அமெரிக்காவின் 75-நாடுகள் விசா தடை நீதிமன்றத்தினால் நிராகரிப்பு!
அமெரிக்காவிற்கு குடிபெயர விரும்பும் 75 நாடுகளின் மக்களுக்கு விசா அநுமதியை மறுக்கும் ட்றம்ப் அரசின் ஆணையை நீதிமன்றம் நிராகரித்திருக்கிறது. கடந்த ஜனவரி மாதம் அமெரிக்க வெளியுறவுத் துறையினால் அறிவிக்கப்பட்ட இச்சட்டத்தின் பிரகாரம் ரஸ்யா, பிரேசில், கிலம்பியா, அல்பானியா, எகிப்து, ஹெயிட்டி, சோமாலியா மற்றும் பாகிஸ்தான் உள்ளிட்ட 75 நாடுகளின் பிரஜைகள் அமெரிக்காவிற்கு குடிபெயர விண்ணப்பித்தால் அவை நிராகரிக்கப்படும். “இந்நாடுகளின் பிரஜைகள் அமெரிக்காவிற்கு வருவது உதவிப்பணம் மற்றும் இதர சலுகைகளைப் பெறுவதற்குத்தான்” எநக்கூறி வெளியுறவுச் செயலாளர் மார்க்கோ ரூபியோ இத்தடையை அறிவித்திருந்தார்.
இத்தடை அமெரிக்க சட்டத்தை மீறுகிறது எனக்கூறி ‘குடிவரவாளர் உரிமைக் குழுமம்’ நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தது. இவ்வழக்கை விசாரித்த மான்ஹட்டன் நீதிபதி ஜீனட் வர்காஸ் “ஒருவரது நிதி நிலைமை, உடல் ஆரோக்கியம் மற்றும் அவரது தொழில் வல்லமை ஆகிய தகமைகள் விசாரிக்கப்பட்டு விண்ணப்பதாரி நாட்டிற்கு சுமையாக அமைந்துவிட மாட்டார் என நிரூபிக்கப்பட்ட பின்னரே அவரது குடிவரவிற்கான விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்கிறது அமெரிக்க சட்டம் எனவும் வெளியுறவுச் செயலரின் இத்தடை அச்சட்டத்தை மீறுகிறது எனவும்” கூறி இத்தடையை நிராகரித்துள்ளார்.
அது மட்டுமல்லாது “இந்த விசா தடையை அறிப்பதற்கு வெளியுறவுச் செயர் மார்க்கோ ரூபியோவிற்கு அனுமதி இல்லை” எனவும் நீதிபதி தெரிவித்திருக்கிறார்.
“நாட்டின் பாதுகாப்பு காரணமாக இத் தடை அவசியமானது எனவும் இந்நாட்டிற்கு குடிபெயர்பவர்கள் அதியுயர் தராதரத்தைக் கொண்டிருக்க வேண்டும் என்பதற்காகவே இந்நடவடிக்கை எடுக்கப்படுகிறது” எனவும் அமெரிக்க அரசு இது குறித்து கருத்து தெரிவித்திருக்கிறது.
அத்தோடு நாட்டில் சட்டபூர்வமற்று வதியும் குடிவரவாளர்களை வெளிநாடுகளுக்கு நாடுகடத்தும் பணிகளையும் ட்றம்ப் நிர்வாகம் துரிதப்படுத்தி வருகிறது. இவ்வருட ஆரம்பத்திலிருந்து இதுவரை, அமெரிக்காவில் தங்கியிருந்த 2,300 மெக்சிக்க பிரஜைகளை மெக்சிக்கோவின் எதிர்ப்பையும் மீறி குவாட்டமாலா நாட்டிற்கு நாடுகடத்தியிருக்கிறது என அந்நாட்டின் ஜனாதிபதிபேர்ணாடோ அறிவாலோ தெரிவித்துள்ளார். அது மட்டுமல்லாது “ட்றம்ப் நிர்வாகம் ஆரம்பித்து முதல் 500 நாட்களில் மட்டும் அமெரிக்க குடிவரவு மற்றும் சுங்க அமுலாக்க ஆணையத்தினால் நாடுகடத்தப்படுவதற்கென தடுத்துவைக்கப்பட்டிருந்தவர்களில் 52 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள்” என மனித உரிமைகள் கண்காணிப்பகம் மற்றும் மநித உரிமைகளுக்கான வைத்தியர்கள் ஆகிய அமைப்புகள் தெரிவித்துள்ளன.
(Image Credit: The Globe Post)
