Spread the love

ஒரு அலசல்

சிவதாசன்

இன்னும் நான்கு நாட்களில் துரும்பர் துள்ளிக் குதிக்கப் போகிறார். வென்றாலும் சரி தோற்றாலும் சரி அவர் குதிக்கத்தான் போகிறார்.

துரும்பர் ஒரு குழந்தையின் மனத்தைக் கொண்டவர். அவரது அறிவையும் நீங்கள் ஒரு குழந்தைக்கு ஒப்பிட்டால் அதற்கு நான் பொறுப்பல்ல. ஜனாதிபதி பதவி அவருக்கு ஒரு ‘சூப்பி’. அதைப் பறித்தால் அவர் அழுவார், அடிப்பார் அல்லது கடிப்பார்.

பைடன் பேசாமல் இருப்பதும், துரும்பர் தொடர்ந்து பேசுவதும் மட்டுமே பைடன் வெற்றிக்குப் போதுமானவை.

அமெரிக்க மக்கள், அதே வேளை உலக மக்களும் கூட, அதிர்ஷ்டசாலிகளாக இருந்தால் நவம்பர் 3ம் திகதியே ஜோ பைடன் தீர்க்கமான வெற்றியப் பெற்றுவிட வேண்டும்.

அமெரிக்கத் தேர்தல் முறை துரும்பரைப் போலவே ஒரு குழப்பமான ஒன்று. 335 மில்லியன் சனத் தொகையில் ஏறத்தாள 175 மில்லியன் மக்கள் வாக்களிக்கிறார்கள். அவர்களது மொத்த வாக்குகளும் (popular votes), 538 தொகுதி வாக்குகளுக்குச் (electoral college votes) சமம். ஒவ்வொரு மாநிலங்களிலும் வாழும் மக்கட் தொகைக்கேற்ப இந்த 538 வாக்குகளும் பிரிதெடுக்கப்படுகின்றன. அத்தோடு ஒவ்வொரு மாநிலத்துக்கும் 2 செனட் வாக்குகளும் உண்டு. தேர்தல் நாளன்று 270 தொகுதி வாக்குகளைப் பெறும் வேட்பாளர் ஜனாதிபதியாகிறார்.

உலகின் பல நாடுகளில் உள்ளதைப் போல, தேர்தலை நடத்துவதற்கும், கண்காணிப்பதற்கும், பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குமென ஒரு தேர்தல் ஆணையம் அமெரிக்காவில் இல்லை. எனவே தேர்தல் நடைபெறும் மாநிலங்களே அங்கங்கு நடைபெறும் தேர்தல்களுக்கான விதிமுறைகளை வகுக்கின்றன.



கோவிட் பெருந்தொற்றுக் காரணமாக அமெரிக்காவில் முற்கூட்டிய வாக்களிப்பை, நீண்ட காலத்துக்கு, மாநிலங்கள் அனுமதித்தன. இதனால் இதுவரை 80 மில்லியன் மக்களுக்கு மேல் வாக்களித்துவிட்டார்கள். வாக்களிப்பு நிலையங்களுக்கு நேரில் சென்றும், தபால் மூலமும் வாக்களிப்பு நடைபெற்றிருக்கிறது. சில மாநிலங்களில் தபால் மூல வாக்களிப்பு நவம்பர் 3ம் திகதியுடன் முடிந்துவிடும். சில மாநிலங்களில் நவமபர் 3 க்கு முதல் திகதி முத்திரையிடப்பட்டிருந்தால் போதும் அது பிந்திக் கிடைத்தாலும் ஏற்றுக்கொள்ளப்படும். இப்படியான பல மில்லியன் வாக்குகள் கிடைப்பது வழக்கம். (2000 ஆம் ஆண்டின் ஜனாதிபதி தேர்தலில் ஃபுளோறிடா மாநிலத்தின் தபால் வாக்குகளால் ஜனநாயக்கட்சி வேட்பாளர் அல் கோர் புஷ் இனால் தோற்கடிக்கப்பட்டார்). இதுவே இத் தேர்தலில் சிக்கலைக் கொண்டுவரப்போகிறதென்று நோக்கர்கள் கருதுகிறார்கள்.

