அமெரிக்கர்களிடையே பைடனின் செல்வாக்கு குறைகிறது

பண வீக்கம் 8.5% – 40 வருடங்களுக்குப் பிறகு இந்த நிலை!

அமெரிக்க செய்தி ஊடகமான CNBC சமீபத்தில் மேற்கொண்ட கருத்துக்கணிப்பின்படி ஜனாதிபதி பைடன் மீது அமெரிக்க மக்கள் வைத்திருக்கும் மதிப்பு வெகுவாகக் குறைந்திருக்கிறது. நேற்று (14) வெளியான இக் கருத்துக்கணிப்பின்படி 38% மான அமெரிக்க மக்களே அவரது ஆட்சியை அங்கீகரிக்கிறார்கள். டிசம்பர் மாதத்தில் இது 46% மாக இருந்தது.

அமெரிக்க பொருளாதாரம் அதல பாதாளத்தை நோக்கிப் போய்க்கொண்டிருக்கிறது எனவும் விரைவில் அது மந்தநிலைக்குள் (recession) தள்ளப்படுமெனவும் நிபுணர்கள் எதிர்பார்க்கிறார்கள். யூக்கிரெய்ன் போர் காரணமாக உலகில் ஏற்பட்ட எரிபொருள் விலையுயர்வு போன்ற விடயங்களால் அமெரிக்காவின் பணவீக்கம் 8.5 வீதமாக அதிகரித்த காரணத்தால் அதைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கு கடன் வட்டி வீதத்தை அதிகரிக்கும் நிலைக்கு அது தள்ளப்பட்டுள்ளது. போர், பொருளாதாரம் ஆகியவற்றைக் கையாள்வதில் பைடன் தவறிழைத்துவிட்டார் என மக்கள் கருதுகின்றனர். அடுத்த வருடம் அமெரிக்கா மந்த நிலைக்குள் தள்ளப்படுமென 50 வீத்துக்கும் மேலான மக்கள் கருதுவதாக இக் கருத்துக்கணிப்பு தெரிவிக்கிறது.

இக் கருத்துக்கணிப்பின் படி மக்களிடையே பைடனின் அங்கீகாரம் 38% மாகவும் நிராகரிப்பு 53% மாகவும் இருக்கிறது. நான்கு மாதங்களுக்கு முன்னர் இது 46% / 48% த்தில் இருந்தது. பொருளாதாரத்தைக் கையாளும் விதத்தில் பைடன் 35% அங்கீகாரத்தையே பெறுகிறார். அவர் தனது கடமையைச் செவ்வனே செய்யவில்லை என 60% மக்கள் கருதுகின்றனர்.

கடந்த நான்கு மாதங்களாக எடுக்கப்பட்டுவரும் CNBC கருத்துக்கணிப்புகளில் அவர் தொடர்ச்சியாக மக்கள் ஆதரவை இழந்து வருவது அவதானிக்கப்பட்டுள்ளது. மக்களது கரிசனை விலைவாசி உயர்வு – 48%, யூக்கிரெய்ன் -31%, குடிவரவு – 23%, வேலைவாய்ப்பின்மை – 20% என்ற நிலைகளில் இருக்கிறது.

யூக்கிரெய்ன் போர் காரணமாக அதிகரித்த எரிபொருள் விலை நாட்டின் பணவீக்கத்தை 8.5 வீதத்துக்கு அதிகரித்திருக்கிறது. 40 வருடங்களுக்குப் பிறகு (1981) இந்நிலை ஏற்பட்டிருக்கிறது என நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள். எரிபொருளின் விலை 40% த்தால் அதிகரித்திருக்கிறது. இதை பைடன் நிர்வாகம் “புட்டின்விலை உயர்வு” எனச் சுலோகமிட்டு தவறை ரஷ்யாவின் படையெடுப்பில் சுமத்தி வருகிறது. இக் கருத்துக்கணிப்பின்படி 55% மான மக்கள் இப் பிரசாரத்தை நம்புகிறார்கள். இருப்பினும் இதற்கு பைடனே காரணமென 49% மான மக்கள் நம்புகிறார்கள். பண வீக்கத்தைப் பொறுத்தவரை, ட்றம்பின் 2018-2019 காலத்தைவிட பைடனின் 8 மாதகால ஆட்சியில் அது வேகமாக அதிகரித்து வந்தது என்பது இப்பணவீக்கத்துக்கும் போருக்கும் சம்பந்தமில்லை எனக் கருத வழிசெய்வதாக நிபுணர்கள் கூறுகிறார்கள்.

ஒட்டுமொத்தமாக. இக்கருத்துக்கணிப்பின்படி, அமெரிக்க பொருளாதாரம் சரியான திசையில் போகிறது என 17% மக்களும் தவறான அவ்ழியில் போகிறது என 47% மக்களும் நம்புவதாகக் கூறப்படுகிறது. அடுத்த வருடம் நாடு மந்தநிலைக்குள் தள்ளப்படும் சாத்தியங்கள் உள்ளதாக 56% அமெரிக்கர்கள் நம்புகிறார்கள். (CNBC).