‘அந்த நாள்’ முதல் ‘மாநாடு’ வரை: ஆயும் படங்கள் 62 – பாகம் 1
‘மாத்தி யோசித்த’ தமிழ்ப் பட இயக்குனர்கள்
தமிழ் சினிமா வரலாறு / மாயமான்
தமிழ் திரையுலகில், இரசிகர்கள் முதல் இயக்குனர்கள் வரை ‘செம்மறியாட்டுத் தத்துவத்தை இறுக்கமாகப் பிடித்திருக்கிறார்கள் என நினைப்பவர்களுக்கான கட்டுரை இது. கொஞ்சம் ‘மாத்தி யோசித்திருக்கிறார்’ செளம்யா ராஜந்திரன். ‘தி நியூஸ்மினிட்’ தளத்தில் ஆங்கிலத்தில் வந்த கட்டுரையைக் கொஞ்சம் உறைப்புக் கூட்டித் தமிழில் தருகிறேன்.
தமிழில் முதல் வந்த படம் கீஷக வதம், சுமார் 100 வருடங்களுக்கு முதல், 1918 இல் வெளிவந்தது. அன்றிலிருந்து இன்றுவரை பல்லாயிரக் கணக்கான தமிழ்ப் படங்கள் வந்து ரசிகர்களை வதைத்தும், அவர்களால் வாழ்த்தப்பட்டும் போய் பெட்டிகளில் முடங்கியிருக்கிறது. அவற்றில் சில கலைப்படங்களும் சமூக சீர்திருத்தப்படங்களும் outright அறுவைப் படங்களும் அடங்கும். உள்ளடக்கம், தயாரிப்பு வித்தைகள், புதிய சிந்தனைகள், தளையுடைப்பு என்று பல கோணங்களிலும் கிழித்த கோட்டைத் தாண்டியே தீருவோம் என்ற சபதத்தோடு மாத்தி யோசித்த சில இயக்குனர்களின் படங்களைத் தேர்ந்தெடுத்து செளம்யா ராஜேந்திரன் இத் தொகுப்பை Flix Kolliwood இற்கு எழுதிய இக் கட்டுரையைச் சுட்டுத் தந்திருக்கிறேன். இதை விட மேலும் படங்கள் இப்பட்டியலில் சேர்க்கப்படவேண்டுமென வாசகர்கள் நினைக்கலாம் என்பதையும் செளம்யா குறித்துக்கொள்கிறார்.
- அந்த நாள் (1954): எஸ். பாலசந்தரால் இயக்கப்பட்ட இப் படத்தில் பல பாத்திரங்கள் துப்பாக்கிகளை ஏந்துகின்றன. பாட்டுகள் எதுவுமில்லாத முதல் தமிழ்ப்படம் இது. ஒரு றேடியோ எஞ்சினியராக வரும் சிவாஜி கணேசனைச் சுற்றிப் பின்னப்பட்டது கதை. கொலையொன்றைப் பற்றி இரண்டு சந்தேக நபர்கள் இரண்டு விதமான கதைகளைக் கூறும் இக்கதை அகிரா குறோசவாவின் ராஷமொம் கதையின் சாயல் கொண்டது. (பின்னர் ‘பொம்மை’ யிலும் எஸ். பாலசந்தர் இன்னொருவரது சாயலில் ‘மாத்தி யோசித்திருந்தார்’ என்பது வேறு (சேர்க்கை))
2. கலை அரசி (1963): வேற்றுக்கிரக வாசிகளை முதலாவதாக இந்தியத் திரைகளுக்கு இறக்கியது இப்படம். ஏ. காசிலிங்கம் இயக்கிய இப்படத்தில் எம்.ஜி.ஆர்., பானுமதி நடித்திருந்தார்கள். வழக்கமான பணக்காரப் பெண்ணை ஏழைப் பையன் காதலிக்கும் உடான்ஸ் படத்தை வேற்றுக் கிரகவாசிகள் வந்து திசை திருப்பி விடுகின்றன. அப் பெண் தங்களுக்கு நாட்டியத்தைக் கற்பிக்கவேண்டுமென்பது அவற்றின் கோரிக்கை. (நல்ல காலம் அப்போது வட்ஸப், முகநூல் இல்லை. இல்லாவிட்டால், ஜேர்மன் காரி தமிழ் கதைத்த கதையில் போலப் பலர் பிரபஞ்சம் சென்ற தமிழ் பற்றிப் உருகியோடியிருப்பார்கள் – சேர்க்கை). இப் படம் வருமானத்தில் மிகவும் கோட்டை விட்டிருந்தது எனினும் ‘வேற்றுக்கிரகவாசி’ நடித்த முதலாவது இந்தியப் படம் என்ற பெருமையை இன்றும் வைத்திருக்கிறது.
3. கர்ணன் (1964): பி.ஆர். பந்துலுவின் தயாரிப்பு / இயக்கத்தில் உருவான இப்படத்தில் சிவாஜி கணேசனின் நடிப்பு இன்றும் அவரை இமையத்தில் வைத்திருக்கிறது. தமிழினதும், தெலுங்கினதும் இரண்டு பிரபல நடிகர்களான சிவாஜி கணேசன், என்.டி.ராமராவ் ஆகியோரது சிறப்பான நடிப்பில் உருவாகிய இப் பிரமாண்டம் தமிழில் புராண, இதிகாங்களைப் புகுத்த வழிவகுத்தது. பின்னர் ரசிகர்களைப் புரட்டிப் போட்ட எஸ்.எஸ்.ராஜமெளலியின் பாகுபலி வெளிவருவதற்கு இப் படமே ஊக்கத்தைக் கொடுத்தது எனக் கூறப்படுகிறது.
4. தில்லானா மோகனாம்பாள் (1968): ஏ.பி. நாகராஜன் இயக்கிய இப் படம் நாட்டியக்காரி ஒருவருக்கும் (பத்மினி), இசையாளன் ஒருவ்ருக்குமிடையில் (சிவாஜி கணேசன்) மலரும் காதல் பற்றியது. கொத்தமங்கலம் சுப்பு அவர்கள் எழுதி, கல்கி சஞ்சிகையில் தொடராக வந்து கலக்கு கலக்கிய ‘தில்லானா மோகானாம்பாள்’ நாவலின் மூலத்தைக் கொண்டது. பின்னால் வந்த பல படங்களுக்கும் (கரகாட்டக்காரன்), படைப்பாளிகளுக்கும் ஊக்கத்தைத் தந்த இப்படம் இன்றும் மீளப் பார்க்கப்படுமொன்று.
5. அவள் ஒரு தொடர்கதை (1974): கே.பாலச்சந்தர் இயக்கித் தமிழில் வெளிவந்த, கதாநாயகியை மையமாகக் கொண்டு வெளிவந்த வெகு சில தமிழ்ப்படங்களில் இதுவுமொன்று. வசூலில் பெரு வெற்றியை ஈட்டிய இப்படத்தில் சுஜாதா முன்னணி நடிகையாகவும் கமல்ஹாசன், சிறிபிரியா, விஜயகுமார், எம்.ஜி.சோமன், ஜெய் கணேஷ் ஆகியோர் முக்கிய பாத்திரங்களிலும் நடித்திருந்தனர். சகல விதங்களிலும் குடும்பத்துக்காகத் தனது சுக துக்கங்களைத் தியாகம் செய்யும் ஒரு பெண்ணைப் பற்றிய இக் கதை நான்கு மொழிகளில் படமாகியிருந்தது.
…இன்னும் 57 இருக்கிறது. இதுவும் ஒரு தொடர் கதை!