India

“அனுர அரசுக்குத் தொந்தரவு கொடுக்க வேண்டாம்!”

8 ஆவது இந்து சமுத்திர உச்சி மாநாடு 16-17 ஆம் திகதிகளில் ஓமான் நாட்டின் மஸ்கட் நகரில் நடைபெற்றது. இலங்கை, இந்தியா, சிங்கப்பூர் உட்பட இந்து சமுத்திரப் பிராந்திய கடல் வர்த்தகம் தொடர்பாக வருடா வருடம் நடைபெறும் இம்மாநாட்டில் இலங்லை சார்பாக இம்முறை ரணில் விக்கிரமசிங்க கலந்துகொண்டிருந்தார். இம்மாநாட்டில் கலந்துகொண்ட இந்திய மூத்த ராஜதந்திரி ஒருவர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு கடும் எச்சரிக்கை விடுத்ததாக கொழும்பு ஊடகமொன்று தெரிவித்திருக்கிறது.

முந்தய வருடங்களில் ரணில் இந்தியாவிற்கு நெருக்கமாக இருந்திருந்தாலும் அரகாலய மக்கள் எழுச்சியின்போது அவர் இந்தியாவை மீறி சில செயற்பாடுகளை மேற்கொண்டிருந்தார் எனவும் இதனால் கோதாபயவிற்கு மாற்றீடாக ரணிலைத் தவிர்த்து வேறொருவரை இந்தியா பரிந்துரைத்தது எனவும் இருப்பினும் ராஜபக்சக்களுடன் பின்னரங்கு உடன்படிக்கைகளைச் செய்து அவர் ஜனாதிபதியாக வர முடிந்தது எனவும் அப்போது கூறப்பட்டது. இருப்பினும் ஆட்சி மீண்டும் ராஜபக்சக்களின் கைகளில் போய்விடக்கூடாது என்பதில் இந்தியா அக்கறை கொண்டிருந்தமையால் ரணிலின் காபந்து அரசுக்கு இந்தியா ஆதரவளித்து வந்தது. ஆனாலும் அதன் நீண்டகாலத் திட்டத்தின் பிரகாரம் தேசிய மக்கள் சக்தியை ஆட்சிக்குத் தயாராக்குவதில் இந்தியா பின்னணியில் செயற்பட்டது. இதனால் தான் அனுரகுமார இந்தியாவிற்கு அழைக்கப்பட்டு வகுப்பெடுக்கப்பட்டார்.


இந்நிலையில் ரணில் விக்கிரமசிங்க தானே இந்தியாவின் உற்ற நண்பன் எனப் பாசாங்கு செய்துகொண்டு நாட்டின் பொருளாதார மீட்பில் இந்தியாவைப் பங்காளியாக்கியது தானே எனவும் மார் தட்டி வந்தார். தேசிய மக்கள் சக்தி அரசு ஆட்சி அமைத்த பின்னரும் அவர்கள் அனுபவமில்லாத புதியவர்கள் எனக்கூறி பொருளாதாரத்திலும் நிர்வாகத்திலும் தானே அதி முதிர்ந்த அனுபவசாலி என்ற மமதையோடு அனுர ஆட்சியை அடிக்கடி விமர்சித்தும் வருகிறார். இந்தியா தனக்கு மட்டுமே நெருக்கமானது என அவரது பிரச்சாரங்கள் இருந்து வந்தன. இந்நிலையில் மஸ்கெட்டில் நடைபெற்ற 8 ஆவது இந்து சமுத்திர உச்சி மாநாட்டில் மூத்த இந்திய ராஜதந்திரி ஒருவர் ரணிலுக்கு “இந்தியாவுடனான உங்கள் உறவைப் பாவித்து தேசிய மக்கள் சக்தி அரசிற்கு தொந்தரவு கொடுக்க வேண்டாம். இதை இந்தியா பார்த்துக்கொண்டிருக்காது” எனக் கடுந்தொனியில் எச்சரிக்கை விடுத்தார் என கொழும்பு ஊடகமொன்று தெரிவித்திருக்கிறது.

இதே வேளை ரணில் விகிரமசிங்கவின் பல் வேட அரசியல் ஏமாற்று வேலைகள் சமீப காலங்களில் தொடர்ச்சியாக வெளிப்படுத்தப்பட்டு வருகின்றன. அவர் ஆட்சியில் இருந்தபோது தான் இலங்கையை ஒரு ஆசியா-முதல் நாடாகவும் ‘பிறிக்ஸ்’ அமைப்பின் சார்பு நிலை நாடாகவும் வைத்திருப்பேன் எனச் சர்வதேச அரங்குகளில் கூறிவந்தமை அமெரிக்காவுடனான விரிசலை அதிகப்படுத்தியது. இதனால் தான் அரகாலயா எழுச்சியைத் தொடர்ந்து அமெரிக்க தூதுவர் ஜூலி ச்சங்க் ரணிலுக்குப் பதிலாக அப்போதைய சபாநாயகரை ஜனாதிபதியாக்க முனைந்தமை. சமீபத்தில் அல்-ஜசீரா தொலைக்காட்சியில் பட்டலங்கா சித்திரவதை கூடம் பற்றி அதன் ஊடகவியலாளர் கேட்ட கேள்விகளுக்குப் பதிலளிக்க முடியாமல் ரணில் திணறியது சர்வதேச அரங்குகளில் அவர் காட்டிவந்த பிம்பத்தை சுக்குநூறாக்கியிருந்தது.

இரட்டை நாக்கு, இரட்டை வேடம், முதுகு குத்துதல், நையாண்டி செய்தல், தனக்கு மட்டுமே எல்லாம் தெரியும் என மற்றவர்களை மட்டம் தட்டுதல் போன்ற விடயங்களில் ரணில் விக்கிரமசிங்க பெயர் போனவர். சந்தர்ப்பம் கிடைக்கும்போது அவர் தனக்கு உதவி செய்தவர்களையே இரைகளாக்கிவிட்டு முன்னேறுபவர். அவர் நினைத்திருந்தால் சஜித் பிரேமதாசாவுக்கு தலைமைப் பதவியைக் கொடுத்து கட்சியைப் பலப்படுத்தியிருக்கலாம். ஆனால் அவர் தனது நன்மையையே எப்போதும் முதன்மைப் படுத்துபவர். இது இப்போது சர்வதேச ராஜதந்திரிகளுக்கும் தெரிந்து விட்டது.

இந்தியாவுடனான உறவைப் பொறுத்த வரையில், தனக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் நேரடித் தொலபேசி இணைப்பு உண்டெனக் கொழும்பில் அவர் கூறிவருவது பெருமளவில் நையாண்டி செய்யப்படுகிறது. இவ்விடயத்தில் தான் இந்திய ராஜதந்திரி மஸ்கெட் மாநாட்டில் ரணிலுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.