2016 தேர்தலில் ஹில்லறி கிளிண்டன் மொத்த வாக்க்குகளால் வெற்றி பெற்றிருந்தும் 316 தொகுதி வாக்குகளைப் பெற்று துரும்பர் வெற்றி பெற்றிருந்தார். இந்த வருடம் தனது ‘சூப்பி’ பறிபோகப் போகிறதென்ற அச்சத்தில் இப்போதே அழத் தொடங்கிவிட்டார். தபால் மூலம் வரும் வாக்குகளில் மோசடி நடைபெறுமென்றும் அப்படியாக நடைபெற்றால் தான் தோல்வியை ஒப்புக்கொள்ளப் போவதில்லை எனவும், உச்ச நீதிமன்றம் போய் எப்படியாவது தனது ‘சூப்பியைப்’ பெற்றுவிடுவேனென்றும் சபதமெடுத்திருக்கிறார். அதற்காகத்தான் அவசரம் அவசரமாக குடியரசுக் கட்சிப் பெருமக்கள் (செனட்டர்கள்) தமது ஆளான நீதிபதி கோணி பற்றெட்டை உச்ச நீதிமன்றத்துக்கு நியமித்தார்கள். 2000 ஆம் ஆண்டில் இப்படியொரு நிலைமை ஏற்பட்டபோது அல் கோர் பெருந்தன்மையாக விட்டுக்கொடுத்து பேசாமல் ஒதுங்கி விட்டார். இந்த வருடமும் அப்படியான நிலை ஏற்பட்டால் ஜோ பைடனும் பேசாமல் ஒதுங்கிவிடுவதாகச் சொல்லியிருக்கிறார். இப்படியான நிலையை ஏற்படுத்தும் ஒரே காரணி பிந்திக் கிடைக்கும் தபால் வாக்குகள்.

எனவே, நவம்பர் 3 ம் திகதி ஜோ பைடன் தீர்க்கமான வாக்குகளைப் பெற்று தபால் வாக்குகளின் தேவையில்லாமல் வெற்றிபெற்றால் அவர் தான் அடுத்த ஜனாதிபதி.

ஜோ பைடனின் வெற்றி சில வாக்குகளால் மட்டுமே அமையுமானாலுஞ்சரி, 2016 இல் போல, துரும்பருக்கு அதிக வாக்குகள் கிடைக்குமானாலுஞ்சரி அவர் துள்ளிக் குதிக்கத்தான் போகிறார்.



அதே வேளை, இதுவரை கிடைத்த சுமார் 80 மில்லியன் வாக்குகளில் பெரும்பான்மையானவை ஜோ பைடனுக்கே போடப்பட்டிருக்கின்றன என ஒரு வதந்தியுண்டு. முந்திய தேர்தல்களிலும் இதுவே தான் நடந்திருக்கிறது. இந்தத் தடவை கோவிட் தொற்றைத் தவிர்ப்பதற்காக வாக்களிக்கச் சென்றவர்கள் ஜனநாயக்கட்சியினரென்றும், தேர்தலன்று வாக்களிப்பவர்கள் பெரும்பாலும் குடியரசுக்கட்சியினரென்றும் (இது பாரம்பரியமாக நடைபெறுவது) ஒரு ஐதீகமுண்டு. அப்ப்டியானால் குறைந்தது 50 மில்லியன் வாக்குகளாவது நவம்பர் 3 ம் திகதி துரும்பருக்கு விழுமென்று எதிர்பார்க்கலாம்.

