Columnsகனடா மூர்த்தி

அடுத்த தெருவிழாவில் ‘பலாலி வந்த முதல் விமானம்’? – கெஞ்சாதே 07

கனடா மூர்த்தி
விமான நிலைய சம்பிரதாய திறப்பு விழாவில் ஜனாதிபதி, பிரதமர், இந்திய ஸ்தானிகர்

“CTCயின் ஒரு முக்கியபுள்ளி இந்தியா போயிட்டாராம்” என்றார் ஒருவர். ஏன் என்று கேட்டேன். “இந்தியாவிருந்து யாழ்ப்பாண விமானநிலையத்திற்கு போன முதல் பிளைட்டை அடுத்தமுறை தெருவிழாவிற்கு கொண்டுவந்து காட்சிக்கு வைக்கப்போகிறாராம்” என்றார் அவர் பதிலுக்கு. அடப்பாவிகளா. ரூம் போட்டு யோசிப்பீங்களா.. என வடிவேலு மாதிரி புலம்பிக்கொண்டேன். சொல்லமுடியாது. CTCயின் செயல்தலைவர் செய்தாலும் செய்வார். 🙂 

யாழ்ப்பாணத்திற்கு ஒரு விமான நிலையம் கிடைத்துவிட்டது. யாரும் எவரையும் கெஞ்சாமல் ஏதோ ஒரு சுழல் இந்த விமான நிலையத்தைக் கொண்டு வந்து யாழ்ப்பாணத்தில் வைத்துவிட்டுப் போயிருக்கிறது. மகிழ்ச்சி. 
ஆனால் ‘விமானம் வந்தது.. மானம் போனது’ என்பதுபோல நம்மவர்களில் ஒருசிலர் தமது முகப்புத்தகததைக் கிழிக்கிறார்கள், அதாவது ஏதாவது எழுதி எழுதிக் கிழிக்கிறார்கள். எதையாவது எதிர்த்துக் கொண்டே இருப்பதில் நம்மவர்களுக்கு ஒரு அலாதி சுகம்.

புதிய விமான நிலையத்தில் தரையிறங்கிய முதல் பயணிகள் விமானம்

இப்போதுதான் ஏதோ ஒரு புதிய கண்டுபிடிப்பை கண்டறிந்ததுபோல, இந்த விமான நிலையம் ‘இந்திய விஸ்தரிப்பு’ என்கிறார்கள். ஹூம்… நாங்கள் நேர்மறையாக  எதைத்தான் பார்க்கிறோம். அடங்குங்கடா.. இந்திய விஸ்தரிப்பானால்தான் என்ன.. இருக்கட்டுமே.. அமெரிக்க விஸ்தரிப்பு, சீன விஸ்தரிப்பு, இந்திய விஸ்தரிப்பு என ஏதோ ஒன்றின்கீழ்தான் இலங்கை வர முடியும். சிங்கள விஸ்தரிப்பின் கீழ் ஈழத்தமிழர் வருகிறார்கள்.   
“இந்திய விஸ்தரிப்பா.. ஓகே.. அதை ஏற்றுக் கொண்டு, அதன் மூலம் எப்படி நாம் நமது தனித்துவத்தை உறுதிப்படுத்துவது என்பதையல்லாவா இப்போது நாம் சிந்திக்க வேண்டும்.” என்றுதான் இப்போது தோன்றுகிறது. பொரிமாத்தோண்டிபோல இருந்ததையெல்லாம் நாம் போட்டு உடைத்துவிட்டு இபபோது புலம்பி என்ன பயன்?

இந்த விமான நிலையம் குறித்து ஒரே ஒரு பெரும் கவலை எனக்கு உண்டு. என்ன அது? இந்த விமான நிலையம் தன்னால் மட்டும்தான் யாழ்ப்பாணத்திற்கு வந்தது என்று எந்த ஒரு அரசியல்வாதியாலும்  மார்தட்டிச் சொல்ல முடியாதவாறு நிலைமை போய்விட்டது. ‘அதி உத்தமர்’ மைத்திரியும் சொல்லவில்லை.. ‘தியாகி’ ரணிலும் சொல்லவில்லை. மகிந்தா, கோத்தா. டக்ளஸ் பக்கேஜும் சொல்லவில்லை.. ‘தமிழரசு மூவரசு’களாம் சம்பந்தன் சுமந்திரன், மாவைக் கூட்டமைப்பும் சொல்லவில்லை. ‘மக்கள்திலகம்’ சிவாஜி-லிங்கமும் சொல்லவில்லை. அடச்சே… மோடி எடப்பாடி ஸ்டாலின் என்றுகூட யாருமே சொல்லவில்லை. இப்போது புரிகிறதா? முடிவுகளை அரசியல்வாதிகள் அல்ல கொள்கை வகுப்பாளர்களே எடுக்கிறார்கள் என்று…

