அநுரவுக்கு வைத்த அரிசிப் பொறி
மாயமான்
கிளிண்ட் ஈஸ்ட்வூட் ஸ்டைலில் ஆகாயத்தை சுட்டபடி வந்திறங்கிய அனுரவுக்கு இப்போதுதான் தெரிகிறது வந்த இடம் பிழையானதென்று. அவரது பாதையில் பாறைகளும் பாரிய மரக்கட்டைகளும். சிங்கள மாஃபியாக்கள் எதற்கும் தயார்.
இவர் அவரல்ல என்ற கோஷத்துடன் குதிரையில் ஏறியதும் சவுக்கைச் சுழற்றி “முன்னாள் அரசியல்வாதிகளுக்கு கொடுக்கப்படும் தேவையற்ற அரச செலவுகளைத் தகர்ப்பேன் என்று சத்தம் எழுப்பினார். பின்னர் தான் தெரியும் அரசியலமைப்பில் 4ஆம் சரத்தில் அது ஏற்கெனவே எழுதப்பட்ட ஒன்று என்று. ரணிலுக்கு 16 வாகனங்களும் 37 சமையல்காரர்களும் கொடுத்தேயாகவேண்டும் போல. பாவம் அவரது ‘வியத்மக’ ஆலோசகர்கள் கூட இதை முற்கூட்டிப் பரிசீலிக்கவில்லை.
அநுரவின் பாதையில் இப்போது குறுக்கே வந்திருக்கும் தடை அரிசி மாஃபியாவினாலும், முட்டை மாஃபியாவினாலும் வைக்கப்பட்டிருக்கிறது. முட்டையைக்கூட இறக்குமதி செய்து செய்து பதுக்கிய முட்டைகளை அழுகச்செய்துவிடலாம். ஆனால் அரிசிக்கு? கோதாபய கதிரை ஏறியதும் அறிவித்த ‘செயற்கை உரத் தடை’ யே அவரைக் கதிரையிலிருந்து தள்ளி வீழ்த்தியது. அநுரவுக்கு அது அரிசியின் வடிவில் வந்தாலும் ஆச்சரியப்படத் தேவையில்லை.
அநுர கதிரை ஏறியதும் விவசாய அமைச்சுப் பதவியைத் தானே வைத்துக்கொண்டார். அவர் ஒரு விவசாயக் குடும்பத்தைச் செர்ந்தவர் அதுவும் அநுராதபுரம், பொலநறுவை ஆகிய நெல்வயற் பிரதேசங்களை அண்டி வாழ்ந்தவர். இதுவரை காலமும் தென்னிலங்கை அரிசி மாஃபியாக்கள் எப்படி அரிசி விலையைக் கட்டுப்படுத்தி வந்துள்ளனர் என்பதை நன்றாகவே அறிந்தவர். அப்படியிருந்தும் சென்ற வாரம் தான் அரிசியை இறக்குமதி செய்யப் போவதில்லை என உரத்துக் கூவியிருக்கிறார். விளைவு? டட்லி சிறிசேனா (மைத்திரியின் சகோதரர்) தலைமையில் நாட்டிலுள்ள ஐந்து பெரிய அரிசி மாஃபியாக்கள் ஒன்றுகூடி பாரிய கட்டைகளைப் போட்டிருக்கிறார்கள். நாட்டில் விளையும் நெல்லில் பெரும்பங்கை இவர்கள் குறைந்த விலைக்கு வாங்கித் தங்கள் குதங்களில் பதுக்கிவிட்டு நாட்டாமை காடுகிறார்கள். இது அவர்களுக்குக் கைவந்த கலை. எந்த ஜனாதிபதிகளினாலும் அவர்களை எதுவும் செய்துவிட முடியாது. ஆனானப்பட்ட கோதாபயவே வாலைச் சுருட்டிக்கொண்டு ஒளித்துவிட்டார். இந்த மாஃபியாக்களினால் உருவாக்கப்பட்ட மக்கள் வரிசைகளையே அரகாலயா சாதகமாகப் பாவித்துக்கொண்டது. இப்போது அரிசி விலையும் முட்டை விலையும் கூரைக்குள் சென்றுவிட்டது. அநுரா பதற ஆரம்பித்திருக்கிறார். அடுத்த அரகாலயா வீதிக்கு இறங்குமுன் அலுவல் பார்த்தாக வேண்டும்.
பாவம் அநுரா. வாகனங்களில் அவரது கவனத்தைச் செலுத்துவதற்கு முன் அவர் செய்திருக்க வேண்டியது இரகசிய நெற் குதங்களைக் கைப்பற்றுவது. மக்கள் பட்டினி நிலைக்குப் போவதற்கு முன்னர் அரிசி விலையைக் குறைத்தாக வேண்டும். ஆனால் நெற்குதங்கள் மாஃபியாக்கள் வசம். இராணுவத்தினரை ஏவி அவற்றைக் கைப்பற்றுவதானல் அவை தீக்கிரையாக்கப்பட்டாலும் ஆச்சரியப்படத் தேவையில்லை. அந்தளவுக்கு நிலைமை சென்றுவிட்டது. இன்னும் இரண்டு வாரங்களில் தேர்தல். பட்டினியோடு மக்கள் வாக்களிக்கப் போனால் எதிர்க்கட்சியினருக்கே சாதகம். எனவே இந்த நாடகத்தில் மகிந்த தரப்பு இறங்கி விளையாடுகிறதா என்ற சந்தேகமும் எளாமல் இல்லை.