சாதக பாதகமான காரணிகள்

கொள்கை: துரும்பரின் வலதுசாரி, இனவாத, சீன, முஸ்லிம் எதிர்ப்புக் கொள்கை அவருக்கு பல சாதகமான நிலையைத் தோற்றுவித்திருக்கிறது. கோவிட் விடயத்தில் அதை முறையாக அவர்ர் கையாளவில்லை என்பதை விட அது ஒரு ‘சீன வைரஸ்’ என அவர் திசை திருப்பியதால் மக்களின் கோபம் சீனா மீது திரும்பிவிட்டது. சீனாவும் சர்வதேச தளங்களில் தெரிவிக்கும் அமெரிக்க எதிர்ப்பு வாக்காளர்களைத் துரும்பர் பக்கம் திருப்புகிறது. பிரான்ஸில் இஸ்லாமிய தீவிரவாதம், ஆசிரியர் கொலை போன்றவை உலகம் பூராவும் எழுப்பிவரும் இஸ்லாமிய எழுச்சி துரும்பரது முஸ்லிம் எதிர்ப்புக் கொள்கைக்கு ஆதரவைத் தேடித் தந்துள்ளது. பைடனின் இடதுசாரிக் கொள்கைகள் அவசியமானாலும் அவற்றை அவர் நெற்றியில் ஒட்டிக்கொண்டு திரியத் தேவையில்லை. அவர் அவற்றைப் பகிரங்கமாகக் கூறுவதால் கிடைக்கும் ஆதரவை விட எதிர்ப்புக்களே அதிகம். அவற்றைக் கூறாமல் விடுவதனால் இடதுசாரி ஆதரவாளர்கள் அவரை விட்டு எங்கும் ஓடிவிடப் போவதில்லைஎண்ணை வர்த்தகம் பல்லாயிரக்கணக்கான அமெரிக்கர்களுக்கு வேலை வழங்கி வருகின்றது. பைடன் பேசாமல் இருப்பதும், துரும்பர் தொடர்ந்து பேசுவதும் மட்டுமே பைடன் வெற்றிக்குப் போதுமானவை.

வயது: ஜோ பைடனுக்கு 77 வயது. துரும்பருக்கு 74 வயது. இருவரிலும் துரும்பர் கொஞ்சம் துடியாட்டமானவர். பைடன் மேடைக்கு வரும்போது ஓடிவந்து ஏறுவதைத் தவிர அவரது முகத்தில் களைப்புத் தெரிகிறது. அமெரிக்கர்கள் பொதுவாக வீரசாகசங்களுக்கு வாக்களிப்பவர்கள். நமது கனடிய எம்.ஜி.ஆரைப் போலக் கவர்ச்சியும் கொஞ்சம் வேண்டும். பைடனில் அது கொஞ்சம் கம்மி.

உதவி ஜனாதிபதி: பைடனின் உதவியாகப் போட்டியிடும் கமலா ஹரிஸ் (ஒரு அரைத் தமிழரென நாம் உணர்ச்சிவசப்பட்டாலும்) ஒரு தந்திரோபாயத் தெரிவல்ல. குறிப்பாக பைடனின் வயது கொஞ்சம் இக்கட்டானதாக் இருக்கும்போது ‘தற்செயலாக’ ஏதாவது நடந்தால் கமலாதான் ஜனாதிபதி. அமெரிக்கர்கள், அவர்கள் ஜனநாயக்கட்சி ஆதரவாளர்களாக இருப்பினும், வெள்ளை இனத் துவேஷம் உலகெங்கும் காட்டுத் தீ போலப் பரவிவரும் இக் காலத்தில், இன்னுமொரு கறுப்பு ஜனாதிபதியை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருப்பார்கள் என நம்பவில்லை. துரும்பரின் உதவி, பென்ஸ் ஒரு பொம்மையானாலும் அவரால் அதிகம் ஆபத்தில்லை எனப் பலரும் நம்புகிறார்கள்.

சீனா: உலகின் புதிய நாட்டண்மைக் காரனாக உருவெடுத்திருக்கும் சீனாவைச் சமாளிக்கும் வல்லமை துரும்பருக்கு மட்டுமே உண்டென்று பலரும் நம்புகிறார்கள். அபிவிருத்தியடந்த நாடாக இருந்தும் ‘தான் இன்னும் அபிவிருத்தியடைந்து வரும் ஒரு நாடு’ எனப் பாசாங்கு செய்து பல வர்த்தக சலுகைகளைச் சீனா பெறுவதற்கு ஒபாமா நிர்வாகமும் ஒரு முக்கிய காரணம். உலகின் தொழிற்சாலையாக சீனா உருவாகியமையால் தான் இன்று அமெரிக்காவை வெருட்டும் நிலைக்கு சீனா சென்றிருக்கிறது. குறிப்பாக கோவிட் தொற்று இன்னும் கட்டுப்பட்டுக்குக் கொண்டுவரப்படாத நிலையில் சீனாவைச் சமாளிக்க துரும்பரினால் மட்டுமே முடியுமென நம்புபவர்கள் பலர் அமெரிகாவில் மட்டுமல்ல அமெரிக்காவுக்கு வெளியிலும் இருக்கிறார்கள்.