இந்த எபிஸோடில் எனக்குப் பிடித்தது என்னவென்றால் புதிய விமான நிலையத்திற்கு மூன்று பெயர்கள் இருக்கின்றன. “ஜாப்னா” “யாழ்ப்பாணம்”, “யாபனய” என்று தனித்தனிப் பெயர்கள். உலகில் வேறெங்காவது ஒரு விமான நிலையத்திற்கு இப்படி பல பெயர்கள் இருக்கிறதா? எனக்குத் தெரியவில்லை.. நல்லவேளை.. சஹ்ரான் குறூப் இல்லை. இருந்திருந்தால் “பொம்மைவெளி” விமானநிலையம் என்று அரபியில் எழுதி வைக்கவேண்டும் என்று கிளம்பியிருப்பார்கள்.

சுறு சுறுப்பாகும் பயண முகவர்கள்

யாழ்ப்பாணம் விமான நிலையம் அமைவது குறித்த செய்தி முதலில், வந்த காலப்பகுதியில், இந்த விமான நிலையத்திற்கு ‘தந்தை செல்வா சர்வதேச விமான நிலையம்’ என்று பெயரை வைக்கவேண்டும் என்று ஒருவர் ஆர்வக்கோளாறால் சொன்னார். சென்னையில் ‘அண்ணா விமான நிலையம்’ இருப்பதால் இதை ‘தம்பி விமான நிலையம்’ என்று அழைக்கலாமே என்று நான் அவருக்கு  பரிந்துரைத்திருந்தேன். அவர் ‘தளபதி’ அமிரின் பக்தராகவும் இருந்ததால் என் பிரேரணை அவரைக் கவரவில்லை. ஆனால் யாழ்ப்பாணம் விமான நிலையத்தைப் பார்க்கும்போது பிரபாகரனின் நினைவு வராமல் இருக்க முடியாது என்பது மட்டும் உண்மை. தம்பிக்குப் பதிலாக விடுதலை உணர்வுடன் விமான நிலைய அனுபவமும் கொண்டிருந்த தம்பாப்பிள்ளை மகேஸ்வரனின் பெயரையாவது நான் பரிந்துரைத்திருக்கலாமோ தெரியவில்லை. அது ஒரு கனாக்காலம்.

1984ம் ஆண்டு. மொஸ்கோவிலிருந்து விடுமுறைக்காக கட்டுநாயக்காவில் வந்து இறங்கியிருந்தேன். அன்றுதான் ஈபிஆர்எல்எப், தாம் கடத்திய அலன் தம்பதியரைக் கொலை செய்யப்போவதாக கெடுவைத்து அறிவித்திருந்த கடைசித் தினம். அது ஒரு வெசாக் நாள். என்ன நடக்குமோ என இலங்கை முழுவதுமே நடுங்கிக் கொண்டிருந்தது. கொழும்பில் ஒரு கலவரம் மீண்டும் வரப்போகிறது என்ற குலை நடுக்கம் எல்லோருக்கும் இருந்த அந்த சமயம் பார்த்து கட்டுநாயக்காவில் வந்து இறங்கியிருக்கிறேன். (வெசாக் தினத்தன்று சிங்களக் காடையர் மச்சம் சாப்பிட மாட்டாங்கள் என்ற ஒரு நம்பிக்கைதான் பாஸ்..)

விமானநிலையத்தில் என்னை விசாரித்த குடிவரவு அதிகாரி ஒரு தமிழர். எனது பாஸ்போர்ட்டை செக் பண்ணியவாறு தனது தலை குனிந்திருக்க “இந்த நேரத்தில ஏனடா தம்பி வந்தனி?” என்று தணிந்த குரலில் அனுதாபத்துடன் முணுமுணுத்தார். “என்ன செய்ய ஸேர்.. எங்களுக்கெண்டு யாழ்ப்பாணத்தில ஒரு எயர்போர்ட் இருந்தா இஞ்ச வந்திருக்க மாட்டன்.” என்று நான் ஈழ பக்தியோடு சொல்ல… அந்த ஆபீஸர் வெலவெலத்துப் போனார். ‘டொக்’ என்று ஸீல் குத்திவிட்டு  பாஸ்போட்டை என்னிடம் வேகமாகத் தந்தார் – “இந்த இடத்தில எனக்கு முன்னுக்கு நிக்காத.. ஓடு” என்பதுபோல.

