Columnsசிவதாசன்

அண்ணாமலை அரசியல் – ஒரு பார்வை

சிவதாசன்

ஜூன் இறுதியில் லண்டன் வந்திருந்த இந்திய பா.ஜ.க. தமிழ்நாடு மாநிலத் தலைவர் அண்ணாமலை ஜூன் 28 அன்று பிரித்தானிய பிரபுக்கள் சபையில் பிரித்தானிய தமிழர் பேரவையினால் ஒழுங்கு செய்யப்பட்ட கூட்டமொன்றில் பேசியிருந்ததைக் கேட்டேன். அவரது ஒளியில் பி.த.பேரவை மிகவும் மங்கிப் போனது. இவ் விடயத்துக்குப் பின்னர் வருகிறேன்.

பா.ஜ.க. மீதான பற்று எனக்கு இல்லாமையால் அண்ணாமலையையையும் நான் அதிகம் பின்தொடர்வதில்லை. பா.ஜ.க. வின் சால்வை, வீபூதி போன்ற அடையாளங்கள் இந்தத் தடையை எனக்குப் போட்டிருந்தன. திராவிடர் அடையாளங்களினால் ஏற்பட்ட போதையாகவும் இருக்கலாம். நல்ல காலம் booster shot எடுக்காமையால் திராவிட போதை இறங்கி நீண்ட காலமாகிவிட்டது. சீமான் இடைக்கிடை தமிழ்ப் போதையைத் தூண்ட முயற்சித்தாலும் இப்போது அவரைப் பின்தொடர்வதையும் நான் நிறுத்திவிட்டதால் கொஞ்சம் தெளிவு பிறந்திருக்கிறது.

பிரபுக்கள் சபையில் அண்ணாமலையின் பேச்சைக் கேட்டபிறகு A Star is Born என்பதில் எனக்கு அசைக்க முடியாத நமபிக்கை ஏற்பட்டுவிட்டது. அது அவர் தமிழர் என்பதற்காகவல்ல. அறிவாற்றல், பேச்சாற்றலுள்ள ஒரு இந்திய அரசியல்வாதி என்பதற்காக. இவ்விடயத்தில் இந்தியா மட்டுமல்ல இலங்கையும் ஒரு வரண்ட பிரதேசம். தமிநாடு முன்னாள் அமைச்சர் PK தியாகராஜன் போல இவரும் அரசியலுக்குப் பெருமைசேர்ப்பவர். பேசும்விடயத்தில் ஆழம், கட்டுப்பாடு, தெளிவு, தொடர்ச்சி என இருவருமே அலுப்புத் தட்டாதவாறு பேசக்கூடியவர்கள். தன்னம்பிக்கையின் உச்சத்தைத்தண்டி வரும் திமிர் இவர்களிடம் இல்லை. அதிகம் பேசுபவர்கள் தமக்கு எல்லாம் தெரியும் என்பதை மற்றவர்களுக்குத் தெரியப்படுத்துவதற்காகவும் அதே வேளை தமக்காகவுமே பேசுவார்கள். குறைவாகப் பேசுபவர்கள் சபைக்குப் பேசுபவர்கள். அண்ணாமலையின் பேச்சு இரண்டாவது வகை. Crisp.

பேசும் குறிப்பு வைத்திருந்தாலும் அவர் எதையும் வாசித்து ஒப்புவிக்கவில்லை. இந்திய வரலாறு மட்டுமல்ல இலங்கையின் வரலாறு, சங்ககாலம்,சங்க இலக்கியம், நிகழ்கால அரசியல், சமீப புள்ளிவிபரங்கள் என அனைத்தையும் விரல் நுனியில் வைத்திருக்கிறார். தொனியில் மாற்றமில்லை. கூட்டங்களில் பேசுவதற்கு நம்மவர்கள் இவர் போன்றவர்களிடம் பாடம் கற்க வேண்டும் – சீமான் கூடவே. சில உணர்வளர்களுக்கு இது கோபத்தைத் தரலாம். சீமானும் நிறைய வாசிப்பவர், பல்வேறு விடயங்களைத் தெரிந்து வைத்திருப்பவர். ஆனால் அவரது தன்னம்பிக்கை அப்பப்போ உச்சத்தைத் தாண்டி திமிராக மாறிவிடுகிறது. அதனால் பெரும்பாலான தருணங்களில் அவர் தனக்காகவே பேசுகிறார். மற்றவர்களை ஏளனப்படுத்தி அதனால் கிடைக்கும் கைதட்டலுக்கும் சிரிப்புக்கும் ஏங்குபவர்போல சிலவேளைகளில் தெரிகிறது. அண்ணாமலை தான் எடுத்துக்கொண்ட பொருளைவிட்டு அகலவில்லை. அண்ணாமலை பற்றிய எனது அபிப்பிராயம் சரியா என்பதைப் பரிசோதிப்பதற்காக அவரது பேச்சு பற்றிய பல காணொளிகளைப் பார்த்தேன். அதன் பிறகுதான் நான் இம்முடிவுக்கு வந்தேன். அவரது லண்டன் வருகையின் நோக்கம், தாக்கம் பற்றி இனி நான் சொல்லப்போவதற்கு ஒரு பின்புலத்தை (perspective) தரலாமென்பதற்காகவே இந்த பில்டப்.

