அனுக் அருட்பிரகாசத்தின் ‘A Passage North’ 2021 புக்கர் பரிசுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது!

இலங்கைத் தமிழ் நாவலாசிரியர் அநுக் அருட்பிரகாசம் அவர்களது A Passage North என்னும் ஆங்கில மொழியிலான நாவல் 2021ம் வருடத்துக்கான ‘புக்கர்’ பரிசுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அருட்பிரகாசத்தின் இரண்டாவது நாவல் இதுவாகும்.

2016 இல் வெளிவந்த இவரது முதலாவது நாவலான The Story of a Brief Marriage, DSC, South Asian Literature பரிசுகளைப் பெற்றிருந்ததோடு, Dylan Thomas பரிசுக்குப் பரிந்துரைக்கப்பட்டிருந்தது. அத்தோடு இந் நாவல், பிரென்ச், ஜேர்மன், செக்கோசிலவாக்கிய, மன்டாரின், டச்சு, இத்தாலிய மொழிகளிலும் பிரசுரிக்கப்பட்டுள்ளது. இந்நாவல் 2009 இறுதிப்போரைப் பின்களமாகக் கொண்டது.

A Passage North நாவலும் யாழ்ப்பாணம்-கொழும்பு-இந்தியா பின்புலங்களைக்கொண்டு புனையப்பட்ட ஒன்று.

அனுக் அருட்பிரகாசம், கொழும்பில் பிறந்து தனது 18 வயதில் அமெரிக்காவிற்குக் குடி புகுந்தவர். பிரபல ஸ்ரான்ஃபோர்ட் பல்கலைக் கழகத்தில் தனது பட்டப்படிப்பை முடித்துக்கொண்டு 2011 இல் நியூ யோர்க் கொலம்பியா பல்கலைக் கழகத்தில் தத்துவத்தில் கலாநிதிப்பட்டத்தைப் பெற்றவர். தற்போது இலங்கை-இந்தியா ஆகிய நாடுகளைத் தன் வாழிடமாகக் கொண்டுள்ளார்.

புக்கர் பரிசு ஆங்கில மொழியில் எழுதப்பட்டு, பிரித்தானியா அல்லது அயர்லாந்து நாடுகளில் பிரசுரிக்கப்படும் நாவல்களுக்கு வருடா வருடம் கொடுக்கப்படுகிறது. அக்டோபர் 1, 2020 முதல் செப்டம்பர் 30, 2021 வரையான காலப்பகுதியில் பிரசுரிக்கப்பட்ட 158 நாவல்கள் இப் பரிசுக்குப் பரிந்துரைக்கப்பட்டிருந்தன. அவற்றில் 13 நூல்கள் ‘நீண்ட பட்டியல்’ தகமைக்குத் தெரியப்பட்டுள்ளன. A Passage North இந்நீண்ட பட்டியலுக்குத் தெரிவாகியுள்ளது.

புக்கர் பரிசுத் தெரிவில் இறுதித் தேர்வுக்கு வரும் நாவலுக்கு 50,000 பவுண்டுகள் வழங்கப்படுகின்றது. குறும் பட்டியலுக்குத் தெரிவான ஒவ்வொரு நாவலுக்கும் 2,500 பவுண்டுகள் பரிசாகக் கிடைக்கிறது.