பிரியதர்சன்

அடையாளம் | பிரியதர்சன் பக்கங்கள்

பிரியதர்சன் பக்கங்கள் 8

நவரத்தினத்துக்கு எத்தனை வயதென்று யாருக்கும் தெரியாது. குத்துமதிப்பாக நாற்பதுக்கு  பிறகு வருகிற ஏதாவது ஒரு இலக்கமாக இருக்கலாம் என்பது ஊகம்.

நீக்கல் விழுந்த மஞ்சள் பற்கள் இரண்டு  கொஞ்சம் முன்னுக்கு தள்ளி இருக்கும். வேலை செய்து இறுகிப்போன மெல்லிய உடம்பு. பெரியவர்கள்  யாரேனும் பேசினால் வாரத்துக்கு ஒரு நாள் தண்ணீர் பார்க்கும்.  மற்றும்படி  தண்ணீரில் கண்டம். சாரமும் மேல்சட்டையும் இல்லாத நவரட்னம் என் சின்ன வயதில்  ஒவ்வொரு நாளும் குறைந்தபட்சம் ஐந்து தடவையாவது கண்ணுக்குப்படுவான்.

வன்னி கிராமமொன்றில் இருந்து வேலை தேடி எங்கள் ஊருக்கு வந்து சேர்ந்தவன். கொஞ்ச  காலத்தில் ஊரில் ஒரு ஆளாக மாறிப்போனான். அவனை யாரும் அன்னிய மனிதனாகப்  பார்ப்பது கிடையாது. இருப்பதற்கு இடமும் சாப்பாடும்  செல்லப்பாக்கியம் அக்கா வீட்டில் எப்போதும் இருந்தது. கால் போகிற போக்கில் ஊருக்குள் உலாவித் திரிவான்.  கேட்கிறவர்களுக்கு வேலை செய்து கொடுப்பான்.அடிக்கடி எங்கள் வீட்டுக்கு வருவதுண்டு. விறகு வெட்டுவான். தொட்டியில் தண்ணீர் நிரப்பிவிடுவான். தேங்காய் உரித்து போடுவான். வேலை முடிந்ததும் சாப்பாடு கொடுத்தால் சாப்பிடுவான். கொடுக்காமல் விட்டாலும் எந்த பிரச்சினையும் இல்லை. அது பற்றிய அக்கறை கிடையாது. இப்படி அவன் வேலை செய்கிற வீடுகள் ஊருக்குள் நிறைய இருந்தன.

சாப்பாடோ அல்லது வேறேதும் உதவியோ அவன் வாய்விட்டு கேட்டதை நான் கண்டதில்லை. மரம் தறிப்பதற்கும் கிடங்கு கிண்டுவதற்கும்  அவனை தேடுகிற மனிதர்கள் அக்கம்பக்கத்தில்  எப்போதும் இருந்தார்கள்.

அன்றைக்கு வெயில் வீசி எறிந்த பகல். விளையாடிவிட்டு வீட்டுக்கு வந்த எனக்கு யானைப்பசி. குசினிக்குள் ஒரு கை பார்த்தேன். எல்லாம் காலியானது. விறகு கொத்தி முடித்த நவரட்னத்துக்கு கொடுப்பதற்கு எதுவும் மிச்சியிருக்கவில்லை. பனங்கட்டியோடு தேனீர்  அம்மாவிடம் இருந்து  வந்தது . திண்ணையில் குந்தியிருந்து குடித்தான்.

வேலை செய்தவனை வெறும் கையோடு அனுப்ப அம்மாவுக்கு மனம் வரவில்லை. அறைக்குள் இருந்த தாள் காசொன்றை எடுத்து  அவனிடம் கொடுத்தார். எதையாவது கடையில் வாங்கி சாப்பிட சொன்னார். அவன் தலையை ஆட்டினான். காசு கவனம் என்று அம்மா இரண்டு தடவைகள் திரும்ப திரும்ப சொன்னார். இடுப்பில் தொங்கிய சாரத்தின் மடிப்பில் காசை வைத்து செருகினான். பிறகு வீட்டை விட்டு போனான்.அடுத்த நாள் மீண்டும் வீட்டுக்கு வந்தான். காசில் என்ன வாங்கினாய் என்று அம்மா கேட்டார். அப்போதுதான் இடுப்பில் இருந்த காசு ஞாபகத்துக்கு வந்திருக்க கூடும். இடுப்பு மடிப்பை பார்த்தான். அதற்குள் காசு இருக்கவில்லை. தலையை சொறிந்தான். அதற்கு பிறகு வந்த எந்த நாட்களிலும் அம்மா காசு கொடுப்பதில்லை. காசும்  வெற்று தாளாக தெரிகிற தேவைகள் குறுகிய  மனிதர்கள் மிக அபூர்வமாகவே  வாழ்ந்தார்கள்.

அமாவாசையிலும்  அதனை அண்டிய நாட்களிலிலும்  அவன்  வேறு ஆளாக மாறிப்போவான். தனியாக சிரிப்பான். சம்பந்தமில்லாமல் கதைப்பான். மரத்துடன் பேசுவான். இன்னும் யாருக்கும் விளங்காத என்னென்னவோ  செய்கைகள் எல்லாம் வந்து சேரும்.  சேட்டை செய்கிற இளைஞரை தவிர மற்றவர்கள் அந்த நாட்களில் விலத்தி இருப்பார்கள்.

சிவன் கோயில். அதற்கு முன்னால் இருக்கிற வாசிகசாலை. தாண்டினால் வருகிற தெருமுடி மடம் .கடந்தால் தெரிகிற  திக்கமுனை  மைதானம். அதற்கு பக்கத்தில் இருக்கிற நாச்சிமார் கோயில். அதை சுற்றி இருக்கிற பெரிய ஆலமரங்கள். மதவில் குந்தியிருந்து  வம்பளக்கிற இளைஞர்கள். தலையில் கடகமும் குறுக்காக கட்டிய சேலையோடும் ஓட்டமும் நடையுமாக சந்தைக்கு  போகிற பெண்கள்.
இப்படியாக நவரட்னமும் ஒரு காலத்தில் எங்கள் ஊரின் இன்னொரு அடையாளம்.காலங்கள் ஓடியது. மனிதர்கள்  ஆயுதங்களோடு  ஆடு புலி ஆட்டம் விளையாடினார்கள். அதிகாரங்கள் பல தடவைகள்  கைமாறியது. ஒவ்வொரு மாற்றத்திலும் யாரேனும் சிலருக்கு   கனத்த மனத்துடன்   ஊரை விட்டு போக நேர்ந்தது. இன்னும் சிலருக்கு வசதிகளையும் வாய்ப்புகளையும் தேடி எல்லாமாக இருந்த ஊரை கடக்கும்படியானது . எல்லா காலத்திலும் நவரட்னத்தால் இருக்க முடிந்தது.