NewsSri Lanka

அனுராதபுர சிறைச்சாலை விவகாரம்: பொலிசார் இதுவரை அமைச்சர் ரத்வத்தையிடம் வாக்குமூலம் பெறவில்லை


கைதிகளைத் தெற்கிலுள்ள சிறைச்சாலைக்கு மாற்றும் நீதியமைச்சரின் யோசனையை சாணக்கியன் ராசமாணிக்கம் நிராகரித்தார்

செப்டம்பர் 12 அன்று, அனுராதபுர சிறைச்சாலையில் தமிழ்க் கைதிகளைத் துப்பாக்கி முனையில் மிரட்டியது தொடர்பாக சிறைக் கைதிகளின் பாதுகாப்புக்கான குழு மேற்கொண்ட புகார் மீது பொலிசார் அமைச்சர் லோஹன் ரத்வத்தயிடம் இதுவரை வாக்குமூலத்தைப் பெறவில்லை எனத் தெரியவருகிறது.

அனுராதபுர சிறைச்சாலைச் சம்பவம் தொடர்பாக, மேற்கண்ட சிவில் சமூக அமைப்பு செப்டம்பர் 16ம் திகதியன்று குற்ற விசாரணைப் பிரிவிடம் புகார் ஒன்றைச் செய்திருந்தது. இச்சம்பவம் தொடர்பாக அனுராதபுரம் மற்றும் கொழும்பு தெற்கு பொலிஸ் அத்தியட்சகர்கள் விசாரணைகளை மேற்கொண்டு அறிக்கைகளைச் சமர்ப்பித்திருந்ததாகவும் ஆனால் அமைச்சரின் வாக்குமூலத்தை எவரும் பெற்றிருக்கவில்லை எனவும் அதற்கான தேவை இப்போது இல்லை எனவும் அவர்கள் தெரிவித்ததாக தி ஐலண்ட் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

சிறைக் கைதிகளின் பாதுகாப்புக்கான அமைப்பின் சார்பில் குற்ற விசாரணைப் பிரிவிடம் முறைப்பாட்டை மேற்கொண்ட சட்டத் தரணி சேனக பெரேரா இது பற்றிக் குறிப்பிடும்போது, தமது முறையீடு பற்றி குற்றவிசாரணைப் பிரிவு தம்மிடம் எதையுமே கேட்டறியக்கூட முயற்சிக்கவில்லை எனத் தெரிவித்துள்ளார். இச்சமபவம் குறித்து மனித உரிமைகள் அமைப்பும், ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி குசலா சரோஜினி வீரவர்த்தன ஆகியோர் மேற்கொண்ட விசாரணைகள் பற்றிக்கூடத் தமக்கு எதுவும் அறிவிக்கப்படவில்லை என அவர் தெரிவித்தார்.

பலரின் தொடர்ச்சியான கோரிக்கைகளின் பின்னரும், அனுராதபுரச் சிறைச்சாலையில் மிரட்டப்பட்ட கைதிகள் இன்னமும் யாழ். சிறைக்கு மாற்றப்படவில்லை என அறியப்படுகிறது.

அனுராதபுர சிறைச்சாலைக்குச் சென்று பாதிக்கப்பட்ட கைதிகளைச் சந்தித்த மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் ராசமாணிக்கம், கைதிகளின் பாதுகாப்பு காரணமாக அவர்களை உடனடியாக யாழ் சிறைச்சாலைக்கு மாற்றும்படி கேட்டிருந்தார் எனினும் அவரது கோரிக்கைக்கும் அதிகாரிகள் செவிமடுப்பதாக இல்லை. அதே வேளை, இக் கைதிகளை தெற்கிலுள்ள சிறைச்சாலைக்கு மாற்றுவதற்கென நீதியமைச்சர் முன்வைத்த யோசனையை சாணக்கியன் ராசமாணிக்கம் மறுத்துவிட்டதாகத் தெரிகிறது.