• Post category:HEALTH
  • Post published:May 11, 2020
Spread the love

கோவிட்-19 நோயின் புதிய, அபூர்வமான அறிகுறிகளை நாளுக்கு நாள் விஞ்ஞானிகள் கண்டறிந்து வருவது மருத்துவர்களுக்கு SARS-CoV-2 வைரஸின் மர்மத்தைத் துலக்குவதற்கு மேலும் பல வழிமுறைகளைக் கொடுத்துவருகிறது.

சில கோவிட் நோயாளிகளின் இரத்தத்தில் ஒக்சிசன் மிகவும் குறைவாகவுள்ளது ஆனால் ஒக்சிசன் குறைவாக இருப்பவர்களுக்கு வழமைபோல் இருக்கும் மூச்சுத் திணறல் (shortness of breath) இவர்களிடம் காணப்படாமை மருத்துவர்களைக் குழப்பத்தில் ஆழ்த்திவருகிறது.

ஏப்ரல் மாதக் கடைசியில், அமெரிக்க நோய்த்தடுப்பு மையம், கோவிட்-19 நோய்க்கான அறிகுறிகளின் பட்டியலைப் புதுப்பித்தது. புதிய பல அறிகுறிகள் அதில் சேர்க்கப்பட்டன. ஆரம்பத்தில், காய்ச்சல், இருமல், மூச்சுத் திணறல் ஆகியன கோவிட்-19 நோயிநால் ஏற்படும் அறிகுறிகள் என மையம் அறிவித்திருந்தது. தற்போது, குலப்பனுடனான குளிர் காய்ச்சல் (shaking with chills), தசை நோவு (muscle pain), தலைவலி (headache), தொண்டைக் கரகரப்பு (sore throat), சுவையையும் மணத்தையும் இழத்தல் (loss of taste and smell) ஆகியனவும் நோயின் அறிகுறிகளாக இருக்கலாமென அது அறிவித்துள்ளது.

வைரஸும், வைரஸ் பற்றிய ஆராய்ச்சியும் தலை தெறிக்கும் வேகத்தில் போய்க்கொண்டிருக்கும் நேரத்தில் ஆராய்ச்சியாளர்கள் புதிய நோயறிகுறிகளையும் கண்டறிந்து வருகிறார்கள். இளையோரிலும், முதியோரிலும் இந் நோய் வெவ்வேறு அபூர்வமான அறிகுறிகளைக் காட்டி வருகிறது. இவற்றுக்கு SARS-CoV-2 வைரஸ் நேரடியாகக் காரணமாக இருக்கிறதா என்பது புதிராக இருக்கிறது.

SARS-CoV-2 இதுவரை ஒரு சுவாசமண்டல நோயாகவே பார்க்கப்பட்டு வந்தது. ஆனால் இப்போது உடல் முழுவதிலும் பல பாகங்களையும் பாதிக்க்கின்றது என நிரூபிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, இருதயம், சிறுநீர்ப்பை, சதயம், சிறுநீரகம், மூக்கு, கண், மூளை ஆகியன அவற்றில் சில. இந்த வைரஸ் மனிதக் கலங்களுக்குள் உள்ளே நுழைய , ACE-2, TMPRSS2 என்ற இரண்டு புரதங்கள் தேவை. அப்புரதங்கள் காணப்படும் எல்லா உறுப்புகளையும் இவ் வைரஸ் பாதிக்கிறது என விஞ்ஞானிகள் சந்தேகிக்கிறார்கள்.

பல்லுறுப்புக் கல அழற்சி (multi-system inflammation)

மே மாதம் 4ம் திகதி, நியூ யோர்க் நகர சுகாதாரத் திணைக்களம் ஒரு அபாய அறிவிப்பைச் செய்திருந்தது. 2 முதல் 15 வயதுவரையுள்ள 15 குழந்தைகள் பல உறுப்புகளிலும் அழற்சி அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது தொடர்பாக அவ்வறிவிப்பு இருந்தது. இது கோவிட்-19 நோயோடு தொடர்புடையதாக இருக்குமோ என்ற சந்தேகம் மருத்துவர்களிடம் தோன்றியிருந்தது. ஐரோப்பாவில், இவ்வகையான அறிகுறிகளுடன் காணப்பட்ட பல குழந்தைகளுக்கு கோவிட்-19 தொற்று இருந்ததாகப் பின்னர் கண்டறியப்பட்டிருந்தது. இவ்வறிகுறிகள் நச்சு அதிர்ச்சி அறிகுறி அல்லது கவசாகி நோய்க்கு ஒப்பாக இருப்பதாக மருத்துவர்கள் அவதானித்தார்கள். நியூ யோர்க் குழந்தைகள் எல்லோரிலும் பல பொதுமைகள் காணப்பட்டன: காய்ச்சல், தோற் கிரந்தி, வயிற்று வலி, வாந்தி, வயிற்றோட்டம் ஆகிய அறிகுறிகளில் பல இக் குழந்தைகளில் அவதனிக்கப்பட்டன. இவர்களில் காணப்பட்டது பல்லுறுப்பு அழற்சி அறிகுறியென மருத்துவர்கள் தீர்மானித்தார்கள். இப்படியான தீர்மானம் வெகு அருமையாகவே செய்யப்படுவது வழக்கம்.

