News & AnalysisWorldமாயமான்

அமசோன் முதலாளியின் விண்ணைக் கிழித்து மீண்ட காம யாத்திரை

அலம்பலும் புலம்பலும் – மாயமான்

2021 பல காரணங்களுக்காகவும் பதிவில் வைக்கப்படவேண்டிய ஒரு வருடம். திரும்புமிடமெல்லாம் கோமாளிகள். கோவிட்டின் புண்ணியத்தில் அசத்துகிறார்கள்.

உலகின் அதை சிறந்த பணக்காரர்களில் முன்னணியில் இருக்கும் அமசோன் நிறுவனத்தின் முதலாளி ஜெஃப் பெசோஸ் எட்டு நிமிடங்கள் ஜாலியாக விண் யாத்திரை செய்து மீண்டிருக்கிறார். இதற்கு முன்னர் பிரித்தானியாவைச் சேர்ந்த வேர்ஜின் நிறுவன முதலாளி றிச்சாட் பிரான்சன் போட்டி போட்டுக்கொண்டு தானே முதலில் விண்ணுக்குச் சென்று மீண்ட விண்ணன் என்ற பட்டத்தைத் தட்டிக்கொண்டு போய்விட்டார். பாவம் ஜெஃப்.

இருந்தாலும் ஜெஃப், வடிவேலு ஸ்டைலில், தன்பாட்டுக்கு ‘நானும் விண்ணன் தான்’ என வேறு விதமாகக் காட்டிவிட்டார். அவரைப் பின்பற்றி இப்போது வியாபார உலகம் பணம் பண்ணப் போகிறது.

மணிபல்லவத்தில் மணிமேகலைக்குத் தெய்வம் வழங்கிய வானூர்தி போலல்ல நமது அமசோன் விண்ணன் யாத்திரை சென்ற வானூர்தி. ‘புளூ ஒறிஜின்’ (Blue Origin) என்ற அவரது நிறுவனம் தயாரித்தது ஆண் குறியின் தோற்றத்தில் அமைந்த ஏவுகணை (rocket). விண்ணைத் துளைத்துக்கொண்டு செல்லும் தனது ஊர்தியை அப்படி வடிவமைத்திருக்கிறார் என்கிறார்கள்.

இப்படிக் கூறி அமசோன் விண்ணனை நக்கலடிப்பது வேறு யாருமல்ல. வியாபாரத்தில் அவரது பரம எதிரியும் ‘ஸ்பேஸ் எக்ஸ்’ (Space X) என்னும் தனது நிறுவனத்தின் மூலம் ஏற்கெனவே விண்ணைத் துளைத்தெடுத்து வரும் ரெஸ்லா முதலாளி இலான் மஸ்க்.

இந்த இருவருக்குள்ளும் யார் உலகில் சிறந்த பணக்காரர் என்ற போட்டி நீண்டகாலமாக நிலவி வருகிறது. இவர்கள் பங்குச் சந்தை மனநோயாளிகளை நம்பிப் பிழைப்பவர்கள். வாயைத் திறந்தால் அல்லது ஸ்மார்ட் ஃபோனை நோண்டினால் சந்தைகள் ஏறும் இறங்கும் என்னும் அளவுக்கு உலகம் இவர்களது உதடுகளிலும், விரல் நுனிகளிலும் இருக்கிறது. மஸ்க் இந்த விடயத்தில் தீராத விளையாட்டுப் பிள்ளை. நோண்டி விட்டு அழுவதை ரசிப்பவர். மண்டைகளை உடைத்துக்கொள்ளும் ரெஸ்லா உரிமையாளர்களைக் கவநிக்காது விட்டுவிட்டு, ‘பிட் கொயின்’ டிஜிட்டல் நாணைய உரிமையாளர்களைப் பைத்தியமாக்குவதே இவரது முழுநேர வேலை.