ஒரு ஈழத்தமிழராக இருக்கும்போது எனது தமிழ்நாடு / இந்தியா பற்றிய அணுகுமுறை சுயநலம் சார்ந்ததாக இருக்கும் என்பதை ஒப்புக்கொள்கிறேன். பரந்த சித்தாந்த ரீதியிலான அறம் சார்ந்த முடிவுகளைப் பாதிக்கப்பட்டவனிடம் எதிர்பார்க்க முடியாது என்பதை நம்புபவன் நான். எனவே எனது நிலைப்பாட்டிற்கு ஒரு முற்சாய்வு (bias) இருக்கிறது என்பதை ஒத்துக்க்கொள்கிறேன்.

முள்ளிவாய்க்கால் முடிவுக்குப் பின்னர் நம் மக்கள் நம் மண்ணிலேயே ஏதிலிகளாக்கப்பட்டுவிட்டார்கள். ஏதிலிகள் என்ற பெயரைத் திருடிக்கொண்டு தப்பியோடி அதனால் கிடைக்கக்கூடிய அனுகூலங்களையும் பெற்ற வகையினரில் நானும் ஒருவன். அம்மக்களுக்கு ஒரு விடிவைத் தேடித் தருவதில் அங்குள்ள அரசியல்வாதிகளைவிட புலம்பெயர்ந்த எங்களுக்குப் பெரியபங்குண்டு. அந்த வகையில் அண்ணாமலையை அழைத்து பிரித்தானிய பாராளுமன்றத்தில் பேசவைத்தது ஒரு சிறந்த விடயம். இதை ஒரு படங்காட்டல் (optics) என சில பண்டிதர்கள் ஒதுக்கிவிடலாம். அரசியல் சாணக்கியத்தில் படம்காட்டலும் ஒரு அங்கம் என்ற வகையில் இந்த அண்ணாமலை சந்திப்பு ஒரு முக்கியமானதொன்று.