Related:  புதிய கோவிட் வைரஸிலிருந்து மக்களை எமது மருந்து பாதுகாக்கும் - அஸ்ட்றாசெனிக்கா முதன்மை நிர்வாகி
பக்கவாதமும் இரத்தம் கட்டியாதலும் Strokes and blood clots
அபூர்வமான புதிய நோயறிகுறிகளைக் காட்டும் கோவிட்-19 1

உலகமெங்கும், வயது வந்த நோயாளிகலில் மருத்துவர்கள் அவதானித்த ஒரு விடயம் இரத்தம் கட்டியாதல். வேறெந்த நோய்க் காரணிகளையும் கொண்டிராத சுகதேகிகளிம்கூட இப்பிரச்சினை இருப்பது அவதானிக்கப்பட்டது. சமீபத்தில், நியூ யோர்க் நகர மருத்துவமனையொன்றில், 33 முதல் 49 வயதுவரையுள்ள ஐந்து பேர் கோவிட்-19 தொடர்பான பாரதூரமான பக்கவாதங்களுடன் அனுமதிக்கப்பட்டதாக நியூ இங்க்லாண்ட் ஜேர்ணல் ஒஃப் மெடிசின் என்ற சஞ்சிகை செய்தி வெளியிட்டிருந்தது. அவர்களில் ஒருவருக்கு மட்டுமே முன்னர் பக்கவாதம் வந்த வரலாறு இருந்தது. இளையவர்களில் இப்படியான நோய்கள் காணப்படுவது அரிதெனினும், ஏப்ரல் மாதத்தில் மட்டும், நெதர்லாந்தில் 31 பேர் இப்படியான நாள அடைப்புகளுக்கு (thrombotic complications) ஆளாகியிருந்தார்கள்“கோவிட் விரல்கள்” (COVID toes)

கடும் குளிரினால் ஏற்படும் Frost Bite போன்று, கால் விரல்கள் (பெரும்பாலும்) சிவப்பாகவோ அல்லது ஊதாவாக மாறிய நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். இவர்களில் பலருக்கு கோவிட்-19 இருப்பது பின்னர் கண்டுபிடிக்கப்பட்டது. வைரஸ்கள் இரத்தக்குழாய்களில் அழற்சியை (circulatory system inflammation) ஏற்படுத்தும்போது இப்படியான அறிகுறிகள் காணப்படுவது வழக்கம். இங்கும் கோவிட்-19 நோயின் காரணமாகவே இவ்வறிகுறிகள் காட்டப்படுகின்றன என மருத்துவர்கள் நம்புகிறார்கள்.

அமைதியான ஒக்சிசன் குறைபாடு (silent hypoxia)

நாடிகளாற் காவிச் செல்லப்படும் இரத்தத்தில் இருக்கும் ஒக்சிசனின் அளவு குறைவடைவதை hypoxia என்பார்கள். ஆனால் அது நடைபெறும்போது நோயாளி மிகவும் கடுமையான மூச்சுத் திணறலுக்கு உள்ளாவார். ஆனால் ஒக்சிசன் குறைவாகவும் இருந்து மூச்சுத் திணறலும் பாரதூரமாக இல்லாமல் இருப்பதை silent hypoxia என அழைப்பார்கள். நியூ யோர்க்கில் சில கோவிட்-19 நோயாளிகளில் ஒக்சிசன் அளவு பாரதூரமாகக் குறைந்திருந்து என அவதானிக்கப்பட்டிருந்தும், அவர்களில் மூச்சுத்திணறல் காணப்படாமை மருத்துவர்களை அதிசயிக்க வைத்திருக்கிறது.

வயிறு, குடல் வியாதிகள் (gastrointestinal issues)

கலிபோர்ணியாவில் 116 கோவிட் நோயாளிகளில் செய்த ஆராய்ச்சியில், 32 வீதமானோர் பசியின்மை, குமட்டல், வயிற்றோட்டம் போன்ற வயிறு, குடல் சம்பந்தமான வியாதிகளால் பாதிக்கப்பட்டிருந்தமை அவதானிக்கப்பட்டது. SARS-CoV-2 வைரஸ் மனிதக் கலங்களுக்குள் புகுவதற்குப் பாவிக்கும் ACE2 புரதங்கள் இவ்வுறுப்புகளில் மிதமிச்சமாகக் காணப்படுவதுவே கோவிட்-19 வயிறு, குடற் பகுதிகளைப் பாதிப்பதற்குக் காரணம் என தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மயக்கம் (delirium)

கோவிட்-19 தொற்றுக்குள்ளான முதியவர்கள்பலர் தடுமாற்றம், மனக்குழப்பம் ஆகியவற்றுக்கு உள்ளாகுவது பற்றி சுவிட்சர்லாந்தின் லூசான் மருத்துவமனை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. கோவிட்-19 இன் இதர அறிகுறிகளுடன், தடுமாற்றம், விழுதல், மனக்குழப்பம் ஆகிய அறிகுறிகளை முதிய நோயாளிகளில் அவதானிக்கப்பட்டதன் காரணமாக அவ்வறிக்கை வெளியிடப்பட்டது. முதியவர்களில் சிறுநீர்க்குழாயில் தொற்று ஏற்படும்போது மயக்கம் ஏற்படுவது ஏற்கெனவே அறியப்பட்ட ஒன்று. இங்கும் அப்படியான நிலைமைதான் ஏற்படுகிறாதா எனத் தற்போது ஆராயப்பட்டு வருகிறது.

Print Friendly, PDF & Email