அமெரிக்காவின் ‘தக் லைஃப்’
சிவதாசன்
அமெரிக்காவின் வரலாற்றில் ஜனாதிபதி ட்றம்ப், பல வழிகளிலும், தனித்துவமானவர். அவர் ஒரு சண்டியனாக (thug) இருப்பது அதற்கொரு முக்கிய காரணம். இல்லாவிட்டால் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டு – ஒரேஞ் மேலாடையுடன் விலங்கிட்டு இழுத்துவராமல்- அவமானப்படுத்தப்பட்ட ஒருவர் சகல தடைகளையும் உடைத்தெறிந்து இரண்டாவது தடவையாக ஜனாதிபதியாக வந்திருக்க வாய்ப்பில்லை. சண்டியனாக இருப்பதனாலேயே தன்வகையைச் சேர்ந்த வெள்ளைச்சேட்டுக் காமுகர்களையும், காடையர்களையும் அவரால் இனம் காண முடிகிறது. மத்திய கிழக்கு போரைத் தற்காலிகமாக முடித்துவைத்திருப்பதற்கும் அவரது இந்த சண்டியன் குணமே உதவி செய்திருக்கிறது.
அமெரிக்காவைக் கொண்டு ஈரான் மீது குண்டு மழை பொழிய வைப்பது நெட்டன்யாஹுவின் நீண்டநாட் கனவு. 19ம் நூற்றாண்டிலிருந்து றொத்ஷைல்ட் குடும்பம் போதித்து வரும் “நாம் கடவுளின் குழந்தைகள்” என்ற வாசகத்தை இன்றைய யூத சமூகம் நம்புகிறது. அந்த யூத இரத்தத்தின் தூய்மை கெட்டுவிடக்கூடாது என்பதற்காக கோயிம்கள் எனப்படும் யூதரல்லாதோரை அகன்ற இஸ்ரேலிலிருந்து துரத்தப் பாடுபடும் நெட்டன்யாஹு போன்றவர்களை யூதர்கள் போற்றிப் புகழத்தான் செய்வார்கள்.
நடந்து முடிந்த ’12-நாட் போரில்’ யார் வெற்றி பெற்றார்கள் என்பதை அறிவதற்கு ஒருவர் றொக்கெட் விஞ்ஞானியாக இருக்கத் தேவையில்லை. கொடுப்புக்குள் சிரித்துக்கொண்டிருக்கும் ட்றம்புக்கும் இது தெரியும்.
மூலைக்குள் ஒதுக்கப்பட்ட எதிரிக்கு தப்பியோடுவதற்கு ஒரு பாதையை அமைத்துக் கொடுப்பது போர்த் தந்திரங்களிலொன்று. பாதை வழங்கப்படாவிட்டால் வேறு வழியில்லாது தனது இறுதி மூச்சுவரை மூர்க்கமாகப் போராட வேண்டும் என எதிரிக்குத் தோன்றும். இதனால் சில வேளைகளில் அவனது தரப்பு வெற்றியடையவும் சாத்தியமுண்டு. மாறாக, தப்பியோடுவதற்கு பாதை வழங்கப்பட்டால் எதிரி அதையே பாவிப்பான். ட்றம்பினால் முடித்து வைக்கப்பட்ட இந்த 12 நாட் போரில் ஈரான், இஸ்ரேல், அமெரிக்கா என்று முத்தரப்பும் தத்தம் வழிகளில் மூலைகளில் முடக்கப்பட்டிருந்தவர்கள். அவர்கள் மூவருக்கும் ட்றம்ப் இரகசியமாகவேனும் தப்பியோடுவதற்கான பாதைகளைத் திறந்து விட்டதன் மூலம் மூவரும் முகமிழந்து போகாமல் வெற்றி விழாக் கொண்டாடச் செய்ததன் மூலம் செய்து ட்றம்ப் ஒரு வரலாற்று சண்டியனாகிறார்.