தமிழ்நாட்டில் பா.ஜ.க.வுக்கு இரண்டு ஆசனங்களையாவது பெறுவதற்காகவே பிரதமர் மோடி இந்த ஆட்டம் ஆடுகிறார் எனச் சிலர் சொல்லலாம். இருக்கட்டுமே. இதர தமிழரசியல்வாதிகளைப் போல அண்ணாமலை சொற்களால் அலங்கரிக்கவில்லை. ஈழத்தமிழருக்கு நியாயமான தீர்வொன்றை இந்தியா பெற்றுத்தருமென அவர் சொல்லவில்லை. 13 ஆவது திருத்தத்தை முழுமையாக செயற்படுத்தவேண்டும் என்பதே மோடியின் நிலைப்பாடு என்கிறார். பேச ஆரம்பிக்கும்போது நேரத்தைப் பார்த்தவர் அலட்டல் புரட்டல் இல்லாது தனது கருத்துக்களை முன்வைத்தபின் பேச்சை நிறுத்திக்கொண்டு சபையோர் கேள்விகளை அனுமதித்தார். அப்போது சபையில் இருந்த ஈழத்தமிழரல்லாத ஒருவர் 13 ஆவது திருத்தம் என்றால் என்ன? அதை விளங்கப்படுத்தமுடியுமா? எனக் கேட்டார். அதற்கு இரத்தினச் சுருக்கமாக அவர் கொடுத்த பதில் ஈழத்தமிராகிய என்னையே கூசவைத்தது. பதில் முழுமையாக இருந்தது. இவரது பதில் முடிவடைந்ததும் அதற்குத் தான் மேலதிக விளக்கம் தருவதாக பிரித்தானிய தமிழர் பேரவை முக்கியஸ்தர் ரவி கொடுத்த விளக்கம் வாந்தி எடுத்தது போல இருந்தது. அல்லது கல் ரோட்டில் வண்டி ஓடுவது போல இருந்தது. நல்ல காலம் சபையில் ரணில் இருக்கவில்லை. முற்றிலும் தேவையற்ற நேரத்தைச் சூறையாடும் முயற்சி. சபையிலிருந்து ஒரு தமிழர் கேள்வி கேட்டார். “இலங்கையிலிருந்து வந்து முகாம்களில் வைக்கப்பட்டிருக்கும் அகதிகளுக்கு ஏதாவது செய்ய உங்களால் முடியுமா?” என்பதாக அக்கேள்வி இருந்தது. அதற்குப் பதிலளித்த அண்ணாமலை மலையகத் தமிழரது பிரஜாவுரிமை பறிக்கப்பட்டமையிலிருந்து தற்போது அகதிகளுக்கு சாரது ஓட்டுனர் பத்திரம் எடுத்துக்கொடுத்ததுவரை சொல்லிவிட்டு அடுத்து அவர்களுக்கு பிரஜாவுரிமை கொடுப்பதற்கான முயற்சியைத் தாங்கள் எடுத்துவருவதாகவும் கூறினார். இதுவரையான அவரது பேச்சில் “ஆட்சியிலில் இருக்கும் அல்லது இருந்த திராவிடக்கட்சிகள் எதையுமே செய்யவில்லை” என்ற அரசியல் பேச்சேதும் இருக்கவில்லை என்பதுவே இவர் ஒரு வித்தியாசியமான அரசியல்வாதியாக இருக்கப்போகிறார் எனக் கட்டியம் கூறியது.

அண்ணாமலையின் இந்தப் பேச்சு மட்டுமல்ல அவரது பெரும்பாலான பேச்சுக்களில் அவர் தனது ‘தமிழ்’ அடையாளத்தைவிட ‘இந்து ‘ அடையாளத்தையே முன்னணிப்படுத்துவதாகவே தெரிகிறது. ஈழ்த்தில் இந்துக்களின் தொகை அருகிவருவது பற்றியும், தமிழர்களின் கல்வியறிவு மிகவும் பின்தங்கிப் போனதால் எதிர்காலத்தில் ஈழத்தின் பொருளாதாரம் பாதிக்கப்படப் போகிறது என்றார். உலக அரங்கில் இந்தியா ஒரு பலமான வல்லரசாக வரவேண்டுமென்பதுவும் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் ஈழமும் இந்தியாவும் ஒரு தாயின் சிசுக்கள் என்ற மோடியின் கோட்பாட்டின்படி அதே உறவை மீண்டும் கட்டியெழுப்ப மோடி அரசு முனைகிறது என்றார். இந்தியர்கள் கொழும்பு சென்று அதிக செலவில் யாழ்ப்பாணம் வராது நேரடியாக யாழ்ப்பாணம் செல்ல பல வகையான போக்குவரத்துத் தொடர்புகளையும் மோடி அரசு விரைவில் ஸ்தாபிக்கும் என்றார். இதை அவர் உறவுப்பாலம் என விழிப்பது பிணைப்பின் உறுதியைக் காட்டுகிறது. 2009 இல் தமிழரழிவின் வலி கொடுமையானது எனவும் இந்தியா தலையிட்டு அழிவை நிறுத்தியிருக்கவேண்டும் என்பதை உறுதியாகவும் கூறுகிறார்.

எல்லாவற்றையும்விட “நான் என்ன சொல்கிறேன் என்பதில் கவனமாக இருக்கவேண்டும். நான் சொல்ல விரும்பியவற்றில் அரைவாசியைத்தான் சொல்லியிருக்கிறேன்” என அவர் பூடகமாகச் சொன்னது மிகவும் உன்னிப்பாகக் கவனிக்கப்படவேண்டிய ஒன்று. இதன்படி பார்த்தால் பலாலி விமான நிலையம் ஒரு ஆரம்பம் மட்டுமே. இன்னும் அதிகமாகவும் விரைவாகவும் நடைபெறலாம். அண்ணாமலையின் பேச்சை ஒரு அரசியல்வாதியின் பேச்சாகப் பார்க்கமுடியவில்லை. அது ஒரு அறிவுஜீவியிடமிருந்து வருவது. அவரது அபிலாட்சைகள் தமிழ்நாட்டுக்கு அப்பால் அகண்ட பாரதத்தை நோக்கி இருப்பதாகவே தெரிகிறது. வை.கோ. போன்றவர்களின் சுய இன்பப் பேச்சாக அது இருக்கவில்லை.

