Columnsமாயமான்

அனுரகுமார: அசைய முடியாத பொம்மை?

வழங்கப்பட்ட கள் பழையது தான்; மொந்த மட்டுமே புதிது என்பது ஓரளவு தெளிவாகி வருகிறது. அனுர என்ற கவர்ச்சியான பிம்பம் இவ்வளவு விரைவாக உடைபடுமென யாரும் எதிர்பார்க்கவில்லை.

ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பான இரண்டு விசாரணை அறிக்கைகளையும் எந்தவித ஒளிவு மறைவில்லாமல் வெளியிடுவோம் என ஜனாதிபதி தேர்தலுக்கு முன் ஜே.வி.பி. யினர் (என்.பி.பி. என்பது தேர்தலுக்கென அணிந்த மாற்றுடை மட்டுமே) வாக்குறிதியளித்தபடி செய்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஏற்கெனவே வந்து போன ஜனாதிபதி இவறிக்கைகளை வெளியிடுவேன் என வாக்குறுதியளித்துவிட்டுப் பின்னர் பாய்க்குக் கீழே தள்ளிவிட்டுச் சென்றிருந்தார். ஆனால் ஜே.வி.பி. கட்சி அப்படியானதல்ல என மக்களுக்கு வகுப்பெடுத்து ஆட்சிக்கு வந்த பின்னரும் அவர்களும் இவ்வறிக்கையை மூடி மறைக்கப் பார்க்கிறார்கள் என்றால் இவர்களும் அவர்கள் தான் என்றுதான் முடிவெடுக்க வேண்டும்.


ஜே.வி.பி. எதிர்க்கட்சிகளில் ஒன்றாக இருந்தபோது ஜனாதிபதி ஆணையத்தினால் விசாரிக்கப்பட்டு முடிவு செய்யப்பட்ட ஈஸ்டர் குண்டுவெடிப்புகள் பற்றிய அறிக்கையை வெளியிடவேண்டுமென்பது மட்டுமல்லாது அதில் சம்பந்தப்பட்டவர்கள் மீது உடனடியாக சட்ட நடவடிக்கைகளையும் எடுக்கவேண்டுமென அதன் தலைவர்கள் சபையில் ஓங்கிக் கத்தினார்கள். இதனால் அவர்கள் ஆட்சியைக் கைப்பற்றியபோது மக்களின் எதிர்பார்ப்பும் ஆவலும் அதிகரித்தது. இப்போது ‘தூ…’ இவர்களும் அவர்கள தானா என மக்களின் நம்பிக்கை தளர ஆரம்பித்துவிட்டது. இது குறித்து ‘தி ஐலண்ட்’ பத்திரிகை எழுதிய தலையங்கத்தில் ‘ அறிக்கைகளை விழுங்குவதில் இலங்கை ஜனாதிபதிகள் பெயர் போனவர்கள். அனுரகுமார இதில் வித்தியாசமானவரல்ல எனபதை நிரூபித்து விட்டார்’ என நையாண்டி செய்திருக்கிறது.

ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாகப் பதவியேற்றதும் இரண்டு விசாரணை ஆணையங்களை நியமித்தார். முதலாவது, பிரித்தானியாவின் சனல்-4 தொலைக்காட்சியினால் ஒளிபரப்பப்பட்ட ஈஸ்டர் குண்டு வெடிப்புக்களின் பின்னால் இலங்கையின் புலனாய்வுப் பிரிவு இருந்தது என்ற குற்றச்சாட்டை விசாரிப்பது. இவ்விசாரணைக்குத் தலைவராக நீதிபதி எஸ்.ஏ. இமாம் நியமிக்கப்பட்டிருந்தார்; இரண்டாவது, இலங்கை புலனாய்வுப் பிரிவு, இலங்கை தேசிய புலனாய்வுப் பிரிவின் தலைவர் மற்றும் இதனுடன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீதான விசாரணை. இவ்விசாரணைக்குத் தலைவராக ஏ.என்.ஜே. டி அல்விஸ் நியமிக்கப்பட்டிருந்தார். இவ்விருவருமே தமது விசாரணை அறிக்கைகளை ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளித்திருந்தார்கள். ஆனால் ரணில் அவற்றை ஒளித்து வைத்துவிட்டார்.

கடந்த திங்களன்று பிரபல இனவாதியும், முன்னாள் ஜே.வி.பி. உறுப்பினர் விமல் வீரவன்சவின் தோழரும், பிவிதுறு ஹெல உறுமய கட்சியின் தலைவருமான உதய கம்மன்பில தற்போதய பொதுப் பாதுகாப்பு அமைச்சர் விஜித ஹேரத் அவர்களிடம் விசாரணை அறிக்கைகளை உடனடியாக வெளியிடவேண்டுமென கோரிக்கை விடுத்தார். இதற்குப் பதிலளித்த அமைச்சர் “அக்டோபர் 21 இற்கு முன்னர் அறிக்கைகளை அரசாங்கம் வெளியிடாவிட்டால் அவற்றைப் பொதுவெளியில் கொண்டுவருவது என் பொறுப்பு” எனத் தெரிவித்திருக்கிறார். அது மட்டுமல்லாது “உம்மால் முடிந்தால் அடுத்த மூன்று நாட்களுக்குள் இவ்வறிக்கைகளை வெளியிடும் பார்க்கலாம்” என அமைச்சர் ஹேரத் கம்மன்பிலவிற்குச் சவால் விட்டிருக்கிறார். அத்தோடு “இவ்வறிக்கைகளப் பெறுவது / வைத்திருப்பதுகூட ஒரு வகையில் சட்டவிரோதமானது” எனவும் அமைச்சர் கூறியிருக்கிறார்.

மேற்கூறிய சம்பவங்களும் நடவடிக்கைகளும் ஜே.வி.பி. அரசு காட்டிய படமளவுக்கு ஏனைய ஆட்சியாளரிடமிருந்து அதிக வித்தியாசமானதல்ல எனப் பலரும் கொண்டுள்ள சந்தேகங்களை நிரூபிக்கும் வகையில் அமைச்சர் ஹேரத்தின் நடவடிக்கைகளும் இருக்கின்றன. இதற்கு ஆதாரம் அவரது இரண்டாவது அறிக்கை. “எம்மிடமுள்ள விசாரண ஆணைய அறிக்கைகளில் இரண்டு பக்கங்கள் காணாமற் போயுள்ளன. அது பற்றி நாம் இப்போது விசாரணை செய்துகொண்டிருக்கிறோம்”. அட பாவமே, இவ்வறிக்கைகளின் மூலப்பிரதிகள் விசாரணைகளை மேற்கொண்ட ஆணையத் தலைவர்களிடம் இருக்கும். அவர்களிடமிருந்து பெற்றுக்கொள்ள முடியும் என்பது கூடவா இந்த அமைச்சருக்குத் தெரியாது?

விசாரணை ஆணையத்தின் அறிக்கைகளை வெளியிடுவதற்கு ஜே.வி.பி. அரசு தயங்குவதேன்? ஈஸ்டர் தாக்குதல்கள் பற்றி ஜே.வி.பி. யினர் கூறிவரும் கருத்துக்களுக்கு இவ்வறிக்ககள் முரணாக இருந்துவிடும் என்பதற்காகவா? அல்லது போர் நாயகன் கோதாபயவைக் காப்பாற்றுவதற்காகவா? என்னவோ மட்டைகள் இங்கு பிரச்சினையல்ல, குட்டை மட்டுமே.

ஜே.வி.பி. யின் வீட்டுக் காவலிலிருந்து அனுர குமாரவை முதலில் காப்பாற்ற வேண்டும்