News & AnalysisUncategorizedWorld

அமெரிக்கப் பொலிசாரால் கறுப்பின மக்கள் கொல்லப்படுவது பற்றி சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் விசாரணை செய்ய வேண்டும் – சர்வதேச விசாரணைக்குழு பரிந்துரை

அமெரிக்கப் பொலிசாரால் கறுப்பின மக்கள் கொல்லப்படுவது பற்றி சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் விசாரணை செய்ய வேண்டும் - சர்வதேச விசாரணைக்குழு பரிந்துரை

அமெரிக்காவில் கறுப்பினமக்கள் பொலிசாரால் கொல்லப்படுவது மனிதத்துக்கெதிரான குற்றமாகக் கருதப்படுமெனவும் இது குறித்து சர்வதேச குற்றபியல் நீதிமன்றம் உடனடியாக விசாரணைகளை ஆரம்பிக்க வேண்டுமென்றும் மனித உரிமை நிபுணர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

அமெரிக்க பொலிசாரால் கறுப்பின மக்கள் மீது மேற்கொள்ளப்படும் வன்முறைகள், சர்வதேச சட்டவரையறைகளின்படி மனிதத்துக்கெதிரான குற்றங்களாகவே பார்க்கப்படுமெனவும் அவை முறையாக விசாரிக்கப்பட்டு சர்வதேச சட்டங்களுக்கமைய தண்டனைகள் வழங்கப்படவேண்டுமெனவும் அமெரிக்க பொலிசாரின் வன்முறைகள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்ட சர்வதேச மனித உரிமை வழக்கறிஞர்கள் பரிந்துரைத்துள்ளனர்.

கறுப்பினத்தவரான ஜோர்ஜ் ஃபுளோய்ட் மரணம் தொடர்பாக டெறெக் ஷோவின் என்னும் மினியாபொலிஸ் பொலிஸ் அதிகாரி மீது தொடரப்பட்ட வழக்கில் ஷோவின் ̀கொலைக்குற்றவாளியென நீதிமன்றம் தீர்ப்பளித்ததைத் தொடர்ந்து அமெரிக்க பொலிசார் மீதான உலக அவதானம் அதிகரித்து வருகிறது.

11 நாடுகளைச் சேர்ந்த மனித உரிமை நிபுணர்கள் அமெரிக்க பொலிசாரின் வன்முறைகள் குறித்து மேற்கொண்ட விசாரணைகளைத் தொடர்ந்து வெளியிடப்பட்ட 188 பக்கங்களைக் கொண்ட அறிக்கையில் சர்வதேச குற்றவியல் நீதிமன்ற விசாரணையின் அவசியம் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது.

கறுப்பின சமூகத்தின்மீது இழைக்கப்படும் வன்முறைகளை “பொலிஸ் கொலைகள், நடமாட்ட சுதந்திரத்தில் பாரிய கட்டுப்பாடுகள், துன்புறுத்தல், வழக்குப் பதிவுகள் மற்றும் மனிதகுணாம்சமற்ற நடவடிக்கைகள்” ஆகிய சர்வதேச வரைமுறைகளுக்குள் அடக்கமுடியுமென இந்நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

அத்தோடு, ஹேக் இலிருக்கும் சர்வதேச குற்றவியல் நீதிமன்ற வழக்குத் தொடுநர் இவ்விடயம் தொடர்பாக உடனடியான நடவடிக்கைகளை எடுத்து சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் மீது வழக்குகளைப் பதியவேண்டுமெனவும் கேட்டுள்ளனர்.

இந் நிபுணர்கள் குழுவின் அறிக்கையில் அமெரிக்க பொலிசார் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ள இதர குற்றஞ்சாட்டுகள்:

  • பொலிசாரை நிர்வகிக்கும் சட்டங்கள் மற்றும், கறுப்பின மக்களின் போக்குவரத்தை நிறுத்தி மேற்கொள்ளப்படும் உடற் பரிசோதனைகள் உட்படப் பொலிசார் பிரயோகிக்கும் நடைமுறைகள் ஆகியவற்றில் சர்வதேச மனித உரிமை நியமங்கள் மீறப்படுதல்
  • கறுப்பின மக்கள் மீது துப்பாக்கிகள் மற்றும் ரேசர்கள் விகிதாசாரமற்ற முறையில் பாவிக்கப்படுதல்
  • கறுப்பின மக்கள் பொலிசாரால் கொல்லப்படும்போது அவர்களைசி ‘சில அழுகிய அப்பிள்கள்’ என உதாசீனம் செய்துவிட்டு தண்டனைகளேதும் வழங்கப்படாமல் தப்பித்துக் கொள்தல்

அமெரிக்காவிலுள்ள கறுப்பின மக்களைப் பொலிசாரினால் கழுத்தை நெரிப்பது மற்றும் இதர வன்முறைகளைப் பாவித்து கைது செய்ய முற்படுவது துன்புறுத்தலுக்குச் சமமானதும் சர்வதேச சட்டங்களின் கீழ் மனிதத்துக்கெதிரான குற்றமுமாகும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஜோர்ஜ் ஃபுளோய்ட் மற்றும் பல பொலிசாரினால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் இணைந்து சமீபத்தில் ஐ.நா. சபைக்கு செய்த முறைப்பாட்டின் காரணமாகவே இந் நிபுணர்குழு விசாரணைகளை மேற்கொண்டு இந்த அறிக்கையைச் சமர்ப்பித்துள்ளது.