ஈரான்
போர் உக்கிரமாக நடைபெற்றுக்கொண்டிருந்தபோது அதை விரைவாக முடிவுக்குக் கொண்டுவரவேண்டிய தேவை இஸ்ரேல், அமெரிக்காவுக்குப் போலவே ஈரானுக்கும் இருந்தது. ஈரானிடம் இருந்த ஏவுகணைக் குண்டுகள் இஸ்ரேலிய தாக்குதல்களுக்குப் பாவித்து ஓரளவு தீர்ந்துபோகும் நிலையில் இருந்தது. உற்ற நண்பர்கள் வரிசையில் நின்ற – இந்தியா என்ற விலாங்கைத் தவிர – சீனாவும், ரஸ்யாவும் ஆலோசனைகளோடு தமது உதவிகளை நிறுத்திக்கொண்டு விட்டார்கள். பொறுத்த நேரத்தில் சிரிய நண்பன் அசாத்தைக் கைவிட்ட புட்டினை நம்புவதற்கு இயலாது. “இஸ்ரேலில் 1.3 மில்லியன் ரஸ்ய மொழி பேசும் யூதர்கள் வாழ்கிறார்கள். இஸ்ரேல் இரண்டாவது ரஸ்யா” என்ற அறிவுறுத்தலோடு புட்டின் யூக்கிரெய்ன் பக்கம் நகர்ந்துவிட்டார். இந்நிலையில் போரை விரைவில் முடிவுக்குக் கொண்டுவருவதற்காய் பின்புலத்தில் பேச்சுவார்த்தைகள் நடந்துகொண்டிருந்தன. துருக்கி, கட்டார் போன்ற நாடுகள் அமெரிக்காவிற்கும் ஈரானுக்குமிடையில் இப்பேச்சுவார்த்தகளை மேற்கொண்டிருந்தன.
இது நடந்துகொண்டிருந்தபோது மிசூரியிலிருந்து 3000 இறாத்தல் மலை பிளப்பு குண்டுகளை ஏற்றிக்கொண்டு ‘பி-2’ குண்டுவீச்சு விமானங்களும், ரொமஹோக் ஏவுகணைகள், மற்றும் போர் விமானங்கள் ஆகியன ஈரானை நோக்கிப் புறப்பட்டுவிட்ட விடயமும் ஈரானுக்கு அறிவிக்கப்பட்டுவிட்டது. மலைகளுக்குக் கீழே சுமார் 150 முதல் 300 அடிகள் வரையான ஆழத்தில் மூன்று யூரேனிய சுத்திகரிப்பு நிலையங்களில் சேமிக்கப்பட்டிருந்த 400 கி.கி. யூரேனியத்தை ஈரான் பாதுகாப்பாக அப்புறப்படுத்த அவகாசமும் வழங்கப்பட்டுவிட்டது. (60% சுத்திகரிக்கப்பட்ட இந்த யூரேனியத்தைக் கொண்டு சுமார் 10 அணுக்குண்டுகள் வரை தயாரிக்கலாம்). யூரேனியத்தை அப்புறப்படுத்துவது அமெரிக்காவுக்கும் மிகவும் அவசியமானது. அமெரிக்க குண்டுகளின் தாக்கத்தால் இந்த யூரேனியம் கதிர் வீச்சை வெளிப்படுத்தினால் மிக நீண்ட காலத்துக்கு அப்பிரதேசத்திலேயே உயிரினங்கள் வாழமுடியாது. அதைவிட அது சர்வதேச சட்டத்தை மீறுவதாகும். எனவே யூரேனியத்தை அகற்றுவதற்கு அனுமதி கொடுத்ததன் மூலம் ட்றம்ப் ஈரான் பாதுகாப்பாக வெளியேறுவதற்கு ஒரு சந்தர்ப்பத்தை வழங்கினார். இத்தனை வருட காலமாக கொஞ்சம் கொஞ்சமாகச் சுத்திகரித்து சேமித்து வைத்த யூரேனியத்தை இழக்காது பாதுகாக்கக் கிடைத்தமை ஈரானுக்கு ஒரு பாரிய வெற்றி.
