அநுராதபுரச் சிறைச் சம்பவம் | ராஜாங்க அமைச்சர் லோகன் ரத்வத்தை பதவிநீக்கம் செய்யப்படவேண்டும் – பா.உ. பொன்னம்பலம்


அநுராதபுரச் சிறையில் முன்னாள் விடுதலைப்புலி போராளிகளை மண்டியிடச் செய்தார்

கடந்த ஞாயிறன்று (செப் 12) சிறைச்சாலை நிர்வாகங்களுக்கான ராஜாங்க அமைச்சர் லோகன் ரத்வத்தையும் அவரது நண்பர்களும் மது வெறியில் அனுராதபுரம் சிறைச்சாலைக்குள் அத்துமீறி நுழைந்து அங்குள்ள முந்நாள் விடுதலைப் புலி போராளிகள் இருவரைத் துப்பாக்கி முனையில் மிரட்டித் தன் முன்னால் முழங்காலில் மண்டியிடச் செய்திருந்ததாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பா.உ. கஜந்திரகுமார் பொன்னம்பலம் தனது உத்தியோகபூர்வ ருவிட்டர் செய்தியில் தெரிவித்திருந்தார்.

கைதிகளுக்குக் கொலை மிரட்டல் செய்தது தொடர்பாக, அமைச்சர் ரத்வத்தை கைதுசெய்து செய்யப்பட்டு அவர்மீது உடனடியாக வழக்குத் தாக்கல் செய்யவேண்டுமெனத் தற்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்துள்ளது.

குறிப்பிட்ட சம்பவத்தின்போது ரத்வத்த தனது கைத்துப்பாக்கியைக் காட்டித் ‘தன் முன்னால் மண்டியிடாவிட்டால் கொன்றுவிடுவேன்’ என மிரட்டியதாகவும், அதற்கான ஆதாரங்கள் தனது கட்சியிடம் உள்ளதாகவும் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

வெலிக்கடைச் சிறையிலும் ரத்வத்தயும் நண்பர்களும் மதுவெறியில் அட்டகாசம்

இச் செய்தியை முதலில் வெளிக்கொணர்ந்த ‘தி மோர்ணிங்’ பத்திரிகை, ரத்வத்தயும் அவரது நண்பர்களும் திங்கள் காலை (13), மது வெறியில், வெலிக்கடை சிறையினுள் அத்துமீறிப் புகுந்து அட்டகாசம் செய்ததாகவே தெரிவித்திருந்தது. ஆனால் அவர்கள் முதல்நாள் (ஞாயிறு 12 மாலை) அநுராதபுரச் சிறையிலும் இதே போன்று மதுவெறியில் அட்டகாசம் செய்த விடயம் பின்னரே தெரியவந்தது.

சிறையிலுள்ள முன்னாள் விடுதலைப் புலிகளைக் கீழ்மைப்படுத்தும் நோக்குடன், மது வெறியில் தனது நண்பர்களை அழைத்துக்கொண்டு ஹெலிகொப்டரில் அநுராதபுரம் சிறை வளாகத்துக்கு ஞாயிறு மாலை வந்திறங்கியதாகவும் பின்னர் அங்குள்ள அனத்துத் தமிழ்க் கைதிகளையும் முன்கொண்டுவந்து நிறுத்தி, அவர்களில் இருவரை “மண்டியிடாவிட்டால் அந்த இடத்திலேயே கொன்றுவிடுவேன்” என அவர் மிரட்டியதாகவும் அது மேலும் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக ரத்வத்தை உடனடியாகப் பதவியிலிருந்து விலகவேண்டுமெனவும், அனைத்து பதவிகளிலுமிருந்தும் அவர் உடனடியாக நீக்கம் செய்யப்படவேண்டுமெனவும் பா. உ. பொன்னம்பலம் கோரிக்கை விடுத்துள்ளார். அதைத் தொடர்ந்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், ரத்வத்த பதவிநீக்கம் செய்யவேண்டுமென்பதோடு கொலை மிரட்டலைச் செய்தமைக்காக அவர் உடனடியாகக் கைதுசெய்யப்படவேண்டுமெனவும் கோரியுள்ளது.



அதே வேளை, வெலிக்கடை சிறைச்சாலைச் சம்பவத்திந்போது, ரத்வத்த தனது நண்பர்களை அழைத்து சிறைச்சாலையின் தூக்குமேடையைக் காட்டியதாகவும் இன் நண்பர்கள் குழுவில் சமீபத்தில் கொழும்பில் நடைபெற்ற ‘அழகுராணிப் போட்டியில் வெற்றிபெற்ற பெண்ணும் அடங்குகிறார் எனவும் ‘தி மோர்ணிங்’ தெரிவித்துள்ளது.

தூக்கு மேடையைப் பார்க்கப் போவதானால் அது ஆண்கள் சிறைவைக்கப்பட்டிருக்கும் அறைகளைத் தாண்டிப் போகவேண்டுமென்பதால் ‘அழகுராணியை’ அங்கு போக சிறைச்சாலை அதிகாரிகள் அநுமதிக்கவில்லை எனவும், அவ்வேளை ரத்வத்தயும் அவரது போதை நண்பர்களும் அதிகாரிகளைக் கெட்ட வார்த்தைகளால் திட்டியதாகவும் அது மேலும் தெரிவித்துள்ளது.

அனைத்து பரிவாரமும் மிகையான போதையில் இருந்தார்கள் எனவும் வாகனத்தை ‘அழகுராணியே’ ஓட்டி வந்தார் எனவும், சிலர் அதீத போதையில் நிற்க முடியாமல் நிலத்தில் வீழ்ந்தார்கள் எனவும் அத் மேலும் தெரிவித்துள்ளது.

அதே வேளை, அப்படியொரு சம்பவம் நடைபெறவேயில்லை என அமைச்சர் ரத்வத்தயின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

லோகன் ரத்வத்தை, முன்னாள் இராணுவத் தளபதியும் முன்னாள் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்காவின் சகோதரருமான அனுருத்த ரத்வத்தயின் மகனாவார்.