News & AnalysisSri Lanka

அடுத்த வருடம் நாமல் ராஜபக்ச பிரதமராகிறார்! – மஹிந்தவுக்கு ஓய்வு அல்லது புதிய பதவி

அடுத்த வருடத்தில் (2022) மஹிந்த ராஜபக்ச தனது பதவியிலிருந்து விலகி அவரது மூத்த மகனான விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்சவைப் பிரதமராக்க ராஜபக்ச குடும்பம் தீர்மானித்துள்ளதாக உறுதிப்படுத்தாத செய்திகள் தெரிவிக்கின்றன.

சமீப காலமாக, மஹிந்த ராஜபக்சவின் உடல் நலம் சீரற்று இருப்பதாகவும், அவர் சிறுநீரகம் சம்பந்தபட்ட வியாதியால் பீடிக்கப்பட்டிருக்கலாமெனவும் சில அவதானிகள் சந்தேகமுற்றிருந்தனர். இதே வேளை, மஹிந்தவுக்குப் பிறகு பசில் ராஜபக்சவுக்கே பிரதமர் பதவி போகவேண்டுமென அரசாங்கத்தில் பலர் கருத்துத் தெரிவித்திருந்ததும் அதற்கு மஹிந்தவின் மனைவியார் ஷிராந்தி அவர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்திருந்ததுடன் தனது மகனுக்கே பிரதமர் பதவி வழங்கப்படவேண்டுமென அவர் அடம் பிடிப்பதாகவும் செய்திகள் கசிந்திருந்தன.

சில நாட்களுக்கு முன்னர் ராஜபக்ச குடும்பத்தினர் சந்தித்து நாமலுக்கு முடி சூட்டும் திட்டத்தை அங்கீகரித்ததாகவும், இதனாலேயே பசில் ராஜபக்ச எவருக்குமே சொல்லிக்கொள்ளாமல் அமெரிக்கா சென்றுவிட்டதாகவும் இப்போது தெரியவருகிறது.

நாமலிடம் பதவியைக் கொடுத்துவிட்டு மஹிந்த ராஜபக்ச ஓய்வெடுக்கலாம் அல்லது அவருக்கு இன்னுமொரு பலமான விசேடமான பதவி சிருஷ்டிக்கப்படலாம் எனப் பேசப்படுகிறது.

நாமல் ராஜபக்சவைப் பிரதமராக்கும் முயற்சிகள் பல ஏற்கெனெவே சிறிது சிறிதாக அரங்கேறி வருகின்றன. தற்போதுள்ள அமைச்சரவையில் அவரை ஒரு பலமான அமைச்சராக வெளிக்காட்டும் விதத்தில் அவருக்குப் பல மேலதிக பணிகள் கொடுக்கப்பட்டு வருகின்றன. ஜனாதிபதி கோதாபய ராஜபக்சவின் வாராந்த கிராமிய மக்கள் சந்திப்பின் பின்னர் மக்களது கேள்விகளுக்கு நாமலே பதிலளித்து வருகிறார். அரசாங்கக் கடமைகளுக்கு அப்பாலும், கோதாபயவுடன் மிக நெருக்காமான உறவைப் பேணிவரும் நாமல், ஜனாதிபதியின் நேரடிக் கண்காணிப்பின் கீழ் கடமையாற்ற அனுமதிக்கப்பட்டிருக்கிறார் என்பது ஜனாதிபதி சார்பில ஊடகங்களுக்கு அவர் பதிலளிப்பதன்மூலம் ஏற்கெனவே தெரியவந்துள்ளது. அத்தோடு பல மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்களின் செயற்பாடுகளை நிர்வகிப்பதன் மூலம், நாமலின் செயற்திறனை மெருகூட்டும் முயற்சிகள் ஏற்கெனவே நடைபெற்று வருகின்றன.

சீனாவுடனும் நாமல் ராஜபக்ச மிக நெருக்கமாகப் பணியாற்றி வருவதாகவும், இளைய தலைமுறையைச் சேர்ந்தவர் என்ற வகையில், நவீன தொழில்நுட்பம், கணனித் துறை ஆகியவற்றில் நாமல் செயற்திறன் மிக்கவராக இருப்பார் என்ற காரணத்தால், துறைமுக நகர நிர்வாகத்தில் நாமலின் ஈடுபாட்டை சீநா மிக விரும்பி வரவேற்கிறது என்றும் கூறப்படுகிறது. இதற்காகவே அவருக்கு டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் வியாபார அபிவிருத்திக்கான புதிய ராஜாங்க அமைச்சு கொடுக்கப்பட்டது எனவும் பேசப்படுகிறது. துறைமுக நகரம் செயற்பட ஆரம்பித்தத்தும் தற்போதுள்ள பொருளாதார சூழ்நிலையை வெற்றிகரமாகத் திருப்பி மக்களின் நல்விருப்பத்தையும் ஆதரவையும் மீண்டும் பெற்றுக்கொண்டதும் ராஜபக்சக்கள் மீதான களங்கத்தைத் துடைத்துவிடலாமென அவர்கள் நம்புவதாகக் கூறப்படுகிறது. தற்போதுள்ள அரசாங்கத்தில் நாமல் போன்ற தரத்தில் வேறு எவரும் இல்லையென்பதும் அவதானிக்கப்பட வேண்டிய ஒன்று.

சிறீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்கும், சீன கம்யூனிஸ்ட் கட்சிக்குமிடையேயான தொடர்பாடலைத் தற்போது நாமல் ராஜபக்சவே பார்த்து வருகிறார். இதனால் இரண்டு நாடுகளுக்குமிடையேயான புரிந்துணர்வு விடயங்களில் நாமல் மிகவும் மெச்சத்தனமாகச் செயற்பட்டு வருகிறார் என கட்சித் தலைவர்களும் அவரது செயற்திறன் குறித்து திருப்தியடைந்துள்ளதாகவும் தெரிய வருகிறது.

புதிய ராஜாங்க அமைச்சர் பதை கிடைத்ததும் இதர ச்கல ராஜாங்க அமைச்சர்களையும் கூட்டி அவர்களுக்குப் பல பணிப்புரைகளை வழங்கியமை, அவர் பிரதமராக நியமிக்கப்படக்கூடியதற்கான கட்டியமாக இருக்கலாமென யோசிக்க்த் தோன்றுகிறது.