Technology & ScienceWorld

‘அமானுஷ்ய போர்வீரர்களை’ உருவாக்கும் உயிரியல் பரிசோதனைகளில் சீனா – அமெரிக்க உளவு நிறுவனம்


உயிரியல் ரீதியாக பலமும், விவேகமும் கொண்ட போர்வீரர்களை உருவாக்க்கும் பரிசோதனைகளை சீனா செய்துள்ளதாக அமெரிக்க உளவு நிறுவனத்தின் உயரதிகாரி ஜோன் றட்கிளிஃப் குறிப்பிட்டுள்ளார்.

“அமெரிக்காவுக்கு இன்று இருக்கும் மிகவும் பாரதூரமான ஆபத்து சீனாவிடம்தான் இருக்கிறது” என, ட்றம்ப் நிர்வாகத்தில், அமெரிக்க தேசிய பாதுகாப்புப் பணிப்பாளராக இருக்கும் றட்கிளிஃப், வால் ஸ்ட்றீட் ஜேர்ணல் பத்திரிகைக்கு எழுதிய கட்டுரையொன்றில் தெரிவித்துள்ளார்.

“எங்களுக்குக் கிடைத்த துப்புக்கள் தெளிவாகக் கூறுவது என்னவெனில், பொருளாதார ரீதியாகவும், இராணுவ ரீதியாகவும், தொழில்நுட்ப ரீதியாகவும், இவ்வுலகத்தை ஆக்கிரமிக்க சீனாதிடம் பூண்டுள்ளது. சீன கம்யூனிஸ்ட் கட்சியின் நடவடிக்கைகளுக்கு அதன் முனைப்புகளும், சில நிறுவனங்களின் மேலோட்டமான செயற்பாடுகளும் உருமறைப்புச் செய்கின்றன” என அவர் தெரிவித்துள்ளார்.

தனது மக்கள் விடுதலை இராணுவத்தின் வீரர் சிலரை அமானுஷ்ய மனிதர்களாக மாற்றுவதற்கு சீனா சில உயிரியற் பரிசோதனைகளை மேற்கொண்டுள்ளது எனவும் தனது நோக்கத்தை எய்துவதற்கு அது தார்மீக எல்லைகளையும் தாண்டத் தயங்காது எனவும் அவர் தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.



அரசின் (அமெரிக்க) உளவு நிறுவனங்களைச் சேர்ந்த அதிகாரிகளும், ஆய்வாளர்களும், ரஷ்யாவின் மீதும், பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகள் மீதும் தமது கவனத்தைச் செலுத்தி வருகின்றனர். ஆனால் இன்று நாம் எம் முன்னாலுள்ள நிதர்சனங்களைப் பார்க்க வேண்டும். இப்போதிருந்து சீனாவே அமெரிக்காவின் பாதுகாப்பு இலக்காக இருக்கவேண்டும்” என்கிறார் றட்கிளிஃப்.

சாதாரண மனிதர்களைச் ‘சுப்பர் மனிதர்களாக’ ஆக்கும் பல திரைப்படங்களும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும் வெளிவந்துள்ளன. பலம் வாய்ந்த கணனிகள், செயற்கை விவேகம், வியாபித்துவரும் தொழில்நுட்பம் என்பன இக் கற்பனைக் கதைகளை நிஜமாக்கி வருகின்றன. சீனாவின் பொருளாதார பலமும் திண்ணமான தலைமையும் தார்மீகத்தை மதிக்காத தன்மையும் சீனாவின் அமானுஷ்ய மனிதர்களை விரைவில் உருவாக்கலாம்.