அப்போதெல்லாம் கட்டுநாயக்காவில் இறங்கி வெளியே வந்து கார், வான் பிடித்து ட்ராபிக்கை ரசித்துக் கொண்டே (வேறு வழி?) வெள்ளவத்தை வந்து சேரும் வரை அன்றைய நாளில் பாதி போய் வாழ்க்கை வெறுத்துவிடும். அதன்பின் யாழ்ப்பாணம் செல்ல பஸ், வான், ஆர்மி, புலி, செக்பொயின்ற் என இன்னும் ஒரு நாள் தேவை.. அது ஒரு nightmare  காலம்.
பிறகு, மகிந்தா புண்ணியத்தில் கட்டுநாயக்காவிற்கு ஒரு ஹைவே போட்டுவிட்டார்கள். ஒரளவு வேகமாக செல்லலாம்தான். ஆனாலும் வெள்ளவத்தைக்கு வந்து சேர குறைந்த பட்சம் இரண்டு, மூன்று மணித்தியாலமாவது தேவை என்றுதான் இன்னும் நிலைமை இருக்கிறது.

எதிர்காலத்தில் கட்டுநாயக்காவிலிருந்து ‘யாபனய’வுக்கு கனெக்டிங் ப்ளைட்ஸ் பறக்குமானால், கட்டுநாயக்கா-வெள்ளவத்தை பயண நேரத்தை விட அஃது குறைந்த நேரத்தில் எங்களை யாழ்ப்பாணத்தில் கொண்டு வந்து பறித்துவிட்டு திரும்பியும் போய்விடும்.. ஆகா…

யாழ்ப்பாணத்தில் இருந்து என் தம்பி திகில் கொண்டு அழைத்தான். “என்னடா?” என்றேன். அவன் மனைவியார் தனக்கு குறைந்த பட்சம் ஒரு வருட இந்திய விசா எடுத்துத் தருமாறு அடம் பிடிக்கிறாவாம். “எதுக்குடா?” என்று தனியே ஒரு கேள்வி கேட்கத்தான் வேண்டுமா?

இனி காஞ்சிபுரம் பட்டுச் சேலை வாங்குவதென்றால் காலையில் சென்னை போய் ராத்திரிக்கு திரும்பிவிடலாம். மதுரையிலிருந்து மல்லிகைப்பூ எடுப்பிக்கலாம். அவசர பிரார்த்தனைகளுக்கு கோயிலுக்கு போய் வரலாம். கேட்டரிங் சாப்பாடுகூட இந்தியால் இருந்து எடுத்துவிடலாம். இன்னாரன்ன பிற பல..

இவையெலாம் சும்மா வேடிக்கைக்கான கதைதான். உண்மையில் இனி அவசர தேவைகளுக்கு கொழும்பு செல்வதைவிட இந்தியா செல்லலாம் என்பது சிலரது எண்ணமாக இருக்கிறது. அவசரம் என்று நான் சொல்வது மருத்துவ தேவைகளை; புதுப்படம் பார்ப்பதை அல்ல.

ஒரு காலத்தில் – பாடசாலை நாட்களில் – வல்வெட்டித்துறையில் இருந்து கள்ளக்கடத்தில் படகுகளில் இந்தியா போய் ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படத்தை பார்த்துவிட்டு வந்த பேரி என்றழைக்கப்படும் வாத்யார் ரசிகரை நாம் பிரமிப்போடு பார்த்த நினைப்பு இருக்கிறது. இனி, எதிர்வரும் காலங்களில் ஏதாவது புதுப்படம் இலங்கையில் ரிஸீஸ் ஆகாமலிருக்குமாயிருந்தால் இந்த விமான நிலையத்தின் உபயத்தால் ஒரு சில இளவட்டங்கள் சென்னைத் தியேட்டர்களுக்கே ‘விஜய்’யம் செய்துவிட்டு வரக்கூடிய சாத்தியக்கூறுகளை இல்லை என்றுவிட முடியாது..
நாம் மட்டுமல்ல.. தமிழகத்தவரும், ஏனைய இந்தியர்களும் இனி அதிக அளவில் யாழ்ப்பாணம் வருவார்கள். ஆனால் யாழ்ப்பாணத்தில் சுற்றிப் பார்க்க என்ன இருக்கு.. ஒரு நல்லூர், ஒரு மந்திரிமனை, ஒரு கீரிமலை, யாழ்ப்பாண நூலகம்.. இதைவிட வேறு என்ன இருக்கு…?

