5 நிமிடங்களில் கோவிட்-19 பரிசோதனை – ஒக்ஸ்ஃபோர்ட் பலகலைக்கழக விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

5 நிமிடங்களில் கோவிட்-19 பரிசோதனை – ஒக்ஸ்ஃபோர்ட் பலகலைக்கழக விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

Spread the love

கோவிட்-19 நோய்க்குக் காரணமான SARS-CoV-2 வைரஸை ஏனைய சுவாசநோய் வைரஸ்களிலிருந்து மிகவும் துல்லியமாகப் பேதப்படுத்தி இனம் காணும் முறையொன்றை ஒக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

5 நிமிடங்களில் கோவிட்-19 பரிசோதனை - ஒக்ஸ்ஃபோர்ட் பலகலைக்கழக விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு 1

தற்போது நடைமுறையிலிருக்கும் பரிசோதனைகள், மனிதத் தொண்டையிலிருந்து எடுக்கப்படும் சளித் திரளில் காணப்படும் வைரஸ்களின் மரபணுக்களைப் பிரிதெடுத்து, துப்புரவாக்கி நுண்ணோக்கிகளின் மூலம் ஆராய்ந்து இனம்காண்கின்றன.

இப் புதிய கண்டுபிடிப்பின்படி, மரபணு இழைகளை (strands) ஒளிரும் பதார்த்தங்களால் (fluorescent) அடையாளமிட்டு நுண்ணோக்கிகள் மூலம் படங்களை எடுத்து வைரஸ்கள் அடையாளப்படுத்தப்படுகின்றன. செயற்கை விவேக மென்பொருள் மூலம் (Machine-learning software) இப் படங்களில் காணப்படும் வைரஸ்கள் உடனடியாக இனம்காணப்படுகின்றன. உடற் கட்டமைப்பு, பருமன், வடிவம் ஆகியன ஒவ்வொரு வைரஸுக்கும் வித்தியாசமாக இருப்பதால் (மனிதரின் கைவிரல் அடையாளம் போல) ஏற்கெனவே சேகரித்து வைக்கப்பட்ட நிரூபிக்கப்பட்ட படங்களோடு ஒப்பிட்டு நோய்க்குக் காரணமான வைரஸ் அடையாளம் காணப்படுகிறது. செயற்கை விவேக மென்பொருள் இத்தேடலைத் துரிதப்படுத்துகிறது.

தற்போது பாவனையிலுள்ள RT-PCR பரிசோதனைகளின் மூலம் உறுதிப்படுத்தப்பட்ட கோவிட்-19 நோயாளிகளின் சளி மாதிரிகளை ஆராய்ந்து பெறப்பட்ட முடிவுகளை ஆதாரமகாக் கொண்டு இப் பரிசோதனை முடிவுகள் உறுதிப்படுத்தப்பட்டன என அறியப்படுகிறது.

இப் பரிசோதனை மூலம், ஒருவருக்கு நோய்த் தொற்று இருக்கிறதா என 5 நிமிடங்களில் கண்டுபிடித்துவிடலாம் எனவும், இதற்கான செலவு மிகவும் சொற்பம் என, இதில் பங்குபற்றிய ஒக்ஸ்ஃபோர்ட் பல்கலைக் கழக விஞ்ஞான மாணவன் நிக்கொலஸ் ஷியாஎலிஸ் தெரிவித்தார்.

அடுத்த வருடம் நடுப்பகுதியில் இப் பரிசோதனை முறை பாவனைக்கு வருமென எதிர்பார்க்கப்படுகிறது. (Ox.ac.uk News)

Print Friendly, PDF & Email