ஆபிரிக்கா, ஆசியா, ஐரோப்பா, லத்தீன் அமெரிக்கா மர்றும் கரீபியன் நாடுகளைச் சேர்ந்த பல சட்டவியலாளர்கள் இணைந்து அமெரிக்க பொலிசாரின் இனவாத செயற்பாடுகளை ஆராய்ந்து இந்த அறிக்கையைச் சமர்ப்பித்துள்ளனர். இணையவழியாகப் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரிடமிருந்து பெறப்பட்ட வாக்குமூலங்களை வைத்து அவர்கள் இந்த முடிவிற்கு வந்துள்ளனர்.

கொல்லப்பட்ட அல்லது காயப்படுத்தப்பட்ட 44 கறுப்பின மக்கள் பற்றிய தகவல்களை இந்நிபுணர் குழு விசாரித்திருந்தது. இவ் விசாரணகளின் முடிவில், அமெரிக்க கறுப்பின மக்களுக்கு இழைக்கப்படும் அநீதி, காட்டப்படும் பாரபட்சம் தொடர்பாகக் கடுமையான தொனியுடன் கூடிய அறிக்கையை வெளியிட்டுள்ளது. “அமெரிக்காவில் இரண்டு சட்டங்கள் நடைமுறையிலுள்ளன. வெள்ளைக்காரர்களுக்கு ஒரு சட்டமும், ஆபிரிக்க அமெரிக்கர்களுக்கு ஒரு சட்டமும் அங்கு நடைமுறைப்படுத்தப்படுகின்றன” என அது தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ஜனவரி – பெப்ரவரி மாதங்களில் நடைபெற்ற இவ்விசாரணைகளின்போது பெறப்பட்ட சில தகவல்கள் அதிர்ச்சி தருவனவாக உள்ளன. சோன் பெல் அவரது திருமணத்தன்று காலை கொல்லப்படும்போது அவர் எந்தவித குற்றத்தையும் செய்திருக்கவில்லை. அவரது உடலில் 50 குண்டுகள் செலுத்தப்பட்டன. டொமினிக் ஆச்சிபோல்ட் தெருவைக் குறுக்கிடும்போது எந்தவித காரணமுமில்லாமல் கொல்லப்பட்டார். “அவர் எனத்து ஒரே ஒரு பிள்ளை, கடவுளால் எனக்குக் கொடுக்கப்பட்ட மிகவும் நேர்த்தியான ஒரு கொடை. அவர் கொல்லப்பட்டத்துடன் என் நம்பிக்கையும் கனவும் அடியோடு அழிக்கப்பட்டு விட்டன. எனது குமுறலை வார்த்தகளில் வடிக்க முடியாது. அதை யாரால் புரிந்துகொள்ள முடியும்?” என ஆர்ச்சிபோல்டின் தாயார் வருத்தப்பட்டார்.

அமெரிக்காவில் கறுப்பின மக்கள் பொலிசாரால் கொல்லப்படும் புள்ளி விபரம் அதிர்ச்சி தருவது. நான்கில் ஒரு கறுப்பின அமெரிக்கர்கள் பொலிசாரினால் கொல்லப்படுவதற்கான சாத்தியங்களூண்டு. 2005 முதல் 15,000 கறுப்பின மக்கள், கிட்டத்தட்ட வருடத்துக்கு 1,000 பேர், பொலிசாரால் கொல்லப்பட்டுள்ளார்கள். இக் காலகட்டத்தில் 104 பொலிசார் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தும் 35 பேருக்கே தண்டனை வழங்கப்பட்டது.

இவ் விசாரணையைச் செய்த ஆணையாளர்கள் அமெரிக்க அரசுக்கும், காங்கிரசுக்கும் சில் பரிந்துரைகளைச் செய்துள்ளார்கள். அவற்றில் சில: பொலிஸ் படை இராணுவம் போல் செயற்படுவதை நிறுத்த வேண்டும்; முறையான காரணங்கள் ஏதுமில்லாது, கதவைத் தட்டாமல் வீடுகளை உடைத்துக்கொண்டு உள்ளே செல்லும் நடைமுறை தடைசெய்யப்பட வேண்டும் ஆகியன அவற்றில் அடங்கும். ஆனாலும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் இவற்றை விசாரிக்கவேண்டுமென்ற பரிந்துரை இவைகளில் மிகவும் காத்திரமான ஒன்று. குறிப்பாக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தை அமெரிக்கா இதுவரை அங்கீகரிக்கவில்லை.

ட்றம்ப் நிர்வாகத்தின்போது அதன் தொடர் அழுத்தத்தால் ஐ.நா.சபை அமெரிக்கப் பொலிசார் புரியும் அட்டூழியங்கள் விடயத்தில் தலையிடாது ஒதுங்கியிருந்தது. ஆனால் மூன்று முன்னணி வழக்கறிஞர்கள் சங்கங்கள் – அமெரிக்காவிலுள்ள கறுப்பின வழக்கறிஞர்களின் தேசிய அவை, தேசிய வழக்கறிஞர்கள் சங்கம் மற்றும் ஜன்நாயக வழக்கறிஞர்களின் சர்வதேச அமைப்பு – இவ் விசாரணையை மேற்கொள்வதற்கான முயற்சிகளை மேற்கொண்டிருந்தன.

நேற்று (26), அமெரிக்க நீதித் திணைக்களம், பொலிஸ் நடைமுறைகள் பற்றிய சிவிலுரிமை விசாரணையொன்றைச் செய்யவிருப்பதாக அறிவித்துள்ளது. (தி கார்டியன்)