கோவிட்: கோவிட் கட்டுப்பாட்டு விடயத்தில் துரும்பர் கோட்டை விட்டுவிட்டார் எனக் கூறப்படுவதில் கொஞ்சம் உண்மை இருந்தாலும், இக்குற்றச்சாட்டை ஒரு தேர்தல் பிரசாரமாகவே எடுக்க வேண்டும். துரும்பரின் இடத்தில் பைடன் இருந்திருந்தாலும் நிலைமை இதுவேயாகத்தான் இருந்திருக்கும். இறப்பு வீதம் வேண்டுமானால் கொஞ்சம் குறைவாக இருந்திருக்கலாம். துரும்பருக்கு முன் கொறோணாவைரஸை வெட்டிச் சாய்ப்பதற்கெனெ வெளிக்கிட்ட பொரிஸ் ஜோன்சனோ, நரேந்திர மோடியோ, இமானுவேல் மக்றோனோ, பெட்றோ சன்செயோ, சேர்ஜியோ மட்டறெல்லொவோ, அங்கெலா மேர்க்கெலோ இன்னும் போராடிக்கொண்டுதான் இருக்கிறார்கள். சீனப் பெருந்தலைவரைப் போலவே அவரது பிள்ளையான கொறோணோவைரஸையும் உலகத்தால் இன்னும் அறிந்துகொள்ள முடியவில்லை. அமெரிக்கப் பெருந்துயருக்கு துரும்பர் மட்டுமல்ல அவரது மருத்துவ ஆலோசகர்களும் காரணமே. வாக்காள மக்களுக்கு இந்த விடயம் தெரிந்திருக்கிறது என்பது ஆச்சரியமில்லை.



சாதனை: கோவிட் விடயத்தில் துரும்பர் கோட்டை விட்டுவிட்டார் என்பதைத் தவிர அவர்மீது குற்றம் காண அதிகமில்லை. வெளிவிவகாரங்களில், வட கொரியா போர் அச்சுறுத்தலை மேற்கொண்டபோது அதைப் பேச்சுவார்த்தை மூலம் தவிர்த்தார். 50 வருடப் பகையாளிகளான இஸ்ரேலையும் வளைகுடா அரபு நாடுகளையும் நட்பாக்கி வைத்தார். உள் நாட்டில் வரியைக் குறைத்தார். வெளிநாடுகளில் உற்பத்தித் தளங்களை வைத்திருந்த அமெரிக்க நிறுவனங்களைத் தனது மண்ணுக்குத் திருப்பிக் கொண்டுவந்தார். ஒரு வியாபாரியாக அமெரிக்காவின் உற்பத்தித் திறனை அதிகரிக்கச் செய்தார். பாதகமானவையாக, உலக நாடுகளின் தலைமைத்துவத்தை இழந்தமையும், வெள்ளைத் தீவிரவாதம் உலகம் முழுவதும் மீளெழுவதற்கும், அமெரிக்காவை உலகம் இகழ்வாகப் பார்ப்பதற்கும் காரணமாக இருந்தார். ஒப்பீட்டளவில் ‘ஒபாமா கெயர்’, பொருளாதார முன்னேற்றம், உலக தலைமைத்துவம் போன்ற விடயங்கள் பைடனுக்குச் சாதகமாக உள்ளன.

எப்படியானாலும் கோவிட் மீது பழியை அள்ளிப் போட்டுவிட்டு துரும்பரது வாக்காளர் அவருக்கே அள்ளிப் போடுவார்கள். கருத்துக் கணிப்பாளர்களது கண்களில் மண்ணை அள்ளித் தூவிவிட்டு முடிவுகளை மாற்றும் கலையைத் துரும்பரின் வாக்காளர்களுக்கு ஸ்டீவ் பனன் நன்றாகவே கற்றுக்கொடுத்திருக்கிறார்.

வழக்கம் போல, டெக்சாஸ், ஃப்ளோறிடா மாநிலங்களைச் சுழற்றி எடுக்கும் சூறாவளிபோல் இத் தேர்தல் சூறாவளியிலும் இவ்விரண்டு மாநிலங்கள் துரும்பரிடமிருந்து பறிபடுமானால் ‘சூப்பி’ போன மாதிரித்தான். நவம்பர் 3 ம் திகதி பைடன் வெற்றி அறிவிக்கப்படாவிட்டால் துரும்பரின் இரண்டாவது அவதாரத்தைத் தவிர்க்க முடியாது.

Print Friendly, PDF & Email