அண்ணாமலை மூலம் மோடி அரசுடன் உறவை ஏற்படுத்துவது அவசியமானதும் அவசரமானதுமான ஒரு மூலோபாய நகர்வு. திராவிடக் கட்சிகளைப் பகைக்கப் பயந்து கூட்டமைப்பு முதல் உலகத் தமிழர் பேரவை வரை அரசியல் சதுரங்கம் நடத்திவந்தார்கள். இந்திய தூதுவர் வரைதான் அவர்களது குரல் சென்றது. அந்த வகையில் பிரித்தானிய தமிழர் பேரவையின் இந்த முயற்சி ஒரு திசை திருப்பம். ஆனாலும் அவர்களும் திராவிட அரசியல் பள்ளிகளில் பாடம் கற்றவர்கள்தான். Petty politics இன்னும் அவர்களை விட்டு நகரவில்லை. பிரபுக்கள் சபையில் அண்ணாமலையை ஏற்றினோம் என்ற optics உடன் நின்றுவிடாது 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்நடத்த மோடி அரசை நிர்ப்பந்திக்கவேண்டும். மோடி அரசு செய்யாவிட்டால் வேறெவரும் அதைச் செய்யப் போவதில்லை.

ரநில் விக்கிரமசிங்கவின் லண்டன் பயணத்தின்போது தமிழர் குழுவொந்றை அவர் சந்தித்ததாகக் கேள்வி. கனடாவிலிருந்தும் சிலர் போயிருந்தார்களாம். அமைப்புக்களை ஈனுவதில் தமிழ்க் கனடா உலகில் முன்னணி வகிப்பது. எந்த அமைப்பு ரணிலைச் சந்தித்தது என்று தெரியாது. “அரைவாசிக்கு மேல் பேச்சுவார்த்தை முடிந்துவிட்டது” என ரணில் முன்னாள் கனடிய பிரதமர் ஸ்டீபன் ஹார்ப்பரிடம் கூறியிருந்தாராம். சரி ஏற்றுக்கொள்கிறோம் 13 ஆவதை முழுமையாகச் செயற்படுத்திய பின்னர் அந்த இரகசியத்தை நாம் தெரிந்துகொள்கிறோம்.

ரணிலின் மீது நம்பிக்கை இல்லை என்பதை உரத்துச் சொல்பவர்கள் மாற்றீடாகத் தம்மிடம் வேறெவரும் இல்லை என்பதையும் உரத்துச் சொல்ல வேண்டும். தமிழர் பிரச்சினையைத் தீர்ப்பது இலங்கையின் பொருளாதாரப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு ஒப்பானது என்பதை இந்தியா உட்பட உலகம் உரத்துச் சொல்லிவிட்டது. ரணில் பின்னணியில் அதற்குத் தயாராகுவதாகவே தெரிகிறது. 2002 இல் ஒரு சமாதானத் தீர்வை ஏறத்தாழ நிறைவேற்றியவர் அவர். அடுத்த ஜனாதிபதி தேர்தலில் அவரே மீண்டும் தெரிவாகுவார். எனவே அதுவரை 13 கிடப்பில் தான். அதன் பிறகு முழுமையான 13 வெளிச்சத்தைக்க்காண ஒரு வாய்ப்பிருக்கிறது. இலங்கையிலும் இந்தியாவிலும் நகர்வுகள் அப்படித்தான் இருக்கின்றன. யாழ்ப்பாணத்தில் ‘செல்வா அறக்கட்டளை’ ஏற்பாட்டில் ஒரு கலந்துரையாடல் ஒன்று நடக்கவிருக்கிறது. அதிசயமாக அதில் பிள்ளையான் கட்சி உட்பட அனைத்துக் கட்சிகளின் தலைவர்களும் சந்திக்கவுள்ளார்கள். யாரோ ஒருவரது பலமான கரங்கள் தள்ளிவிடாமல் இது சாத்தியமாகாது. ஒன்றுபடுவது தமிழர் பண்பு இல்லை. அந்தக் கரங்கள் யாருடையது?

அண்ணாமலையின் அரங்கேற்றம் ஒரு optical illusion ஆக இருக்கக்கூடாது என்பதுவே எனது விருப்பம்.