பணிக்கமர்த்துவது வழக்கம். இவ்வறிவிப்பின் மூலம் 525,000 வேலைகளை, அமெரிக்கர்களுக்கு உருவாக்கித் தருமென ட்றம்ப் நிர்வாகம் எதிர்பார்க்கிறது.

கடந்த இரண்டு வருடங்களில், வருடமொன்றுக்கு 4,000 H-1B விசா விண்ணப்பங்கள் கனடியர்களிடமிருந்து அனுப்பப்பட்டுள்ளன. மேலும் பலர் L-1 விசாவுக்கு விண்ணப்பித்துள்ளனர். பல நிர்வாகத் தரத்திலுள்ளவர்கள் பல் தேசிய நிறுவனங்களில் பணி புரிகிறார்கள். இவர்களெல்லாம் பாதிக்கக்கூடிய நிலைமை ஏற்படுமென ஒரு குடிவரவு அதிகாரி தெரிவித்தார்.

இத் தடை தற்காலிகமானதெனினும், அமெரிக்காவிற்கான நிரந்தரக் குடியனுமதியையும் , குறிப்பாக அகதிநிலைக் கோரிக்கையாளரையும் பாதிக்கும் ஆபத்துக்கள் நிறையவுண்டு.

உணவுப் பொருட்கள் தயாரிப்பு வேலையில் ஈடுபடுபவர்களௌக்கு H-2B விசா அனுமதிகளை வழங்குவதில் விசேட தளர்ச்சி இருக்கலாமென எதிர்ப்பார்க்கப்படுகிறது. தற்போது H-2B அனுமதி பெறுபவர்களில் 15 வீதமானோர் இத்தொழிலுக்கே வருகிறார்கள்.மறு தரப்பு

ட்றம்பின் இத் திடீர் அறிவிப்பின் பின்னால் தேர்தல் மட்டும் இல்லை என வாதிடும் பலர் இருக்கிறார்கள்.

H-1B விசாவுக்கு விண்ணப்பம் செய்பவர்களுக்கான வேலைகளுக்கு உள்ளூரில் பணியாட்களைப் பெற முடியாது என்பதில் உண்மையில்லை. ஆனால் அவர்களுக்கு அதிக சம்பளம் கொடுக்கவேண்டி வருமென்பதே பிரச்சினை. எனவே கூகிள் போன்ற நிறுவனங்கள் குய்யோ முறையோ என்று கத்திக் குளறுவது தமது இலாபத்தைப் பெருக்கிக்கொள்வதற்காக மட்டுமே.

இதனால் அமெரிக்கப் பண்டங்கள் உலக சந்தையில் போட்டியிட முடியாது; உற்பத்திச் செலவு அதிகமாகும் என்பது ஒரு வாதம். அதே வேளை இந் நிறுவனங்கள் முதலீட்டாளர்களின் இலாபநோக்கம் கருதி இயங்குபவை. எனவே அவை முதலீட்டாளர்களின் இலாபத்தை வைத்துத்தான் பண்டத்தின் விலையைத் தீர்மானிக்கிறார்கள்.

டிஸ்னி, AT&T போன்ற நிறுவனங்கள் தமது பணியாட்களை ஒப்பந்தத்தின் மூலம் தற்காலிகமாகப் பெறுகிறார்கள். அவர்கள் பறிப்பது அமெரிக்கர்களின் வேலைகளைத் தான்.

அமெரிக்க குடிவரவைக் கட்டுப்படுத்த வேண்டுமென விரும்பும் கடுநிலைவாதிகளைத் திருப்திப்படுத்த ட்றம்ப் இந்நடவடிக்கையையும் எடுத்திருக்கலாம். “அமெரிக்கர்களின் வேலைகளைப் பாதுகாக்க வேண்டி நாம் கொடுத்த நிரலில் சிலவ்ற்றையே ஜனாதிபதி நிறைவேற்றியிருக்கிறார்” என்கிறார் , குடிவரவுக் கல்வி மையத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் மார்க் கிரிகோரியன்.

ட்றம்ப் பதவிக்கு வந்ததிலிருந்து H-1B விசாவைக் கட்டுப்படுத்தவே வற்புறுத்தி வருகிறார். தற்போது கோவிட்-19 அவருக்கு ஒரு சந்தர்ப்பத்தை வழங்கியிருக்கிறது.