‘அந்த நாள்’ முதல் ‘மாநாடு’ வரை: ஆயும் படங்கள் 62 – பாகம் 2
‘மாத்தி யோசித்த’ தமிழ்ப் பட இயக்குனர்கள்
தமிழ் சினிமா வரலாறு / மாயமான்
6. அவள் அப்படித்தான் (1978): சீ.ருத்ரையாவின் இயக்கத்தில் சிறீபிரியா, கமல்ஹாசன், ரஜினிகாந்த் நடித்த காதல் படம். கதாநாயகியை மையமாகக் கொண்டு பெண்ணின் காம இச்சையை முதன்மைப்படுத்தியமைக்காகக் கடுமையாக விமர்சிக்கப்பட்டாலும், புனிதத்தைத் தவிர பெண்ணைப் பற்றி வேறு எதுவுமே அறியவிரும்பாத கலாச்சாரக் காவலர்களுக்குச் சவாலாகக் காம இச்சையைக் கதைமையமாக்கித் துணிச்சலோடு வெளிக்கொணர்ந்தமைக்காகவும் பெண்விடுதலை பெரும்பாலும் சிறைக்குள் இருந்த காலத்தில் அதன் விடுதலையை முன்வைத்து வெளிவந்த படம் என்ற வகையிலும் இதுவும் இங்கு இடம்பெறுகிறது.

7. சிகப்பு ரோஜாக்கள் (1978): பாரதிராஜாவின் இயக்கத்தில் கமல்ஹாசன், சிறீதேவி நடித்த, மனப்பிறழ்வுடனான பாத்திரங்களை வைத்துப் பின்னிய தமிழ்ப் படங்களின் (genre of psycho) பட்டியலில் இடம்பெறுகிறது. சிறுவயதில் துஷ்ப்பிரயோகம் செய்யப்பட்ட ஒருவர் பெண்களைக் கொல்லும் (serial killer) ஒருவராகக் காட்டப்பட்டாலும் அடிப்படையில் ஒரு ஆணாதிக்கத் தொனியுடன் உருவாக்கப்பட்டது. ரசிகரது இரக்கம் துஷ்பிரயோகம் செய்யப்படும் அப்பாவி ஆண்மீதா அல்லது அவரால் கொலைசெய்யப்படும் அப்பாவிப் பெண்கள் மீதா என்பதைப் பொறுத்து வரலாற்ரில் இப்படத்தின் இடம் தீர்மானிக்கப்படலாம். ஆனாலும் நமது சமூகத்துக்கு இப்படி ஒரு பக்கமும் இருக்கிறது என்பதைக் கொணர்ந்தமைக்காக இப்படத்துக்கும் இடமொன்றுண்டு.
8. ஜொனி (1980): ரஜினிகாந்தின் தொட்டுப்பார்க்காத மென்மையான பக்கத்தைப் பார்க்க மறுக்கும் வியாபார இயக்குனர்கள் மத்தியில் இயக்குனர் மகேந்திரன் பல படங்களில் அந்தப் புதுமையைச் செய்திருக்கிறார். ‘ஜொனியில்’ ரஜினிகாந்த் ஒரு ஏமாற்றுக்காரனாகவும், சிகை அலங்காரனாகவும் இரட்டைப் பாத்திரங்களை எடுக்கிறார். சிறீதேவி, பாடகி அர்ச்சனாவாக வருகிறார். இளையராஜாவின் என்றுமினிய கானமான ‘காற்றில் எந்தன் கீதம்’ இப்படத்தை உச்சத்துக்குக் கொண்டுபோகிறது. கதாநாயகனின் வழக்கமான ‘வீர தீர’ தினவெடுக்கும் படம் காட்டுதல்களைத் தவிர்த்து அவனிடமும் பலவீனம் இருக்கிறது (‘இரத்தக்கண்ணீரில்’ போல குடித்துவிட்டுப் பலவீனத்தைக் காட்டாது) என்பதைக் காட்டியதால் இப்படம் இங்கு இடம்பெறுகிறது.
9. தண்ணீர் தண்ணீர் (1981): கே.பாலச்சந்தரின் இயக்கத்தில் உருவாகி ‘செவ்வந்தியாக’ வரும் சரிதாவின் சிறப்பான நடிப்பினால் இரண்டு தேசிய விருதுகளைப் பெற்ற இப்படம் தமிழ்நாட்டில் உள்ள தண்ணீர்ப் பற்றாக்குறை பற்றியும் அதற்குக் காரணமான அரசாங்க ஒழுங்கீனம் மற்றும் ஊழல் காரணமாக, வழக்கம்போல இப்பிரச்சினையும் பெண்களின் தலைகளிலேயே சுமத்தப்படுவதும் பற்றியும், அவர்கள் பல கிலோமீட்டர்கள் தூரம் நடந்து தண்ணீரைக் கொண்டுவரவேண்டிய மோசமான சூழ்நிலை பற்றியும் மக்களுக்கு (அரசியல்வாதிகள் ?) அறிவூட்டிய ஒரு வித்தியாசமான சமூக அக்கறையுள்ள படம்.
10. மெளன ராகம் (1986): மணிரத்னத்தின் இயக்கத்தில் உருவான இப்படம், கட்டாயக் கல்யாணத்திற்குப் பின்னரும் ஒரு பெண் தனது முன்னாட் காதலனோடான தொடர்பை முறித்துக்கொள்ள முடியாமல் அவலப்படுவது பற்றிய கதையில் பின்னப்பட்டது. திருமணத்தில் (இதைத் தட்டச்சுச் செய்யும்போது ‘துர்மணம்’ என்று வந்துவிட்டது ம்..ம்..) மகிழ்ச்சியில்லாத திவ்யா (ரேவதி) மிகவும் அன்பான தனது கணவனிடம் (மோஹன்) விவாகரத்துக் கேட்பது, அதுவும் கொலையைத் தவிர வேறு தீர்ப்பெதையும் தெரிந்திராத சமூகத்தில் (இன்றுவரை), நினைத்துப் பார்க்கமுடியாத ஒருவிடயம். அதைத் துணிச்சலாக வெளிக்கொணர்ந்தமைக்காக இப்படம் பாராட்டப்படவேண்டியது.
…இன்னும் 52 இருக்கிறது. இதுவும் ஒரு தொடர் கதை!