ஈரானின் மூன்று யூரேனிய சுத்திகரிப்பு நிலையங்கள் மீதும் மேற்கொள்ளப்பட்ட குண்டுத் தாக்குதல்களினால் ஈரானுக்கு பேரழிவு ஏற்பட்டதா? இஸ்ரேலுடனான போரில் அது தோல்வியைத் தழுவியதா என்ற விவாதங்கள் நிபுணர்களின் உதவியுடன் யூ-டியூப் சனல்களில் விவாதிக்கப்பட்டுக்கொண்டிருந்தாலும் ஈரானிய மக்களைக் கொண்டு அரசு பட்டாசு கொழுத்தி மகிழ்வது தாம் இதில் தோற்றுப்போகவில்லை என்பதை உலகுக்கு அறிவிப்பதற்காகவே. அதே வேளை கட்டார் மற்றும் ஈராக் நாடுகளில் நிலைகொண்டிருந்த அமெரிக்க இராணுவத் தளங்கள் மீது ஈரான் நடத்திய குண்டுத் தாக்குதல்களின்போதும் எந்தவித உயிரிழப்பும் ஏற்பட்டதாகவோ அல்லது இராணுவத் தளபாடங்கள் அழிக்கப்பட்டதாகவோ இதுவரை தடயங்கள் ஏதும் வெளிவரவில்லை என்பது இது கூட ‘பேசிப் பறைந்து’ ஆற்றிய கருமமெனவே சந்தேகப்படவேண்டியிருக்கிறது. பொதுவாக இப்படியான சூழலில் அமெரிக்க பதிலடி மிக மோசமாக இருந்திருக்கும். ஆனால் ஈரானில் பூவாணம் எரிகிறது. ட்றம்ப் கொடுப்புக்குள் சிரித்துக்கொண்டிருக்கிறார்.
இஸ்ரேல்
நெட்டந்யாஹு ஒரு பயங்கரமான கிருமி என்பது ஒரு சின்னக் குழந்தைக்கே தெரிந்திருக்கும்போது தெருச் சண்டியன் ட்றம்பிற்குத் தெரியாமலிருக்க வாய்ப்பில்லை. ஈரான் மீது தாக்குதல்களை மேற்கொள்ளத்தக்க ஜனாதிபதி பைடன் மட்டுமே என்று கங்கணம் கட்டிக்கொண்டு பல மில்லியன் டொலர்களை இறைத்துவிட்டிருந்த இஸ்ரேல் லொபிக்கு ட்றம்பின் வெற்றி நாராசமாக இருந்திருக்குமென்பதும் ட்றம்பிற்குத் தெரியும். இஸ்ரேல் லொபியின் சக்தியை விட ‘மாகா’ சக்தி இரட்டிப்பாகி ட்றம்பின் வெற்றியைத் தீர்மானித்திருந்ததும் அவருக்குத் தெரியும். இந்த ‘மாகா’ சக்தியின் பின்னணியிலிருந்த இலான் மஸ்க் வெற்றி விழாவில் ஆடிய ஆனந்தக் கூத்தும், ஹிட்லர் சல்யூட்டும் இஸ்ரேல் லொபிக்கு கொடுத்த ஒரு எச்சரிக்கை. அப்படியிருந்தும் இஸ்ரேல் லொபி பின்பக்கத்தால் நுழைந்து காரியத்தைச் சாதித்துவிட்டது. அவர்களது முதலாம் எதிரியான இலான் மஸ்க்கின் வியாபார நிறுவனங்களே முதலில் குறிவைக்கப்பட்டன. இஸ்ரேல் லொபியின் கீழிருந்த அனைத்து ஊடகங்களும் தொடர்ந்து ‘ரெஸ்லா’ பற்றிய பாதகமான செய்திகளையே வெளியிட்டு வருகின்றன. உலகம் முழுவதும் அவர்கள் தமது வலையமைப்புகளைக் கொண்டு ரெஸ்லாவின் பங்குச் சந்தை விலையைச் சரியச் செய்தன. இலான் மஸ்க் தோற்கடிக்கப்பட்டு விட்டார். ட்றம்பின் ‘மாகா’ முகாம் பலமிழந்து போனது.
