அமெரிக்காவில் இன்னுமொரு துப்பாக்கிச்சூடு | 9 பேர் மரணம் – ஒஹாயோவில் சம்பவம்
ஆகஸ்ட் 4, 2019
அமெரிக்காவின் ஒஹாயோ மாகாணத்தில் டேய்ரோன் நகரில் துப்பாக்கிச்சூட்டுச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. இதில் 9 பேர் கொல்லப்பட்டும் 16 பேர் காயமடைந்துமுள்ளனர். நேற்று எல் பாசோ, டெக்சாஸில் நடைபெற்ற சூட்டுச் சம்பவத்தின் பின்னர் 13 மணித்தியாலத்துக்குள் இச் சம்பவம் நடைபெற்றிருக்கிறது.
கொல்லப்பட்டவர்களில் துப்பாக்கிதாரியின் 22 வயதுடைய சகோதரி மேகன் பெட்ஸ் என்பவரும் அடங்குவார்.
டேரோன் சம்பவம் இன்று அதிகாலை நகரின் மத்தியில் இருக்கும் ஒறெகன் பகுதியின் கிழக்கு 5ம் வீதியில் நடைபெற்றிருக்கிறது. துப்பாக்கிதாரியின் பெயர் கோன்னோர் பெட்ஸ் என இனங்காணப்பட்டுள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினரால் அவர் கொல்லப்பட்டுள்ளதாக காவல்துறை அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார். சந்தேக நபர் உடற் கவசம் அணிந்திருந்ததாகவும் நெட் பெப்பெர்ஸ் என்ற மது அருந்தும் நிலையத்தில் இச் சம்பவம் நடைபெற்றுள்ளதாகவும் அதிகாரி தெரிவித்தார். இப்பகுதியில் பெருமளவு மது மற்றும் உணவருந்தும் நிலையங்கள் அமைந்துள்ளன.
இச் சம்பவத்தின்போது துப்பாக்கிதாரி தனியே தான் செயற்பட்டிருந்தார் எனவும் வேறெவரும் பங்குபற்றவில்லை எந்பதனால் சமூகம் மேலும் அச்சமுறத் தேவையில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.
சம்பவ இடத்திற்கு அருகே ஏற்கெனவே காவல்துறை கடமையிலிருந்த படியால் உடனடியாகவே அவ்விடத்திற்குச் சென்று நிலைமையைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முடிந்தது என காவல் துறை அதிகாரி மேலும் குறிப்பிட்டார்.