இப்போது பெசோஸின் புளூ ஒரிஜின் ராக்கெட் ஆண் குறி வடிவத்தில் விண்ணைத் துளைத்துக்கொண்டு செல்வதைப் பற்றி நோண்டி விட்டதனால் காமத் துறை வியாபாரிகளுக்கு அதிர்ஷ்டம் அடித்திருக்கிறது. ஏற்கெனவே ஒரு காமத் துறை நிறுவனம் ஜெஃப் பெசோஸின் ராக்கெட் வடிவத்தில் தான் தனது பொருட்களை வடிவமைக்கப் போவதாக அறிவித்துவிட்டது. அமசோன் பங்குச் சந்தை இதனால் விண்ணைக் கிழித்துக்கொண்டு போகப்போகிறது. சும்மா இருந்த ஜெஃபை நோண்டப் போய் அவரை மேலும் பணக்காரனாக ஆக்கப் போகிறார் மஸ்க்.

பாவம் றிச்சார்ட் பிரான்சன். தனது வேர்ஜின் ராக்கெட்டில் முதலில் ‘விண்ணைக் கிழித்த விண்ணன்’ என்ற பட்டத்தோடு முருகப் பெருமானின் மயில் வாகனத்தைப்பற்றி அவர் கனவு கண்டுகொண்டிருக்கலாம். அவரது பூர்வீகம் தமிழ்நாடு என்றொரு கதையும் உண்டு.

இதற்குள் விண்ணேகி மீண்ட ஜெஃப் பெசோஸ் விட்ட விண்ணாணம் சிரிப்புத் தருவது. “விண்ணிலிருந்து பூமியைப் பார்க்கும்போது பூமி எவ்வளவு பலவீனமாக இருக்கிறது என்பதை அறிந்து கவலைப்பட்டேன்” என்கிறார். வளி மாசடைவதால் ஏற்படும் காலநிலை மாற்றங்களால் பூமி எதிர்பார்த்ததைவிட வேகமாகச் சீரழிந்து வருகிறது. வளி மாசடைவதற்குக் காரணம் தேவைக்கதிகமான எரிபொருட் பாவனை. எரிபொருள் பாவனையில் முன்னணியில் நிற்பவை ராக்கெட்டுகள். அப்படியான ஒரு ராக்கெட்டில் காம யாத்திரை போய் வந்து பூமியைப் பற்றி வருந்தும் ஒருவரை என்னவென்று சொல்லலாம்? தனது இந்த யாத்திரையைச் சாத்தியமாக்கியமைக்காக அமசோன் நிறுவனப் பணியாளர், வாடிக்கையாளருக்கு அவர் நன்றி வேறு சொல்லியிருக்கிறார்.

ஜெஃப் பெசோஸின் இக் காம யாத்திரையும் அதன் பின்னான அவரது அறிவிப்புகளும் பலரது எள்ளி நகையாட்ல்களுக்கு உள்ளாகியிருக்கிறது. தாம் இனிமேல் அமசோன் (மூலம்) பொருட்களைக் கொள்முதல் செய்யப் போவதில்லை எனப் பலர் அறிவித்திருக்கிறார்கள்.

என்ன செய்வது. விண் இப்போது பணக்காரரின் விளையாட்டுத் திடலாகிவிட்டது. அதுவும் உலகம் பிராணவாயு இயந்திரத்தில் பூட்டப்பட்டு உயிருக்காகப் போராடிக்கொண்டிருக்கும்போது அவர்கள் விண்ணில் போட்டிகளை நடத்துகிறார்கள்.

எனது கவலை எல்லாம் அம்பானி, அதானி, அலிபாபா (ஜாக் மா) எல்லோரும் எப்போ ஈராக்கின் ஸ்கட் ஏவுகணைகளில் விண்ணைக் கிழிக்கப் போகிறார்கள் என்பதே. துறைமுக நகரம் சில் ஆண்டுகளுக்கு முன்னர் நிர்மாணிக்கப்பட்டிருந்தால் நாமல் பபாவும் இந்த அணியில் சேர்ந்திருப்பார்.

அய்யோ பாவம்…