Spread the love

Abhishek Bachchan Aishwarya Rai and daughter Aaradhya

பிரபல பொலிவூட் நடிகர் அமித்தாப் பச்சனும் அவரது மகன் அபிஷேக் பச்சனும் கோவிட் நோய்த்தொற்றுக்குள்ளாகியுள்ளதாக நேற்று ருவீட் செய்திருந்தார்கள். இன்று அபிஷேக்கின் மனைவி ஐஸ்வர்யா மற்றும் மகள் ஆரத்யா ஆகியோரையும் நோய் தொற்றியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், அமித்தாப்பின் மனைவி ஜயாவிற்கு நோய் தொற்றவில்லை எனக் கூறப்படுகிறது.

77 வயதுள்ள அமித்தாப் பச்சன் தனக்கு நோய் தொற்றியுள்ளதாக அறிவித்த சில மணி நேரங்களுள் அபிஷேக்கும் தனது தொற்று பற்றி ருவீட் செய்திருந்தார். அமிதாப், மகன் அபிஷேக் இருவருக்கும் மென்மையான நோயறிகுறிகளே காணப்படுகிறதெனவும் இருவரும் நானவாடி மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதாகவும் இருவரது உடல் நிலையும் திருப்திகரமாக உள்ளதாகவும் அறியப்படுகிறது.


திருப்பதி தேவஸ்தானத்தில் 91 பேருக்கு நோய்த் தொற்று

இதே வேளை, திருப்பதி தேவஸ்தானத்தில் பணியாற்றும் 91 பேருக்கு நோய்த் தொற்றுக் கண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Scattered crowd in front of the Tirumala temple

ஆந்திரப் பிரதேசத்திலுள்ள திருப்பதி வெங்கடேஸ்வரர் ஆலயத்துக்கு வரும் பக்தர்கள் தினமும் எழுந்தமானமாகப் பரிசோதிக்கப்படுகிறார்கள் என தேவஸ்தானத்தின் நிர்வாகப் பணிப்பாளர் அனில் குமார் சிங்கால் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.

ஜூலை 10 வரை, தேவஸ்தானத்தின் 3,569 பணியாளர் பரிசோதிக்கப்பட்டுள்ளார்கள். அவர்களில் 91 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதே வேளை பக்தர்களில் 700 பேர் பரிசோதிக்கப்பட்டும் எவரும் தொற்றுக்குள்ளாகியிருக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.



கடந்த ஜூன் 11 அன்று இக் கோவில் பொதுமக்களுக்காகக் திறந்துவிடப்பட்டது. இந்த மாதம் மட்டும் இக் கோவிலுக்கு 16.73 கோடி ரூபாய்கள் உண்டியலில் தானம் செய்யப்பட்டுள்ளது. ஒரு நாளில் 50,000 முதல் ஒரு இலட்சம் வரை பக்தர்கள் இக் கோவிலைத் தரிசிக்க வருகிறார்கள். நோய்த் தொற்றுக் காரணமாக தற்போது நாளாந்த எண்ணிககையை 12,000 ஆகக் கட்டுப்படுத்தியுள்ளார்கள்.

Print Friendly, PDF & Email
Related:  தமிழ்ப் பிரதேசங்களின் அபிவிருத்தி துரிதப்படுத்தப்படும் - பிரதமர் ராஜபக்ச