இந்த விமானநிலையத்தால் இனி A9 தரைப்போக்குவரத்து அதிகரிக்கும். யாழ்ப்பாணம் வரும் பயணிகள் பிறகு கொழும்பு, கண்டி, நுவரேலியா என்றும் பயணித்து A9 பாதையை பரபரப்பூட்டுவார்கள். விமான நிலையத்தையொட்டி வர்த்தக முயற்சிகள் வலுப்பெறும். சிறப்பாக தமிழகத்துடன் தொடர்புகள் இன்னும் வலுப்பெறும். 

“சிங்களவனும், இந்தியனும் சேர்ந்து நமக்கு செய்து தந்திருக்கும் இந்த வசதியை ஈழத்தமிழரான நாம் நமது தனித்துவம் மேம்படுமாறு எப்படி வலுப்பெற வைக்கலாம் என்று யோசிக்க வேண்டாமா..” என்று நான் யோசிக்க, யாழ்ப்பாண விமான நிலையத்தில் Duty Free Shop இருக்குமா? என்ற உலக மகா கேள்வியோடு ஒருவர் வந்தார். போடாங்…

உலகின் பல விமான நிலையங்களுக்கு போன அனுபவத்தில் சொல்லுகிறேன்: அநேகமான நாடுகளில் ‘இமிகிரேஸன் ஒப்பிஸர்’ என்ற உயிரினங்கள் ஒரே வகையாகத்தான் நடந்துகொள்ளும். (சிங்கப்பூர் மட்டும் வேறு.. மிகவும் பண்பாக நடந்து கொள்வார்கள்). ஆனால் ‘உலகம்’ எங்களுக்குப் பிரச்சனை இல்லையன்றோ.. நம்ம யாழ்ப்பாணம் விமான நிலையத்தில் இமிகிரேஸன் சோதனைகள் எப்படி இருக்கும்? “நம மொக்கத?” என்று விசாரிப்பவன் சிங்களவன் என்றால் பத்துமுறை ஸேர் போடலாம்.. அல்லது அந்த அதிகாரியைப் பார்த்தது அசட்டுச் சிரிப்பு சிரிக்கலாம்.. ஆனால்…

எங்கட யாழ்ப்பாணத்தில ஒரு தமிழ் குடிவரவு அதிகாரி எங்களிடம் கடுமையாக நடந்தால் என்ன ஆகும் என்று  நினைக்கவே நடுங்குகிறது.. நம் புலம்பெயர் வீரத்தை இறக்கி வைக்க மாட்டோமா? “உவர் ஆர் என்னைக் கேள்வி கேக்க.” என்று பிரிச்சு மேய்ந்துவிட மாட்டோமா… ஐயகோ… பேசாமல் சிங்கள அதிகாரிகளையே யாழ்ப்பாண எயர்போர்ட்டில் வேலைக்குப் போடச் சொல்லாம்.. ஆனால் சிங்கள ஆக்கிரமிப்பு என்ற பெயர் வந்துவிடும். ‘கஸ்டம்ஸ்’டா..

நல்லவேளை.  “இனமானமுள்ள தமிழர்கள் யாழ்ப்பாணம் விமான நிலையத்தை பகிஸ்கரிக்க வேண்டும்” “யாழ்ப்பாணம் விமான நிலையத்தை தடை செய்கிறோம்” என்றெல்லாம்  இன்னும் யாரும் இங்கு கிளம்பவில்லை. அப்படிக் கிளம்பக்கூடியவர்களும் “எப்பவடா யாழ்ப்பாணம் ப்ளேனில போகலாம்” என்ற ஆசையை உள்ளூர தமக்குள் வைத்திருப்பதால் அந்த உள்ளத்தை உருக்கும் போராட்டக் காட்சியை காணும் பாக்கியம் நமக்கு கிட்டாமலே போய்விட்டது.

தொடரும்…