NewsSri Lanka

அனைத்துலக உண்மைக்கும் நீதிக்குமான செயற்திட்டம் (ITJP): போரினால் மரணித்தவர்களைக் கணக்கிடல்

சிறீலங்காவில் 2009இல் போர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு ஒரு தசாப்தம் முடிந்துவிட்டது. எத்தனை பேர் இறந்தார்கள், எத்தனை பேர் காணாமற் போனார்கள் என்ற அறுதியான ஒரு இலக்கத்தைத் தர அரசுக்கு இணக்கமில்லை, தமிழர் தரப்பில் ஆக்கபூர்வமான முயற்சிகள் எதுவும் எடுக்கப்பட்டதாகத் தெரியவுமில்லை. 

இத் துயரமான நிலைமைக்கு தென்னிலங்கை அரசுகளும் அரசியல்வாதிகளும் காரணிகளாக இருந்ததனாலோ என்னவோ பாதிக்கப்பட்டவர்களின் தவிப்புக்களைத் தீர்க்குமளவுக்கு உண்மையயும் நீதியையும் நிலைநாட்டவேண்டுமென்ற எந்த அவசரமும் அவர்களுக்கு இருப்பதாகத் தெரியவில்லை. இந் நிலையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இருக்கக்கூடிய ஒரே அபயம் அனைத்துலக நாடுகளும் ஐ.நா. போன்ற அவற்றின் சாதனங்களும் தான். 

இருப்பினும் நடைபெற்ற அநியாயத்துக்கு நாம் நியாயமான தீர்ப்பொன்றை எதிர்பார்க்கும்போது நடைபெற்ற அநியாயம் இது தான் என்று ஆதாரங்களோடும் சாட்சியங்களோடும் தரவுகளைக் கொடுப்பதும் அவசியமாகிறது. துர்ப்பாக்கியமாக, இதுவரையில் அரச தரப்பிலிருந்தோ, அல்லது தமிழர் தரப்பிலிருந்தோ தரவுகள் திரட்டப்பட்டு ஆவணப்படுத்தப்பட்டிருக்கவில்லை. வருடா வருடம் ஐ.நா. முன்றலில் நாம் என்னதான் அழுது புரண்டாலும் நம்பகத்தன்மையுடன் ஆவணங்களைச் சமர்ப்பித்ததாகத் தெரியவில்லை.

இன் நிலையில் அனைத்துலக உண்மை, நீதிக்கான செயற்திட்டம் (International Truth and Justice Project – ITJP), மனித உரிமைகள் தரவாய்வுக் குழுமம் (Human Rights Data Analysis Group – HRDAG) என்ற இரு அனைத்துலக அமைப்புகள் சிறீலங்காவின் 2009 இறுதிப்போரின் முன்னரும் பின்னரும் மரணித்த, காணாமற் போனவர்களின் எண்ணிக்கையைக் கணக்கிடுவதற்கான முயற்சிகளில் இறங்கியுள்ளன. அமெரிக்காவில் இயங்கி வரும் ‘இலங்கைத் தமிழ்ச் சங்கம்’ மற்றும் கனடிய தமிழ்க் காங்கிரஸ் போன்ற அமைப்புகள் இம் முயற்சிக்கு ஆதரவளிப்பதுடன் இது குறித்த விருப்பப்பாடுள்ள அனைத்து அமைப்புக்கள், தனியார் எல்லோரையும் ஒருங்கிணைக்கும் முயற்சிகளிலும் இறங்கியுள்ளன.

தென்னாபிரிக்காவைச் சேர்ந்த, ITJP யின் நிறைவேற்றுப் பணிப்பாளரான ஜஸ்மின் சூக்கா ஏற்கெனவே ஐ.நா.வில் இது குறித்துப் போராடி வருபவர். HRDAG  உலக அரங்கில் மதிக்கப்படும் புள்ளிவிவரம் மற்றும் தரவுகளை விஞ்ஞான முறையில் ஆராய்ந்து அறிக்கைகளைத் தயாரித்து வழங்கும் ஒரு நிறுவனம். குவாட்டமாலா போன்ற பல நாடுகளில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் பற்றி இவ்வமைப்பு தகவல்களைச் சேகரித்து ஆய்ந்து அறிக்கைகளைச் சமர்ப்பித்திருக்கிறது. தமிழர் தரப்போ அல்லது எந்த பாதிக்கப்பட்ட தரப்பினரோ தாமாகச் சேகரித்துத் தரும் தகவல்களுக்கு நம்பகத் தன்மை இருப்பதில்லை என சிறீலங்கா பல தடவைகள் சாடியிருக்கிறது. எனவே இப்படி சர்வதேச அரங்கில் அனுபவமும் நம்பகத்தன்மையும் கொண்ட நிறுவனங்களின் மூலம் நம் பணிகளை முன்னெடுப்பது நல்லதும் வரவேற்கத் தக்கதுமாகும்.