இலான் மஸ்க் வெளியேறியதும் நெட்டன்யாஹுவின் கையோங்கியது. அமெரிக்காவை இப்போரில் பங்குபெற வைக்க இதுவே அருமையான சந்தர்ப்பம். ஆனாலும் “வேறொரு நாட்டின் போருக்காக ஒரு அமெரிக்க உயிரையும் இழக்க நான் அனுமதிக்க மாட்டேன்” எனச் சூளுரைத்து ஆட்சிக்கு வந்த ட்றம்பிற்கு ஈரான் – இஸ்ரேல் போர் விரிவடைவது விருப்பமில்லை. இரத்தமின்றிச் சத்தத்தோடு மட்டும் அதை நிறுத்த அவர் தீட்டிய திட்டமே இந்த மலைப்பிளப்பு குண்டு வீச்சு. இதன் மூலம் அவர் நெட்டன்யாஹுவின் கனவை நிறைவேற்றியது மட்டுமல்லாது அவரது மக்களின் கோபத்திலிருந்தும் அவரைக் காப்பாற்றிக்கொண்டுவிட்டார். ஈரான் மீது குண்டுத்தாக்குதல்களை ஆரம்பித்த நாள் முதல், ஈரான் ஏவிய பதில் தாக்குதல்களிலிருந்து தனது இரும்புக்கூடாரம் மக்களைப் பாதுகாக்கும் என அவர் பீற்றியதற்கு மாறாக ஹைஃபா துறைமுகமும், பென்கூரியன் விமான நிலையமும் முடக்கப்பட்டன. மக்கள் குடியிருப்புகள் சிதைக்கப்பட்டன. இஸ்ரேலின் பொருளாதாரம் ஸ்தம்பித்தது. ஈரானின் குண்டுகளிலிருந்து தப்புவதற்கு போதிய பங்கர்கள் இல்லாமையால் மக்கள் தரைப் பயணங்கள் மூலம் தப்பியோடும் நிலை. மூலைக்குள் முடக்கப்பட்ட நெட்டன்யாஹுவிற்கும் தப்பியோட ஒரு பாதை இப்போது தேவைப்பட்டது. “மலைப்பிளப்புடன் போர் நிறுத்தம் ஆரம்பமாகிறது” என்ற எச்சரிக்கையுடன் ட்றம்ப் இப்பாதையைத் திறந்து விட்டார். ஆனால் அச்சத்தியத்தை மீறி நெட்டன்யாஹு தன் கெட்டித்தனத்தைக் காட்ட முற்பட்டதனால் – முதல் தடவையாக – பகிரங்கமாக ட்றம்ப் தூஷண வார்த்தைகளால் ஏசவேண்டி ஏற்பட்டது. குண்டுகளை வீசியது மட்டுமல்லாது அதைச் செய்தது ஈரான் என்று பழியையும் அதன் மீது சுமத்திய நெட்டன்யாஹு வசமாக ட்றம்பிடம் மாட்டிவிட்டார். இப்போது ரெல் அவிவ் தெருக்களில் மக்கள் அவரை வரவேற்று ஆரவாரிக்கிறார்கள். அவரும் தப்பி விட்டார்.
அமெரிக்கா
‘மாகா’ முகாமின் பல திட்டங்களில் ஒன்றான ‘DOGE’ பயங்கர தோல்வியைத் தழுவிவிட்டதும் அதன் காரணமாக வேலைகளை இழந்த வெள்ளையர்கள் ட்றம்பின் மீது வசை பாடியதும் வரலாறு. (இதன் பின்னணியில் இஸ்ரேல் லொபி கடுமையாக உழைத்திருக்கிறது). இரண்டாவதாக ‘மாகா’ திட்டத்தின்படி ‘லத்தீனோ காடையர்களையும், போதை வஸ்து கடத்துபவர்களையும்’ நாடு கடத்துவோமென்று கட்டவிழ்த்து விட்ட ‘ஐஸ்’ படையினால் பல தோட்டக்காரர் பணியாளர்களின்றியும், பணக்காரர் வீட்டு வேலைக்காரரின்றியும் குய்யோ முறையோ எனக் கதறியழுது ட்றம்ப் வாசலில் முகாமடித்து விட்டார்கள். இதை ட்றம்ப் எதிர்பார்க்கவில்லை. ட்றம்பின் பிறந்த நாளான ஜூன் 14 ஐ ‘கொடி நாளாகப்’ பிரகடனப்படுத்தி தன்னை ஒரு ‘சர்வாதிகாரியாகப்’ பிம்பப்படுத்தி கனரக இராணுவ ஆயுத வண்டிகள், காலாட்படைகள் புடைசூழ நாடு தழுவிய பெருவிழாவாகக் கொண்டாட அவர் எடுத்த முயற்சி பிசு பிசுத்துப் போனது. அதே தினம் பொது மக்களால் ஒழுங்கு செய்யப்பட்ட ‘நோ கிங்ஸ் டே’ ஊர்வலங்கள் நாட்டின் சந்து பொந்துகளையெல்லாம் நிரப்பியிருந்தது. இது ட்றம்பின் மன உளைச்சலை அதிகப்படுத்தியிருந்தது.
