அபாயம் ! – முழுமையாகத் தடுப்பூசி பெற்றவர்களையும் தாக்கும் டெல்ற்றா பிளஸ் வைரஸ் திரிபு
முழுமையாகத் தடுப்பூசிகளைப் போட்டுக்கொண்டவர்களையும் தாக்கும் புதிய வைரஸ் திரிபொன்று பரவி வருவதாக உலகின் பல நாடுகளிலுமிருந்தும் சுகாதார அதிகாரிகள் அபாயச் சமிக்ஞையை வெளியிட்டு வருகின்றனர். டெல்ற்றா பிளஸ் என அழைக்கப்படும் இக் கோவிட் திரிபு, தற்போது பிரித்தானியா, நியூ சீலந்து, இஸ்ரேல் ஆகிய நாடுகளில் காணப்படுவதாக அறிவிக்கப்படுகிறது.
முற்றாகத் தடுப்பூசிகளைப் பெற்றவர்கள் தொடர்ந்தும் அங்கீகரிக்கப்பட்ட நோய்த்தடுப்பு முறைகளைப் பின்பற்றவேண்டுமெனவும், வைரஸ் தொடர்ந்த்தும் ஆபத்தான திரிபுகளை உருவாக்குவதற்கு இடமளிக்க வேண்டாமெனவும் சுகாதார அதிகாரிகள் மக்களை வேண்டிக்கொள்கின்றனர். அதிக எண்ணிக்கையைக் கொண்ட ஒன்றுகூடல்கள், மண்டபங்களுள் நிகழ்வுகளை ஒழுங்குசெய்தல் ஆகியவற்றைத் தவிர்க்கும்படி அவர்கள் கேட்டுக்கொள்கிறார்கள்.
ஜூலை 2021 இல் இனம் காணப்பட்ட, AY.4.2 என அழைக்கப்படும் இந்த டெல்ற்றா பிளஸ் (Delta Plus) தற்போதுள்ள தடுப்பு மருந்துகளால் கட்டுப்படுத்த முடியாத தாங்குதிறனைக் கொண்டவையாக உருமாற்றம் பெற்று வருவதாக நிபுணர்கள் கருதுகிறார்கள். மனிதக் கலங்களைப் பற்றிப் பிடித்துக்கொள்ளும், வைரஸின் ஒரு உறுப்பான, ஈட்டிப் புரதத்தில் (spike protein) மாற்றங்களைச் செய்வதன் மூலம் இவ் வைரஸ் தனது தொற்றும் தன்மையை அதிகரித்து வருகிறது என நிபுணர்கள் கருதுகிறார்கள்.
இவ்வைரஸ் தொற்றின் சாதாரண அறிகுறிகளாக உலர் இருமல் (dry cough), சோர்வு (tiredness), காய்ச்சல் (fever) ஆஅகியவையும், தீவிர அறிகுறிகளாக மூச்சுத் திணறல் (shortness of breath), வயிற்று வலி (abdominal pain) மற்றும் சிலரில் சரும சுணைப்பு (skin rash), தொண்டையில் கரகரப்பு (sore throat), மணமிழப்பு (loss of smell), வயிற்றோட்டம் (diarrhea) தலைவலி (headache), தடிமன் (runny nose) ஆகியவை இருக்கும்.