அப்பிள் சாதனங்களைப் பாவிப்போர் கவனத்திற்கு…
iPhone, iPad, iPod, MAC OS (Monterey) சாதனங்களுள் திருடர்கள் ‘நுழையலாம்’
ஐஃபோன், ஐபாட், ஐபொட் மற்றும் அப்பிள் கணனிகளின் பாதுகாப்பை முறியடித்துக்கொண்டு ‘திருடர்கள்’ உள் நுழைந்து அவற்றின் செயற்பாடுகளைத் தம்வசமாக்கிய சம்பவம் சமீபத்தில் நடைபெற்றிருப்பதாக அப்பிள் நிறுவன்ம் அறிவித்திருக்கிறது.
கடந்த புதனன்று இது தொடர்பாக அப்பிள் நிறுவனம் இரண்டு தொழில்நுட்ப அறிக்கைகளை வெளியிட்டிருந்தாலும் அவை பாவனையாளர்களின் கவனத்தைப் போதுமான அளவுக்கு ஈர்க்கவில்லை என அந் நிறுவனம் தெரிவித்திருக்கிறது.
இச் சாதனங்களின் பாதுகாப்பு பொறிமுறைகளை மீறி உள்நுழையும் ‘திருடர்கள்’ இச் சாதனங்களைத் தமக்குரியதாக மாற்றி தாம் விரும்பிய செயலிகளையும், மென்பொருட்களையும் அவற்றில் பதிவிட்டுக்கொள்வார்கள். பின்னர் இவற்றின் மூலம் தாம் விரும்பிய தொடர்பாடல்களைப் பாவனையாளர்களின் பெயரில் (கணக்கில்) மேற்கொள்வார்கள் என தொழில்நுட்ப நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.
இப்படியாகப் பாதிக்கப்பட்டதாக இதுவரை அறியப்பட்ட அப்பிள் சாதனங்கள் என iPhone 6S முதல் அதற்குப் பின்னர் வந்த மொடல்கள், 5ஆம் தலைமுறை உட்பட அதற்குப் பின்னர் வந்த iPad இன் பல மொடல்கள், அனைத்து iPad Pro மொடல்கள், iPad Air2 மொடல், சில iPod மொடல்கள் மற்றும் MacOS Monterey இல் இயங்கும் கணனிகள் ஆகியன இத் திருட்டு நடவடிக்கைகளால் பாதிக்கப்படலாம் என அப்பிள் நிறுவனம் எச்சரித்திருக்கிறது. இதிலிருந்து தப்புவதற்கு இச்சாதனங்களைப் பாவிப்பவர்கள் செயலிகளின் Update களை உடனடியாகத் தரவிறக்கம் செய்யும்படி அப்பிள் நிறுவனம் கேட்டிருக்கிறது.
இஸ்ரேல் நாட்டில் இருந்து இயங்கும் NSO Group போன்ற நிறுவனங்கள் ஃபோன்கள் மற்றும் கணனிகளின் பென்பொருட்களில் தவறுதலாக ஏற்படும் பலவீனங்களைக் கண்டறிந்து அவற்றின் மூலம் உள்நுழைந்து தரவுகளையும் பாவனையாளர்களின் நடமாட்டங்கள் மற்றும் அவர்களது வாழ்வியல் நடைமுறைகள் ஆகியவற்றை அறிந்து தமது அரசியல் வர்த்தக நடவடிக்கைகளுக்காகப் பாவிக்கின்றன. இக் காரணங்களுக்காக் அமெரிக்க வர்த்தகத் திணைக்களம் NSO Group நிறுவனத்தின்மீது தடை விதித்துள்ளது. மத்திய கிழக்கு, ஆபிரிக்கா, லத்தீன் அமெரிக்கா போன்ற நாடுகளில் ஊடகவியலாளர்கள், அரசையும் ஆட்சியாளரையும் விமர்சிப்பவர்கள் மற்றும் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் ஆகியோரைப் பற்றிய விபரங்களைத் திரட்டுவதற்கு அரசுகள் இம் மென்பொருளைப் பாவிக்கின்றன.
அப்பிள் உட்படப் பெரும்பாலான தொழில்நுட்ப நிறுவனங்கள் இப்பாதுகாப்பு குறைபாடுகளைக் கண்டறிந்து அதற்கான திருத்த மென்பொருள்களை (update patches) உடனடியாகப் பாவனையாளர்களின் சாதனங்களுக்கு அனுப்பிவிடுகின்றன. ஆனால் அதற்கு இச் சாதனங்களிலுள்ள Automatic Update என்ற அம்சத்தைத் தெரிவு செய்வதன் மூலம் அனுமதி வழங்கப்பட்டிருக்க வேண்டும்.
எனவே அப்பிள் சாதங்களைப் பாவிப்பவர்கள் உங்களது சாதனங்களில் இக்குறிப்பிட்ட பாதுகாப்பு தொடர்பான திருத்தத்தைத் தரவிறக்கிக் கொள்ளுங்கள்.