இத் தருணத்தில் இவ்விரு அமைப்புக்களும் எதிர்பார்ப்பது, போர்க்காலத்தில் மரணித்தவர்கள் பற்றிய சில தரவுகளையே. பல தமிழ் அமைப்புக்களும், தனிப்பட்டவர்களும், ஊடகங்களும் இறந்துபோனவர்கள், காணாமற் போனவர்கள் பற்றி ஏற்கெனவே பல தகவல்களைத் திரட்டி வைத்திருப்பார்கள் அல்லது தகவல்களை வழங்கக்கூடிய தொடர்புகளைக் கொண்டிருப்பார்கள். இப்படியானவர்கள் தாங்கள் ஏற்கெனவே வைத்திருக்கும் தகவல்களை இவ்வமைப்புக்களுடன் தொடர்புகொண்டு அவர்களிடம் கையளிக்கலாம். தகவல்களைத் திரட்டக்கூடியவர்கள், தொடர்புகளை வைத்திருப்பவர்கள் தாமாக இத் தகவல்களைப் பெற்றுப் பதியக்கூடியதான படிவங்களை இவ்வமைப்புகள் ஏற்கெனவே தயாரித்துள்ளன. அவற்றைப் பெறும் வழி வகைகளை கீழே தந்திருக்கிறோம்.

இந்த மாதம் (ஆகஸ்ட்) 24, 25ம் திகதிகளில் கனடிய தமிழ்க் காங்கிரஸ் நடாத்தும் 5 வது ‘தெரு விழாவில்’ மேற்கூறிய அமைப்புக்கள் ஒரு சாவடியை அமைப்பதாக எண்ணியுள்ளன. தகவல்களைத் திரட்டுவதற்குத் தேவையான பத்திரங்களும் வழிகாட்டல் உதவிகளும் இச் சாவடியில் வழங்கப்படும். 

சிறீலங்கா அரசுகளினால் தொடர்ந்தும் ஏமாற்றப்பட்டுக்கொண்டு இருப்பதை விட நாம் எமது எதிர்காலத்தை எமது கைகளிலே எடுக்கவேண்டிய தருணம் வந்திருக்கிறது. இதற்காக நாம் வேறு அணுகுமுறைகளைக் கையாளவேண்டும். சரியான தரவுகளும், ஆவணங்களும் அவற்றை உரிய முறையில் கையாளவல்ல நிறுவனங்களும் இன்றய காலத்தின் தேவையாக நாம் பார்க்கிறோம். 

அதையும் விடவும், மரணித்த இம்மக்களைக் காலம் பூராவும் நினைவில் வைத்திருக்கக் கூடிய ஒரு நினைவுக் கோர்வையை உருவாக்குவதற்கும் இத் தரவுகள் பயன்படுமென்ற நம்பிக்கை இருக்கிறது. அவர்களை நினைப்பது அவர்களின் மரணங்களுக்கு அர்த்தத்தைக் கொடுக்கலாம். அவர்கள் எமக்காக மரணித்தவர்கள் எனவே இது எங்கள் கடமை.

தகவல்களை வழங்கும் எவரின் அடையாளங்களோ, பெயர்களோ, முகவரிகளோ பிரத்தியேகமாகவே இருக்கும் என்பதை உறுதிப்படுத்துகிறோம்.

தகவல்களை அனுப்புவதற்கான HRDAG / ITJP மின் முகவரிகள்: psl@gmail.com or info@hrdag.org

படிவங்களைத் தரவிறக்குவதற்கு: English அல்லது Tamil.

தரவிறக்கக்கூடிய பதிவுப் படிவங்களுக்கு (downloadable spreadsheet)  இத்தொடர்பை அழுத்தவும் . தமிழ், சிங்களம், ஆங்கில மொழிகளில் உள்ள இப்படிவங்கள் ஒருவரின் இறப்பு பற்றித் திரட்டவேண்டிய தகவல்கள்களைக் கொண்டிருக்கிறது

படிவங்களை நிரப்புவதில் ஏற்படக்கூடிய சந்தேகங்களைத் தீர்க்க அடிக்கடி கேட்கப்படும் கேவிகள் – இதை அழுத்தவும்

சிறீலங்கா தொடர்பாக HRDAG மேற்கொண்டுவரும் பணிகள் பற்றி அறிவதற்கு இதை அழுத்தவும்.

சிறீலங்கா தொடர்பாக ITJP மேற்கொண்டுவரும் பணிகள் பற்றி அறிவதற்கு http://www.itjpsl.com/reports/counting-the-dead என்ற அதன் இணைய முகவரிக்கு செல்லவும்.

குவாட்டமாலா தொடர்பாக HRDAG மேற்கொண்டுவரும் பணிகள் பற்றி அறிவதற்கு https://psmag.com/social-justice/using-machine-learning-to-hold-human-rights-abusers-accountable என்ற இணைய முகவரிக்குச் செல்லவும்.

தொடர்புகளுக்கு: Canadian Tamil Congress – 416-240-0078.

நேரடியாக: தமிழர் தெருவிழா – August 24 &25 Markham Road, Scarborough