அமெரிக்காவில் யூதர் எப்படி நிதி வழங்கலைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறார்களோ; அவர்களது முதுகெலும்புகளை உடைக்க முற்பட்ட ஜோன் எஃப்.கென்னெடி எப்படி அகற்றப்பட்டாரோ அந்தளவு பலம் வாய்ந்த மாஃபியாக்கள் இலங்கையிலும் உள்ளன. தமிழீழ எல்லைக் கிராமங்களில் அறுவடைக்குத் தயாரான நிலையில் இருக்கும் தமிழரின் நெல்வயல்களை இரவோடிரவாக இந்த மாஃபியாக் கும்பல்கள் வந்து அறுவடை செய்து போவது 2009 முதல் நடந்து வருகிறது. அரசு இதைக் கண்டுகொள்வதே இல்லை. ஒரு காலத்தில் சிங்கள தேசம் அரிசிப்பட்டினிக்கு உள்ளாகிய வேளை தலைவர் பிரபாகரன் வன்னியிலிருந்து நெல்லனுப்பிப் பட்டினி தீர்த்த கதையுமுண்டு.
இந்த அரிசி மாஃபியாவின் பாதிப்பு தமிழ் விவசாயிகளையும் வெகுவாகப் பாதித்து வருவது. தமிழ் விவசாயிகளின் விளைச்சல் அதிகமாக இருக்கும்போது சிங்கள மாஃபியாக்கள் நெல் கொள் விலையைத் திடீரெனக் குறைத்துவிடுவதும் இதனால் தமிழ் விவசாயிகள் வேறு வழியின்றிக் குறைந்த விலைக்கு இந்த மாஃபியாக்களுக்கே விற்கவேண்டி ஏற்படுவதும் வழக்கம். இதனால் நட்டப்படும் விவசாயிகளுக்கு மைக்கிரோ கடன்களைக் கொடுத்து தவிச்ச முயலடிக்கும் பல ‘நம்ம’ சீமான்களுமுண்டு. இதைத் தவிர்க்க அமெரிக்க தனவந்தர் ராஜ் ராஜரட்ணம், தமிழர்கள் குறைந்த விலைக்கு தமது நெல்லை மாஃபியாக்களுக்கு விற்காமல் அந்நெல்லைத் தாமே வாங்கிக் களஞ்சியப்படுத்தி வைக்க ஒரு யோசனையைச் சமீபத்தில் வெளியிட்டிருந்தார்.
முட்டை தட்டுப்பாடு ஏற்படும்போதெல்லாம் இந்தியா உடனே உதவிக்கு ஓடிவந்துவிடுவதுண்டு. ஆனால் நெல் விடயத்தில் அது களமிறங்க முடியாது. அது இறங்கினால் ராஜபக்ச தரப்புக்கு அது வரப்பிரசாதம். பெரும்பாலான சிங்கள விவசாயிகள் மாஃபியாக்களுடன் சேர்ந்து குய்யோ முறையோ என ஓலம் வைக்க ஆரம்பித்துவிடுவார்கள். அதுவே அநுரவினதும் ஜே.வி.பி.யினதும் இறுதி ஆட்சியாகிவிடும். எனவே அனுரவுக்கும் மாஃபியாக்களுக்குமிடையே (மஹிந்தவும் கூட) இந்த அரிசி யுத்தம் அநுரவுக்கு வாட்டர்லூவாக வந்துவிடக்கூடாது எனவே நாமும் விரும்புகிறோம்.
இங்கு பிரச்சின என்னவென்றால் சிங்கள மக்களில் அரிசியை உண்பவர்களைப் போலவே நெல்லை உற்பத்தி செய்யும் விவசாயிகளும் பரந்தளவு இருக்கிறார்கள். இருவரையும் சமாளிக்கவேண்டியது அரசின் கடமை. இப்பொறியிலிருந்து அநுர அரசு விடுபடவேண்டுமானால் ராஜ் ராஜரட்ணம் கூறியது போல அரசாங்கமே முன்வந்து விவசாயிகளிடமிருந்து நியாயமான விலைக்கு நெல்லைக் கொள்வனவு செய்து மக்களுக்கு விநியோகிக்க வேண்டும். அப்படியான பொறிமுறையை உருவாக்குவதற்குள் மக்கள் தெருவுக்கு வந்துவிடுவார்கள். ராஜபக்சக்கள் மக்களுக்காகக் கண்ணீர் விடுவார்கள். பாவம் அநுரா. வைத்தியர் அர்ச்சுனாவிடம் தான் ஆலோசனை கேட்டிருக்கமாட்டாரென்றே நம்புகிறோம்.
ஆமை பிடிப்பார் மல்லாத்துவார் நிலைமைதான் தமிழருக்கு.
