அமசோன் | காடழிப்போரால் கொல்லப்படும் ஆதிவாசிகள் -

அமசோன் | காடழிப்போரால் கொல்லப்படும் ஆதிவாசிகள்

பிரேசில் ஜனாதிபதி பொல்சொனாரோ வணிக நிறுவனங்களுக்கு உதவுவதாகக் குற்றச்சாட்டு!

பிரேசிலின் அமசோன் மழைக்காடுகளைப் பாதுகாத்து வந்த சுதேசியும், சூழற் போராளியுமான போலொ போலினோ குவாஹாஹரா காடழிப்பாளர்களாற் கொல்லப்பட்டதாக பிராந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவரது சகாவான லேற்சியோ காயமடைந்துள்ளார்.

எரிக்கப்படும் அமசோன் காடுகள்

போலோவும் லேற்சியோவும் ‘வனப் பாதுகாப்பு படை’ என அழைக்கப்படும் அமசோன் மழைக்காடுகளை வணிக நிறுவனங்கள் அழிப்பதைத் தடுக்கும் அமைப்பின் அங்கத்தவர்களாவர். இருவரும் அமசோன் ஆதிவாசிகளாவர்.

கடந்த வெள்ளியன்று இருவரும் தமது கிராமத்தை விட்டு தண்ணீர் எடுப்பதற்காகப் போனபோது காடுகளை அழிப்பவர்களின் ஏவலாளிகளால் கொல்லப்பட்டார்கள் என சர்வதேச அமைப்பான, மறன்ஹோ பிரதேச மனித உரிமைச் செயலகம் தெரிவித்திருக்கிறது.

அமசோன் ஆதிவாசிகள்

போலோ கழுத்தில் சுடப்பட்டு வனப் பிதேசத்திலேயே இறந்துபோனதாகவும் லேற்சியோ தப்பியோடிவிட்டதாகவும் இவ்வமைப்பு மேலும் தெரிவித்தது. காடழிப்புக்காரரில் ஒருவரைக் காணவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

மாநிலத் தலைநகரமான சாவோ லூயி இலிருந்து 500 கி.மீ.தூரத்திலுள்ள ஆதிவாசிகளின் பிரதேசமான அராரிபோயா என்னுமிடத்தில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. காவற்துறை இச் சம்பவம் பற்றி விசாரணைகளை மேற்கொள்ளவிருப்பதாக நீதி அமைச்சர் சேர்ஜியோ மோரோ தெரிவித்திருக்கிறார்.

அரசமைப்பு விதிகளை மதிக்காத மாநிலத்தில் இதற்கு முன்னரும் இப்படியான பல கொலைகள் நடந்துள்ளன என கிரீன் பீஸ் அமைப்பு தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

இப் பிரதேசத்தில் வாழும் ஆதிவாசிகளைக் காப்பாற்றுவதற்கு குவாஹஹாரா போன்றவர்களின் பணி முக்கியமானது என சேர்வைவல் இண்டர்நாஷனல் என்ற அமைப்பின் ஆய்வாளர் சேரா ஷென்கெர் கூறினார்.

“இந் நிலங்களைப் பாதுகாப்பது பிரேசில் அரசின் பொறுப்பு என்பதை முதலில் அந்த அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும். அவர்கள் அதை ஏற்றுக்கொள்ளாததானால் தான் போலோ போன்ற தன்னார்வ அமைப்புகள் காவல் பணியைச் செய்யவேண்டி உள்ளது. அது கடினமானதும், ஆபத்து மிகுந்ததுமாகும்” என சேரா ஏ.எஃப்.பி. செய்தி நிறுவனத்திற்குத் தெரிவித்தார்.

இதற்கு முன்னர் நடைபெற்ற சம்பவத்தில் மூன்று ஆதி வாசி வனக் காவலர் சுட்டுக் கொல்லப்பட்டிருந்தனர்.

கடந்த ஜனவரி பதவியேற்றதிலிருந்து ஜனாதிபதி ஜேயர் பொல்சொனாரோ, காடழிப்பு, சுரங்கம் மற்றும் பெருங் கமம் செய்யும் வியாபார நண்பர்களுக்காக அமசோன் மழைக் காடுகளை அழிக்கவும், ஆதிவாசிகளைத் துன்புறுத்தவும் உதவிசெய்கிறார் என்ற குற்றச்சாட்டு பரவலாக முன்வைக்கப்படுகிறது.

Please follow and like us:
error0