அனைத்துலக மருத்துவ நல அமைப்பு (IMHO-USA) US$ 3.1 மில்லியன் மருத்துவ உபகரணங்கள் இலங்கைக்கு அன்பளிப்பு
இலங்கையில் மிக மோசமான இடர்நிலைக்கு உள்ளாகிவரும் பொதுமக்களின் மருத்துவ நிவாரண முயற்சிகளை மனதில் வைத்து, அமெரிக்காவைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கி வரும் அனைத்துலக மருத்துவ நல அமைப்பு ( International Medical Health Organization – (IMHO-USA), இலங்கைக்கு 3.1 மில்லியன் அமெரிக்க டாலர்கள் பெறுமதியுள்ள அவசரகாலப் பாவனைக்கான மருத்துவ உபகரணங்களை வழங்கியுள்ளது.
2003 ம் ஆண்டு அமெரிக்காவில் பல தமிழ் மருத்துவர்களும் இதர தொண்டு மனப்பான்மைகொண்ட தமிழ் அமெரிக்கர்களும் இணைந்து உருவாக்கிய அனைத்துலக மருத்துவ நல அமைப்பு 2004 ஆழிப் பேரலை இடரின் போது உலகம் முழுவதுமிருந்து பல மருத்துவர்களை வட-கிழக்கு பகுதிகளுக்கு அநுப்பி நிவாரணப் பணிகளைச் செய்திருந்தது. இலங்கையில் மட்டுமல்லாது உலகின் பல நாடுகளிலும் இன் நிறுவனம், எல்லைகளற்ற மருத்துவர்களின் அமைப்பு போன்ற தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து தனது பணிகளை முன்னெடுத்து வருகிறது. தற்போது, கனடா, பிரித்தானியா, அவுஸ்திரேலியா, இலங்கை போன்ற நாடுகளில் இவ்வமைப்பு தனது கிளைகளை விஸ்தரித்திருக்கிறது. 2009 இறுதிப் போருக்குப் பின்னர் இன் நிறுவனத்தின் சேவைகள் வடக்கு, கிழக்கு, மலையகம் எனத் தமிழர் வாழும் பிரதேசங்களில் வாழும் மக்களுக்கு சுகாதாரம் மட்டுமல்லாது, கல்வித் துறை போன்றவற்றிலும் வாழ்வாதார சேவைகளை வழங்கி வருகிறது.
தற்போதைய கோவிட் அவசரகால நிலை குறித்து இவ்வமைப்பின் இலங்கைக் கிளை, மாவட்ட மருத்துவ அதிகாரிகள், இலங்கை சுகாதார அமைச்சு மூலம் தகவல்களைச் சேகரித்து அதற்கிணங்க இந்த அவசர தேவைகளுக்கான மருத்துவ உபகரணங்களை அனுப்பியிருக்கிறது.
பன்னிரண்டு பாரிய கொள்கலன்களில் இரண்டு மாதங்களுக்கு முன்னர் அனுப்பப்பட்ட புத்தம் புதிய இவ்வுபகரணங்கள், தமிழரால் நிர்வகிக்கப்படும் தொண்டு நிறுவனமொன்றினால் வழங்கப்பட்ட அதிகூடிய நிவாரண பங்களிப்பாகும். கப்பல் மூலம் அனுப்பப்பட்ட இவ்வுபகரணங்கள் கடற்பயணத்துக்கு ஒரு மாதமும், சுங்க விடுவிப்புக்கு ஒரு மாதமுமென இரண்டு மாத காலவிரயத்துக்குப் பின்னர் தற்போது சுகாதார அமைச்சு அதிகாரிகளால் பொதுப் பாவனைக்கென விடுவிக்கப்பட்டுள்ளது.
VOCSN PRO-Ventilators, Millennium M10600 Oxygen Concentrators and CPAP machines, Disposable Masks, Tie Masks, Ear Loop Masks, N95 Masks, Hospital Gowns, ISO Gowns, Hand Sanitizers உட்படப் பலவகையான மருத்துவ உபகரணங்கள் இதில் அடங்குகின்றன.
மலையகம், கிழக்கு, வடக்கு மாகாணங்கள் உட்பட இலங்கையில் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள பிரதேசங்களிலுள்ள தெரிவுசெய்யப்பட்ட வைத்தியசாலைகளுக்கு இவ்வுபகரணங்கள் சுகாதார அமைச்சினால் விநியோகிக்கப்படுமென அனைத்துலக மருத்துவநல அமைப்பு (அமெரிக்கா) தெரிவித்துள்ளது.
இலங்கை சுகாதார அமைச்சின் வழங்கல் பிரிவில், நேற்று (செப்டெம்பர் 01) நடைபெற்ற இவ்வுபகரணங்களின் கையளிப்பு வைபவத்தின்போது சுகாதார அமைச்சின் செயலாளர் வைத்தியர் முனசிங்க, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்த்தந, பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் (திட்டமிடல்) வைத்தியர் சதாசிவம் சிறீதரன், பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் (மருத்துவ வழங்கல்) வைத்தியர் டீ.ஆர்.கே. ஹேரத் மற்றும் மருந்து வழங்கல் பிரிவின் பணிப்பாளர் கபில விக்கிரமசிங்க ஆகியோர் கலந்துகொண்டனர்.