Sri Lanka

அடுத்த 24 மணி நேரத்தில் ரணில் விக்கிரமசிங்க பதவி விலகலாம்?

நவம்பர் 18, 2019

பாராளுமன்றப் பொதுத் தேர்தல் ஒன்றை நடத்துவதற்கு சிறீலங்கா பொதுஜன பெரமுன எடுக்கும் முயற்சிகளுக்கு ஐக்கிய தேசிய முன்னணி அரசு ஆதரவளிக்குமென அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல இன்று தெரிவித்துள்ளார்.

“பாராளுமன்றத்தைக் கலைப்பதற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை தேவைப்படுகிறது. அதைக் கொடுத்து பாராளுமன்றத்தைக் கலைக்க நாங்கள் தீர்மானித்துள்ளோம்” என அவர் மேலும் தெரிவித்தார்.

ரணில் விக்கிரமசிங்க பதவி விலகினால் பொதுஜன பெரமுன புதிய அரசாங்கத்தை அமைத்திருக்கலாம் ஆனால் அதற்கு ரணில் மறுத்துவிட்டதாகத் தெரிகிறது. ரணிலைப் பதவி விலகும்படி அவருடைய கட்சி உறுப்பினர்கள் வலியுறுத்தியும் அவர் அதற்கு இணங்கவில்லை. மாறாகப் புதிய தேர்தல் ஒன்றுக்கு அவர் இணக்கம் தெரிவித்துள்ளார்.

நேற்று மாலை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இத் தீர்மானம் எடுக்கப்பட்டது.

பாராளுமன்றம் கலைக்கப்பட்டதும் ரணில் விக்கிரமசிங்க பதவி விலகுவார் எனவும் இது அடுத்த 24 மணித்தியாலங்களில் நடைபெறலாமெனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று நடைபெறவிருக்கும் ஜனாதிபதி பதவியேற்பு வைபவத்தில் பிரதமர் கலந்துகொள்வார் எனக் கூறப்படுகிறது.