Spread the love

அமெரிக்காவிலிருந்து கனடாவிற்குள் வந்து தஞ்சம் கோருபவர்களை இனிமேல் திருப்பி அனுப்ப முடியாது?

கனடாவுக்குள் அகதிகளை அனுமதிக்கும் விடயத்தில் அமெரிக்காவுடன் கனடா செய்துகொண்டுள்ள “மூன்றாவது பாதுகாப்பான நாடு ஒப்பந்தம் The Safe Third Country Agreement (STCA))” இனிமேலும் பிரயோகிக்கப்பட முடியாத ஒன்று என கனடிய மத்திய நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

அமெரிக்கா மனித உரிமைகளை மீறும் ஒரு நாடாக இருப்பதனால் அந்நாட்டினூடாக கனடாவுக்கு வந்து தஞ்சம் கோருபவர்களை அந்நாட்டில் முதலில் தஞ்சம் கோரும்படி கேட்கமுடியாது என்பதே இந்ன் நீதிமன்றத்தின் தீர்ப்பின் சாராம்சம்.

கனடா வரும் அகதிகள் அமெரிக்காவின் தரைப்பிரதேசத்தைத் தாண்டி வரும்போது முதலில் அமெரிக்காவில் தஞ்சம் கோரியிருக்கவேண்டும் என்ற சட்டம் 2004 இலிருந்து நடைமுறையிலிருக்கிறது.

இச் சட்டத்தின் கீழ் கனடாவில் தஞ்சம் கோரமுடியாதென அமெரிக்காவுக்குத் திருப்பியனுப்பப்பட்ட அகதிகளின் சார்பில், அமெரிக்கா இப்படியான அகதிகளுக்குப் பாதுகாப்பான நாடல்ல எனக்கூறி, சட்டத்தரணிகள் சிலர் மத்திய நீதிமன்றத்தில் வழக்குக் தொடுத்திருந்தனர்.

இன்று (புதன்) மத்திய நீதிமன்றத்தில் இவ் வழக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, அமெரிக்கா தஞ்சம் கோருபவர்களைச் சிறையிலடைக்கிறது என்பதைக் காரணம் காட்டி, அவர்களைக் கனடா திருப்பி அனுப்புவது அரசியலமைப்புக்குப் புறம்பானது என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கனடிய குடிவரவு செயற்பாட்டாளர்களுக்கும், அகதிகள் சார்பில் இயங்கும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுக்கும் இது ஒரு பாரிய வெற்றி எனக் கருதப்படுகிறது.

கனடாவில் அனுமதி மறுக்கப்பட்டு அமெரிக்காவிற்குத் திருப்பியனுப்பப்பட்ட நெடிரா ஜெமால் முஸ்ரெஃபாவின் வாக்குமூலத்தின்படி, அமெரிக்காவில் தனிமைச் சிறையில் பூட்டி வைத்திருப்பது உளவியல் ரீதியாக ஒரு அதிர்ச்சிகரமான அனுபவம் என நீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறியுள்ளது.



“அகதிகளாகத் தஞ்சம் கோருபவர்களை அமெரிக்கா எப்படி நடத்துகிறது என்பது எங்கள் எல்லோருக்கும் மிக நன்றாகத் தெரிந்த விடயம்” என கனடிய அகதி வழக்குகளைக் கையாளுக் சட்டத்தரணிகளின் அமைப்பின் தலைவர் மொறீன் சில்கொஃப் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ட்றம்ப் பதவியேற்ற நாளிலிருந்து, 58,000 பேர் கனடாவிற்குள் அகதிகளாக எல்லையைக் கடந்து வந்திருக்கிறார்கள். கொறோணாவைரஸ் பிரச்சினை ஆரம்பமானதிலிருந்து அமெரிக்காவிலிருந்து கனடாவிற்குள் தஞ்சம் கோருவதற்காகக் களவாக நுழைபவர்களைத் திருப்பி அனுப்பப் போவதாக கனடிய அரசு அறிவித்திருந்தது.

நீதிமன்றத் தீர்ப்பு

கனடிய அகதி வழக்குகளை நடத்தும் சட்டத்தரணிகளின் அமைப்பினால் அகதிகள் சார்பில் தொடரப்பட்ட இவ்வழக்கில், வாழ்வு, சுதந்திரம், பாதுகாப்பு ஆகிய கனடிய உரிமைகள் பட்டயம் (Canada’s Charter of Rights) வழங்கும் பாதுகாப்பு இவ்வகதிகளுக்கு மறுக்கப்படுகிறது என்ற காரணத்தைக் காட்டி நீதிபதி ஆன் மரீ மக்டோனல்ட் தீர்ப்பளித்திருக்கிறார்.

“எனக்கு முன் வைக்கப்பட்ட ஆதாரங்களிலிருந்து, “மூன்றாவது பாதுகாப்பான நாடு ஒப்பந்தத்தின்” கீழ் திருப்பியனுப்பப்பட்ட அகதிகள் அனைவரும் அமெரிக்க அதிகாரிகளால் கட்டாயச் சிறைத் தண்டனைக்குள்ளாக்கப்படுவது தெரிகிறது. கனடிய உரிமைகள் பட்டயத்தின் 7 வது பிரிவின் பிரகாரம், இவ்வகதிகளுக்கான பாதுகாப்பு மறுக்கப்படுவதை அனுமதிக்க முடியாது” என நீதிபதி மக்டோனல்ட் தனது தீர்ப்பில் கூறியிருக்கிறார்.

Related:  மார்க்கம் நகரில் யோர்க் பல்கலைக்கழகத்தின் புதிய வளாகம்!

ஆனாலும், இந்த இரண்டு நாடுகளுக்குமிடையிலான “மூன்றாவது பாதுகாப்பான நாடு ஒப்பந்தத்தை” மீளாய்வு செய்வதற்கு இரண்டு நாடுகளுக்கும் 6 மாத கால அவகாசத்தை வழங்குவதாகவும் அதுவரை இத் தீர்ப்பு கிடப்பில் வைக்கப்படுமெனவும் அறிவித்திருக்கிறார்.



கனடிய மத்திய அரசு இதற்கு உடன்படாவிட்டால் இத் தீர்ப்பின் மீது மேன்முறையீடு செய்யவும் முடியும்.

“மத்திய நீதிமன்றத்தின் தீர்ப்பு பற்றித் தாம் அறிந்துள்ளதாயும், இது தொடர்பாகத் தமது தேர்வுகளை ஆராய்ந்து வருவதாகவும், கனடிய பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார். அமெரிக்க குடிவரவு அதிகாரிகள் இதுபற்றி எதுவும் தெரிவிக்கவில்லை.

Print Friendly, PDF & Email