அதையும் விட, ஹோமுஸ் கால்வாயை மூடிவிடுவோம் என்று ஈரான் வெருட்டுகிறது. அதை மூடினால் ஈரானும் நட்டப்படுமென்பது வேறு விடயம். ஆனாலும் உலகிற்குத் தேவையான 25% எண்ணையும், 30%மான எரி வாயுவும் இக்கால்வாயினூடுதான் செல்ல வேண்டும். இப்பாதையை ஈரான் மூடினால் மசகு எண்ணையின் விலை பீப்பா ஒன்றிற்கு $75 இலிருந்து சுமார் $300 வரை அதிகரிக்க வாய்ப்புண்டு எனப் பொருளாதார நிபுணர்கள் எச்சரித்திருந்தனர். ட்றம்பைப் பொறுத்தவரை ‘மாகா’ திட்டங்களை விட இதுவே மிகவும் பாரதூரமான விளைவுகளை உருவாக்கும் என்பது தெரியும். எனவே போரை நிறுத்த வேண்டியது அவசியமென அவருக்குப் புரிந்து விட்டது. பெட்டியிலிருந்து வெளியேற அவருக்கும் ஒரு பாதை தேவைப்பட்டது.
அமெரிக்க மக்களிடையே தான் இழந்த மகிமையைத் திரும்பிப் பெற அவருக்குக் கிடைத்த சந்தர்ப்பம் – வழக்கம் போல – ஒரு பொது எதிரியைக் கண்டு பிடிப்பது. இந்த நேரத்தில் தான் அவருக்கு வந்து வாய்த்த நோஞ்சான், ஈரானாக இருந்தது. டீல் போடப்பட்டது. ஈரான் மீது நோகாமல் ஒரு நொட்டு. மலைகளில் சிராய்ப்பு; யூரேனியம் அப்படியே இருக்கிறது. உள்ளூர் தொலைக்காட்சித் திரைகளில் ‘பி.2 ஸ்டெல்த்’ வெளவால் விமானங்கள் அமெரிக்க மேலாண்மையின் மகிமையினைப் பறைசாற்றி மக்களின் உள்ளங்களைக் கவர்ந்திருக்கும் வேளையில் கள்வன் ட்றம்ப் நாயகனாக உலா வருகிறார். தானே திறந்துவிட்ட பாதையில் அந்த ‘thug’ பீறுநடை போடுகிறது.
போர் என்று வரும்போது அறம் கைகழுவப்பட்டு, வஞ்சனை, சூழ்ச்சி எல்லாம் தந்திரங்கள் எனத் தரமுயர்த்தப்பட்டு தேசிய முலாமிட்டு மகாஜனங்களுக்குப் படைப்பதுவே வரலாறு. வில்லன்களாகிய இராமனும், கிருஷ்ணனும் கடவுள்களாக்கப்பட்டதும் சேர்ச்சில், ஸ்டாலின், ராஜபக்ச எல்லோரும் வரலாற்று நாயகர்கள் வரிசைக்கு வந்ததும் இதே தேவைக்காகத் தான். ‘thugs’ lives’ இப்படித்தான் இருக்கும்; நாங்கள் தான் கொஞ்சம் ‘அட்ஜட்ஸ்ட்’ பண்ணிப் போக வேண்டும். ‘End justifies means’ கோட்பாட்டின் பரீட்சைக் களமே போர்க்களம். ( Image Credit: Radio Free Europe)
