Spread the love

அமெரிக்கத் தேர்தல் 2020 | பைடனை நெருங்கிவரும் வெற்றி 1
அமெரிக்கத் தேர்தல் 2020 | பைடனை நெருங்கிவரும் வெற்றி 2

செவ்வாயன்று நடந்து முடிந்த அமெரிக்கத் தேர்தல் வாக்குகள் இன்னும் எண்ணி முடியாத நிலையில் அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதி யார் என்ற குழப்பம் இன்னும் தொடர்கிறது.

பல நாடுகளிலுமுள்ளதைப் போல தேர்தல் ஆணையம் போன்றொரு அமைப்பின் மூலம் இங்கு தேர்தல் நடத்தப்படுவதில்லை ஆதலால், வெற்றி பெற்றவர் தானாகத் தனது வெற்றியைப் பிரகடனப்படுத்துவதும், தோல்வியடைந்தவர் தனது தோல்வியை ஒப்புக்கொண்டு விலகிப் போவதும் இங்கு நடைபெறுவது வழக்கம். தேர்தலில் முறைகேடுகள் நடைபெற்றதெனக் கருதும் வேட்பாளர் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்வதன்மூலம் தனது முறைப்பாட்டுக்குத் தீர்வைத் தேடிக் கொள்ளலாம். அமெரிக்க வரலாற்றில் நான்கு தடவைகள் இப்படியான முறையீடுகளும் தீர்ப்புக்களும் இடம்பெற்றுள்ளன. இறுதியாக நடைபெற்ற சம்பவம் 2000 ஆம் ஆண்டில் ஜோர்ஜ் டபிள்யூ. புஷ்சுக்கும் அல் கோருக்குமிடையில் நடைபெற்ற தேர்தலில். இதன்போது அல் கோர் (ஜனநாயக் கட்சி) வெற்றி பெற்றிருந்தும் வாக்குகள் எண்ணுவதற்கு உச்ச நீதிமன்றம் கால அவகாசம் கொடுக்காமையால் அல் கோர் தானாகத் தோல்வியை ஒப்புக்கொண்டு விலகினார்.

இந்தத் தடவை, சில மாநிலங்களில் தபால் மூலம் கிடைக்கப்பெற்ற வாக்குகளை எண்ணுவதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. கோவிட் தொற்றுக் காரணமாக பல மில்லியன் மக்கள் தபால் மூலம் தமது வாக்குகளைச் செலுத்தியிருந்தனர். இதில் மோசடி நடைபெற வாய்ப்புண்டு எனத் தேர்தலுக்கு முன்னரிருந்தே ஜனாதிபதி ட்றம்ப் கூறி வருகிறார். இதனால் தபால் வாக்குகளில் பெரும்பான்மையானவை பைடனுக்கு ஆதரவானவை என எதிர்பார்க்கலாம். இதனால் வக்குகள் எண்ணுவதை நிறுத்தும்படி ட்றம்ப் வழக்குப் பதிவு செய்துள்ளார். இப்படியான தேர்தல் சட்டங்களை மாநிலங்களே கையாள்வதால் அந்தந்த மாநிலங்களில் இவ்வழக்குகள் பதியப்பட வேண்டும்.



இன்று (வியாழன்), எண்ணி முடிந்த வாக்குகளின் பிரகாரம், பைடனுக்கு 264 வாக்குகளும், ட்றம்பிற்கு 214 வாக்குகளும் கிடைத்துள்ளன. வெற்றி பெறுபவர் 270 வாக்குகளைப் பெற்றிருக்க வேண்டும். நெவாடா என்னும் 6 வாக்குகளைக் கொண்ட சிறிய மாநிலமொன்றில் பைடன் வெற்றி பெறுவதற்கான சாத்தியங்கள் உண்டு என்றாலும் அங்கு வாக்குகள் எண்ணி முடிய மேலும் இரண்டு அல்ல்து மூன்று நாட்கள் எடுக்கலாம் எனப்படுகிறது. அரிசோனா மாநிலத்திலும் பைடன் முன்னணியில் உள்ளதால் இவற்றில் ஏதாவது ஒன்றின் முடிவுகள் அறிவிக்கப்பட்டால் பைடன் வெற்றி பெறுவது உறுதியாகும்.

ட்றம்பைப் பொறுத்த வரையில் வெற்றிக்கு இன்னும் 56 வாக்குகள் தேவை. பென்சில்வேனியா, வட கரோலினா, ஜோர்ஜியா ஆகிய மாநிலங்களில் முன்னணியில் இருப்பினும் பென்சில்வேனியாவில் பைடன் நெருங்கி வருவதாக அறிவிக்கப்படுகிறது. நேற்று மதியம்வரை, இங்கு சுமார் 800,000 வாக்குகள் வரை எண்ணப்படவிருந்தது. எப்படியாயினும் ட்றம்பிற்குத் தேவையான வாக்குகளை இம் மூன்று மாநிலங்களால் மட்டும் கொடுக்க முடியாது. எனவே ட்றம்ப் பெரும்பாலும் தோல்வியைச் சந்திக்கும் வாய்ப்பே இருக்கிறது. இதனால், தான் முன்னணியில் இருக்கும் மாநிலங்களில் தபால் மூலம் கிடைக்கப்பெற்ற வாக்குகளை எண்ணுவதை நிறுத்தும்படி அந்தந்த மாநில நீதிமன்றங்களில் ட்றம்ப் வழக்குத் தொடர்ந்துள்ளார். 2000 ம் ஆண்டு ஃபுளோறிடாவில் அல் கோருக்கு நடைபெற்றது போல மத்திய உச்ச நீதிமன்றம் எண்ணுவதற்குக் கால அவகாசம் கொடுத்து ட்றம்பின் கோரிக்கைக்குச் சாதகமாகத் தீர்ப்பளித்தால் சில வேளைகளில் பைடனின் வெற்றி பறிக்கப்படுவதற்குச் சாத்தியமுண்டு. அது நடைபெறுவதற்கு முதல் பைடனின் வெற்றி அறிவிக்கப்பட்ட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

Print Friendly, PDF & Email