Spread the love

இல்லத்துக்கு வெளியில் நடமாடிய ஆயுததாரி

கனடியப் பிரதமர் ஜஸ்டின் ட்றூடோவின் உத்தியோகபூர்வ இல்லம் அமைந்துள்ள சோலையின் பிரதான படலையைத் தன் வாகனத்தால் உடைத்துக்கொண்டு உள்ளே நுழைந்த ஆயுததாரி ஒருவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய கனடிய பிரதமர் 1
றீடோ ஹோல்

88 ஏக்கர் பரப்பளவுள்ள றீடோ ஹோல் எனப்படும் எஸ்டேட் ராஜகுலத்தவரும் அவர்களது பிரதானிகளும் தங்குவதற்காக வடிவமைக்கப்பட்ட சோலைகளின் மத்தியில் இருக்கிறது. கனடாவின் ஆளூனரும், மகாராணியின் பிரதிநிதியுமான ஜூலி பயட்டும் இந்த சோலையில் உள்ள இன்னுமொரு வாசஸ்தலத்தில் வசித்து வருகிறார்.

கனடியப் பிரதமர் ட்றூடோவின் உத்தியோகபூர்வ வாசஸ்தலம் இச் சோலையில் இல்லை. அவரது வாசஸ்தலம் 24 சசெக்ஸ் ட்றைவ் என்னும் விலாசத்தில் , இச் சோலைக்கு வெளிப்புறத்தே உள்ளது. அது தற்போது புனர்நிர்மாணம் செய்யப்பட்டு வருவதால், ட்றூடோ தன் குடும்பத்தினருடன் றீடோ ஹோல் சோலையில் அமைந்திருக்கும் றீடோ கொட்டேஜ் எனப்படும் 22 அறைகளைக் கொண்ட ஒரு சிறிய குடிசையில் தற்காலிகமாக வாழ்ந்து வருகிறார். றீடோ ஹோல் பொதுவாக மக்கள் பார்வைக்குத் திறந்து விடுவது வழக்கமெனினும், தற்போதைய கோவிட்-19 கெடுபிடிகளால் பூட்டப்பட்டு இருக்கிறது.வியாழனன்று நடைபெற்ற இச் சம்பவத்தின்போது ஒரு ஆயுததாரி தனது ‘பிக்கப் ட்றக்’ மூலம் மூடப்பட்ட பிரதான இரும்புப் படலையை உடைத்துக்கொண்டு உள்ளே சென்று கால்நடையாகப் போய்க்கொண்டிந்தபோது, 13 நிமிடங்களுக்குப் பின்னர் அவரைப் பொலிசார் கைது செய்ததாக செய்தியொன்று கூறுகிறது. அவர் பலவித ஆயுதங்களையும் தரித்திருந்ததால் அவரோடு பேரம் பேசித்தான் அவரைக் கைது செய்ய முடிந்தது என அதிகாரிகள் கூறியதாக இன்னுமொரு செய்தியும் கூறுகிறது.

ஆயுததாரி, கனடிய இராணுவத்தின் ஒரு பிரிவான கனேடியன் ரேஞ்ஞர்ஸ் இல் துணைப்டையைச் சேர்ந்த கோறி ஹறென் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவ்விராணுவப் பிரிவு கரையோரப் பிரதேசங்களிலும், கிராம, வனப்பிரதேசங்களிலும் பொதுவாகப் பணிகளியீடுபடும் பிரிவாகும். இந்த ஆயுததாரி மனிற்றோபா மாகாணத்தில் பணியில் ஈடுபட்டிருந்தபோது அதிகாரிகளுக்குத் தெரிவிக்காமல் ஏறத்தாள 2000 கி.மீ. தாண்டி ஒட்டாவாவுக்கு வந்திருக்கிறார்.

Corey Hurren, who drove through gates of Canadian PM official residence
 ஆயுததாரி கோறி ஹறென்

இரும்புப் படலையை இடித்ததும் வாகனம் இயக்கத்தை இழந்துவிட்டதால் துப்பாக்கி சகிதம் நடந்து போயிருக்கிறார். 100 மீட்டர்கள் தூரத்தில் போய்க்கொண்டிருந்தபோது அதிகாரிகள் அவரை அடையாளம் கண்டு அவரோடு ஒன்றரை மணித்தியாலத்துக்கு மேல் பேரம் பேசிய பின்னரே அவரைக் கைது செய்திருக்கிறார்கள்.

பிரதமர் குடும்பமும், ஆளுனரும் அப்போது அவரவர் இல்லங்களில் இருக்கவில்லை என்பதால் ஆபத்து எதுவும் இருக்கவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.

கோறி ஹறெந் மனிட்டோபா மாகாணத்தில் ஒரு சொசேஜ் தயாரிக்கும் தொழிலைச் செய்துவந்தார் எனவும் கோவிட்-19 காரணமாக அவரது தொழில் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டிருந்தது எனவும் அவர் தனது முகநூலில் பதிவுசெய்துள்ளார்.

Print Friendly, PDF & Email
Related:  இன்று முதல் பாவனைக்கு வருகிறது - ஒன்ராறியோ மாகாணத்தின் கோவிட்-19 தொற்றாளரைக் கண்டுபிடிக்கும் Covid Alert app!