Analysis

அமெரிக்கத் தேர்தல் 2020 | உப-ஜனாதிபதி வேட்பாளரின் விவாதம் – ஒரு பார்வை


மாயமான்

இன்றிரவு 9:00 மணிக்கு (கனடிய நேரம்) விவாதம் மேடையேறியது. சென்ற வாரம் இரண்டு முதியவர்கள் களைத்துப்போகுமளவுக்கு (1:30 மணி நேரம்) விவாதம் நடந்ததைப் பார்த்தோ என்னவோ இன்று இரு இளையவர்களுக்கும் இருப்பதற்கு ஆசனம் கொடுத்து கண்ணாடிப் பெட்டிக்குள் பூட்டியிருந்தார்கள்.

குடியரசுக் கட்சியின் வேட்பாளர் மைக் பென்ஸ், ஒரு தலைமை வாத்தியார் போல அமைதியாக இருந்தார். செனட்டர் கமலா ஹரிஸ் மகனை வெளியேற்றியதற்காய் தலைமைவாத்தியாரைக் ‘கிழி, கிழி’ யெனக் ‘கிழி’க்க வந்த தாயார் போலிருந்தார். சமா ஆரம்பித்தது.

உப-ஜனாதிபதி வேட்பாளர்களிடையேயான விவாதம் வாக்குகளைப் பெற்றுக்கொடுப்பதில் பெரிதாக எதையும் சாதிக்கப்போவதில்லை என்பது ஒன்றும் புதிதல்ல. ஆனால் 74 வயது ட்றம்ப் வந்தாலென்ன, 78 வயது பைடன் வந்தாலென்ன அவர்களது வயதுகள் கொஞ்சம் ஆட்டம் காணுவதாக இருப்பதால் இந்த இரு இளையவர்களும் முக்கியத்துவம் பெறுகிறார்கள். அதனால் அவர்களது கெட்டித்தனத்தை அவதானிக்க வேண்டிய அவசியம் ஏற்படுகிறது.

இந்த இருவரும் பிளவுபட்ட இரண்டு அமெரிக்காக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துபவர்கள். எனவே அவர்களது கொள்கைகள் எப்படியிருக்கும் என்பதற்குப் பிறிதான ஒரு ஆய்வும் தேவையில்லை. ஆனால் அவர்களது ஆளுமைகளை அறிய இது ஒரு சந்தர்ப்பம்.மைக் பென்ஸ் ‘மடம் ருசோட்’ பொம்மை போன்றவர். அவர் இயற்கையிலேயே அப்படியானவரா அல்லது ட்றம்பின் கீழ் வேலை பார்க்கத் தொடங்கிய பின்னர் இப்படியாக மாறிவிட்டாரா தெரியாது. அவரது சிறிய வாய் அதிகம் பேசி நான் கண்டதில்லை.

கமலா ஹரிஸ் ஒரு முன்னாள் சட்டமா அதிபர். செனட் சபை விசாரணைகளில் அவரது கேள்விகள் மிளகாய்ப்பொடி கலந்ததுபோல் இருக்கும். எனவே ‘இப்பிடி எத்தினைபேர நான் பாத்தனான்’ என்ற attitude உடன் அவர் தன்னம்பிக்கையையையும் தாண்டிய ஒரு arrogance உடன் இருப்பதுபோல் தெரிந்தது. உண்மையில் அவர் விவாதித்திருக்க வேண்டியது ஜனாதிபதி ட்றம்புடன்.

“அப்பிலே நாளும் அடித்தடித்து நாளுமதைத் தப்பினால் நம்மையது தப்பாதோ” என்ற இரட்டைப் புலவர் நிலைபோல, நடுநிலையாளர், துவைத்துக் கிழித்த கேள்விகளோடு வந்தார். இரண்டு விவாதிகளுமே அவ்வப்போது கேள்விகளைச் சுத்திச் சுத்தி ஓடிக்கொண்டிருந்தார்கள். கேள்வி தப்பியோடிக்கொண்டிருந்தது.

மைக் பென்ஸ், பாவம், ட்றம்பின் அயோக்கியத்தனமான நடவடிக்கைகளுக்குப் பதில் சொல்லவேண்டிய நிலை. ஒப்பீட்டளவில் அவர் ட்றம்பை விட நல்ல மனிதர். இயன்ற அளவில் ட்றம்பைக் காப்பாற்ற அவர் முயன்றார். முடியாத தருணங்களில் அவர் ஓட முயன்றார்.

கமலா ஹரிஸ் மிகவும் சாணக்கியமாகத் தனது பதில்களை முன்வைத்தார். ஜனநாயகக் கட்சியின் சாதனைகள் அத்தனைக்கும் அவர் ஒபாமாவைப் பொறுப்பாக்கவில்லை (Obamacare ஐத் தவிர). மாறாக ஜோ பைடன் செய்தவையாகவே அனைத்துக்கும் claim பண்ணினார். கறுப்பு – வெள்ளை அரசியல் நுண்ணுணர்வாளர்களுக்கு இது மிக முக்கியம்.

அதே வேளை, மைக் பென்ஸ் எதிலும் தன்னை முன்நிறுத்தவில்லை. தன்னை ஒரு சாதனையாளனாகக் காட்ட முயலவில்லை. ட்றம்ப் நிர்வாகத்தில் அது சாத்தியமுமில்லை என்பதோடு அது அவருக்கு மேலும் பாதகமாகவும் அமையலாம் என்பதற்காகவாக இருக்கலாம். கமலா ஹரிஸின் பார்வையும், எண்ணமும் 2024 தேர்தலைக் குறிவைத்தவையாக இருந்தனவா எனக்கூடப் பார்க்கலாம்.நடுவராக இருந்த ஊடகவியலாளர் சூசன் பேஜ் அவ்வப்போது, கமலா ஹரிஸ் விசுவாசியாக இருந்தாரா அல்லது கமலா ஹரிஸின் முன் நீதிமன்றத்தில் நிற்பதாக நினைத்துக்கொண்டாரா தெரியாது, கொஞ்சம் பக்க சார்புடன் செயற்பட்டதாகத் தெரிந்தது.

விவாதம் புதிதாக எதையும் வெளிக்கொணரவில்லை. கமலா ஹரிஸ், மைக் பென்சை விட ஆளுமை மிக்க ஜனாதிபதி என்பதை நான்கு வருடங்களுக்கு முன்பே காட்டுவதற்காக நடத்தப்பட்ட ஒன்று.

At least, “Will you shut up woman” என்று மைக் பென்ஸ் சொல்லவில்லை என்பதால் இவ் விவாதம் நீதியாகம், அமைதியாகவும், முகச்சுளிப்புக்கள் இல்லாமலும் நடைபெற்ற ஒன்று. வாழ்க அமெரிக்கா!