Spread the love

வெற்றி பெற்றால், அமெரிக்க உப ஜனாதிபதியாகும் முதல் ஆபிரிக்க / தமிழ் வம்சாவளிப் பெண்

ஆகஸ்ட் 11, 2020: எதிர்வரும் நவம்பரில் நடக்கவிருக்கும் அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் சார்பில் ஜனாதிபதி பதவிக்குப் போட்டியிடும் ஜோ பைடன் அவர்கள், தனது உப ஜனாதிபதியாக கமலா ஹரிஸ் என்னும் தமிழ்-ஆபிரிக்க வம்சாவளிப் பெண்ணைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்.

ஜோ பைடனைப் போலவே, 2020 இல் நடைபெறவிருக்கும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக ஜனநாயகக் கட்சியில் வேட்பாளராக வருவதற்கு அவர் போட்டியில் குதித்திருந்தாலும் எதிர்பார்த்த அளவுக்கு அவருக்கு ஆதரவோ அல்லது நிதி சேகரிப்போ கிடைக்காத நிலையில் அவர் கடந்த டிசம்பர் மாதம் போட்டியிலிருந்து விலகியிருந்தார்.

பூர்வீகம்

கமலா ஹரிஸின் தாயார், சென்னையச் சேர்ந்த சியாமளா கோபாலன். தந்தையார் டொனால்ட் ஹரிஸ், ஜமைக்காவைச் சேர்ந்தவர். சியாமளா ஒரு மார்பகப் புற்றுநோய் நிபுணர். டொனால்ட் ஹரிஸ் ஸ்ரான்ஃபோர்ட் பல்கலைக் கழகத்தில் பயின்ற பொருளாதாரத் துறைப் பேராசிரியர். கலிபோர்ணியா பேர்க்லி பல்கலைக்கழகத்தில் சந்தித்து வாழ்க்கையில் இணைந்தார்கள். கமலாவுக்கு, மாயா என்றொரு சகோதரி உண்டு. கமலாவுக்கு 7 வயதாகவிருக்கும்போது பெற்றோர் விவாகரத்துச் செய்துகொண்டனர். கமலாவும், மாயாவும் தமது தாய் நிலமான சென்னக்குச் சென்று வருகின்றனர். திருமணமானவர். குழந்தைகள் இல்லை.

தொழில்

56 வயதுடைய கமலா ஹரிஸ் ஒரு பட்டம் பெற்ற வழக்கறிஞர். கலிபோர்ணியாவில் சட்டமா அதிபராகப் பணியாற்றிவிட்டு 2017 முதல் அரசியலில் குதித்து, தற்போது செனட்டராக உள்ளார். சட்டமா அதிபராக இருந்தபோது கலிபோர்ணியாவில் மரண தண்டனையை இல்லாதொழித்ததற்காக இவர் புகழப்பட்டாலும், அதற்காக இவர் பெரும்பாலான வெள்ளை இனமக்களிடையே எதிர்ப்பையும் சம்பாதித்தவர்.

அரசியல்

ஜனநாயகக் கட்சியின் அங்கத்தவர் என்ற முறையில் மிதவாதக் கொள்கையைப் பின்பற்றும் ஒருவராகவே பார்க்கப்படுபவர். ஆபிரிக்க அமெரிக்கர்கள், லத்தினோ அமெரிக்கர்கள் எதிர்நோக்கும் பல பிரச்சினைகளுக்காகக் குரல்கொடுத்து வருபவர். டொனால்ட் ட்றம்ப் மீதான பதவி நீக்க விசாரணைகளின்போது மிகவும் கடுமையாக் அவரை எதிர்த்து வாக்குமூலமளித்தவர். அதனால் ட்றம்ப் கமலாவை படு மோசமாகத் திட்டிக் கொள்பவர். முன்நாள் ஜனாதிபதி பராக் ஒபாமாவின் பரந்துபட்ட மருத்துவக் காப்புறுதிக் கொள்கைக்காகத் தொடர்ந்து போராடி வருபவர்.



கடமைகள்

அமெரிக்க உப ஜனாதிபதி பதவி, பெரும்பாலும் ஜனாதிபதியின் நிர்வாகம் சீராக இயங்குவதற்கு உதவி செய்வது. செனட் சபையின் தலைவராக இருந்து வாக்களிப்பில் சம பிரிவு ஏற்படும் சந்தர்ப்பங்களில் தனது வாக்கைக் கொண்டு தீர்மானத்தை நிறைவேற்றுவது என்பது முக்கிய கடமைகள். ஜனாதிபதி மரணித்தாலோ அல்லது கடமையிலிருந்து நீக்கப்பட்டாலோ உப ஜனாதிபதியே ஜனாதிபதியாகப் பதவியேற்பார்.

சாதனை

ஜோ பைடன் ஜனாதிபதியாகத் தெரியப்பட்டால், கமலா ஹரிஸ் அமெரிக்காவின் முதல் கறுப்பின / தென்னாசிய / தமிழ்ப் பெண் என்ற பெருமையைப் பெறுவார். அந்த வகையில் அமெரிக்க வரலாற்றில் அவரது வெற்றி ஒரு சாதனையாகப் பொறிக்கப்படும்.

Print Friendly, PDF & Email
Related:  WeChat அமெரிக்கத் தடை | ட்றம்ப் கட்டும் சீனப் பெருஞ்சுவர்
அமெரிக்காவின் எதிர்கால உப ஜனாதிபதியாக கமலா ஹரிஸ்

அமெரிக்காவின் எதிர்கால உப ஜனாதிபதியாக கமலா ஹரிஸ்